விசித்திரர்களின் புத்தகம்
ஸூஃபி நாவல்

நாவல்ஸூஃபித்துவம்மொழிபெயர்ப்பு

ஆசிரியர் : அயான் தல்லாஸ்

தமிழில் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 172 / விலை : ₹225

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

ISBN : 9788119667345

மூலம் : The Book of Strangers

1972ல் எழுதப்பட்ட இந்நாவல், பல்கலைக்கழக நூலகரான ஓர் இளைஞன், நூல் ஒன்றைத் தேடிச் சென்ற ஒருவரைத் தேடிச் செல்லும் கதையைக் கூறுகிறது. இந்தப் பயணத்தின் முடிவில் அவன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்: அந்த மனிதர்தான் அந்தப் புத்தகம்; அந்த மனிதர் அவனேதான். அறிவின் இயல்பு அப்படித்தான். அக விழிப்பை நோக்கிய பயணத்தில், ஹஷிஷ் கூடங்கள் முதல் புனிதப் பாலைவனங்கள் வரை அலைவதில், அவன் சில குருமார்களைச் சந்திக்கிறான். இறுதியில் தனக்கு ஆன்மிக வழிகாட்டும் ஒருவரை அடைகிறான். அவனுடைய இந்தப் பயணமும், ஆனந்தமும் எளிமையும் கொண்ட ஒரு வாழ்விற்கு வழிகாட்டும் நபர்களுடனான அவனின் சந்திப்புகளுமே ஆன்மிக அறிவு, அனுபவம் பற்றிய ஓர் உலகத்தை வாசகருக்கு விரித்து வைக்கிறது. மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கும் இக்கதை ஸூஃபித்துவம் குறித்த வசீகரமான அறிமுகமாகவும் உள்ளது. புதிய உலகங்களை அலசிக் காண்பதிலும், மனத்தின் புதிய அனுபவங்கள் மீதும் ஆர்வம் கொண்டோருக்கான நூல் இது.

***

அயான் தல்லாஸ் இஸ்லாமிய ஆன்மீகத்தின் ஆழம்வரை போயிருக்கிறார் என்பது நிச்சயம். அதன் பிரகாசமான, அனைத்தையும் ஏற்கின்ற, பிரபஞ்சம் பற்றிய இசைமையான பார்வையை இதில் ஊடுருவிக் கண்டுள்ளார். நமது தொழில்நுட்ப டாம்பீகம் மீது அவர் மிக நுட்பமான எதிர்வினை ஒன்றை முன்வைத்திருக்கிறார். அது நிராகரிக்கும் தொனியில் அல்லாது, நைச்சியமாக எடுத்துச்சொல்லி உணரவைப்பதாக இருக்கிறது. கடமையாற்றிடக் கட்டளையிடும் குரலில் அல்லாமல், பரவசப்படுத்தி ஈர்க்கும் ஓர் இறைக் காட்சியை இதில் நமக்குத் தந்திருக்கிறார். ஆன்மீக எழுத்தாளர்களிடம் மிக அரிதாகவே காணக்கிடைக்கும் விசயம் இது.

— ஆலன் வாட்ஸ்