ஒரு மனிதன் தனக்கு தேவையான “அறிவை” அடைந்து கொள்வதற்கு அவனது முதல் தேர்வாக, “புத்தகம்” தான் இருக்க வேண்டும் என்பது எனது பார்வை. சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், பேச்சுக்கள் என பல வழிகள் இருந்தாலும், ஒரு புத்தகத்தின் மூலம் மனிதன் பெறும் அறிவு என்பது நிலையானது. வாசித்து ஒரு அறிவை பெறுவதன் மூலம், அவனின் சிந்தனை, சமூகம் குறித்த பார்வை, இந்த பூமியில் தன்னுடைய வாழ்வியல் குறித்த நோக்கம் எல்லாம் சீராக தொடங்கும். இதற்கு என்னையே நான் ஒரு உதாரணமாக கூறுவேன்.
என் தந்தை திராவிட அரசியலில் அறிஞர் அண்ணா(பெரியாரிஸ்ட் அல்ல) ஆதரவாளராக இருந்ததால், சிறு வயது முதலே எனக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார். என்னுடைய 12வது வயதில், “அலிபாபவும் 40 திருடர்களும், பறக்கும் குதிரை, அக்பர், பீர்பால் கதைகள், நிலாவுக்கு போகலாம்” போன்ற சிறுகதைகளை வாசிக்க தொடங்கினேன்.
பின்னர் எனது 14வது வயதில் எனது வாசிப்புக்கான நூல்களை நானே தேர்ந்தெடுக்க தொடங்கினேன். “சில நேரங்களில் சில மனிதர்கள், சே - வாழ்க்கை வரலாறு, பெரியார் சிந்தனைகள் குறித்த நூல்கள், ஈழம் படுகொலைகள் சம்மந்தமான நூல்கள், திராவிட அரசியல் நூல்கள், வார இதழ்களில் வரும் கட்டுரைகள், தொடர்கதைகள், தினசரி நாளிதழ்களில் தலையங்கங்கள் என வாசிப்பின் தாகம் விரிவடைந்து கொண்டே சென்றது.
இதன் தொடர்ச்சியாக எனது 17வது வயதில், முதன் முதலாக, IFT-இன் “நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு” நூல் என் கைகளுக்கு வருகிறது. இந்த நூல் என் கைகளுக்கு வந்ததற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு காரணமாக இருந்தது. அதை முதல் கமண்டில் சொல்லியுள்ளேன்.
பின்னர் நான் இஸ்லாத்தை என்னுடைய வாழ்வியில் நெறியாக ஏற்றுக் கொண்டேன். அதன் பின் IFT, இலக்கியச்சோலை, வேர்கள், சாஜிதா புக் செண்டர், ஸலாமத், கிழக்கு பதிப்பகம், அடையாளம், நேஷனல் பப்ளிகேஷன்ஸ், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், PHAROS MEDIA, PENGUIN, BLOOMSBURY, நீலம், விகடன் மேலும் இன்னும் தனி நபர் வெளியீடு என ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில் வாசித்துள்ளேன். இன்னும் வாசிக்க 35க்கும் மேற்பட்ட தலைப்புகள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இவ்வளவு நீண்ட நெடிய வாசிப்பு அனுபவம் உள்ள, ஒரு பதிப்பகத்தில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்த எனக்கு, சீர்மை - நூல்வெளியும், அதன் புத்தகங்களும் இவைகளை விட்டு எப்படி தனித்து தெரிகிறது என்பதை இனி பார்ப்போம்.
நேர்த்தியான வடிவமைப்பு, ஒழுங்குமுறை
வாசிப்பு என்பது வெறும் அறிவை மூளைக்குள் போட்டு அடைக்கும் செயல் மட்டுமல்ல! அது ஒரு அனுபவம். அது வாசிப்பவனுக்கும், வாசிக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரரான நூலாசிரியருக்குமான சிந்தனை பிணைப்பை ஏற்படுத்தும், நூலாசிரியர் சொல்லும் கருத்துக்களை சீர்துக்கி பார்த்திடும் அனுபவங்களை அந்த நூல் உங்களுக்கு வழங்க வேண்டும். அந்த அனுபவங்களை சீர்மையின் நூல்கள், வாசகர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி கொண்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு, சீர்மை - நூல்வெளியில் நான் முதன் முதலில் வாசித்த நூல், ஃகிலாஃபத்தும், மன்னராட்சியும் - மௌதுதி(ரஹ்) அவர்களின் நூல். இந்த நூல், சர்ச்சைக்குரிய நூலாகவும், பொது சமூகத்தில் விவாதங்களை கிளப்பும் நூல் என்றும் ஒரு பொது புத்தி உள்ளது. ஆனால், சீர்மையின் நேர்த்தியான புத்தக வடிவமைப்பும், தமிழ் மொழிபெயர்ப்பு வாசிப்பு ஓட்டத்திற்கு ஏற்ப, FONT செலக்ஷனும், வாசிப்பவருக்கு, நூலாசிரியர் எந்த பார்வையின் இந்த நூலை எழுதினாரோ, அந்த பார்வையோடு சேர்ந்து பயணிக்கவும் உதவுகிறது. அட ஒரு புத்தகத்தின் வடிவமைப்பும், FONT-உம் இதையெல்லாம் தீர்மாணிக்குமா என்று கேட்டால், நிச்சயம் தீர்மாணிக்கும். அது வாசிப்பவரின் Subconscious - ஆழ் உணர்வுகளோடு தொடர்புடையது. (நீண்ட நெடிய வாசிப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு இது புரியும்.)
IFT-இன் 2010 முதல் 2015 வெளியீடுகளில், மற்றும் அடையாளம் பதிப்பகம் போன்ற சொற்பமான சில பதிப்பகங்கள் மட்டும் இதுபோன்ற நேர்த்தியையும், ஒழுங்கு முறையையும் கடைபடிப்பதை நான் பார்த்துள்ளேன். அதன் பின் இப்போது சீர்மை இவைகளையெல்லாம் மிஞ்சி நிற்கிறது நூல்களின் ஒழுங்குமுறையில்.
சீர்மை வெளியிட்டுள்ள தலைப்புகள்
அடுத்ததாக நாம் இங்கே சீர்மை நூல்களின் தலைப்பு தேர்வுகள் பற்றி பேசியே ஆகவேண்டும். ஆன்மீகம், அரசியல், வரலாறு, நாவல்கள், கதைகள், சாதி ஒழிப்பு, சினிமா, பெண்ணியம், மனோதத்துவம், சமூக நீதி, அடக்குமுறைக்கு எதிர் என சீர்மையின் ஐந்தாண்டு கால வெளியீடுகள் அனைத்தும் தமிழ் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தவை. முக்கிய தினசரி நாளிதழ்களின், வாசிப்பு தேர்வாக, சீர்மையின் நூல்களை நிறைய காண முடிந்தது. சமூக நீதியை கொள்கையாக கொண்ட ஆளும் அரசின் தலைவர் முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின் அவர்களின் கைகளில், இஸ்லாத்தை ஒரு சித்தாந்தமாகவும், குர்ஆனை அதன் அரசியலமைப்பாகக் கொண்ட ஒரு விரிவான வாழ்க்கை முறையாகவும் விவரிக்கின்ற ஷஹீது செய்யது குதூப்(ரஹ்) அவர்களின் “இஸ்லாத்தில் சமூக நீதி” நூலையெல்லாம் கண்ட காட்சிகள் சீர்மையால் சாத்தியப்பட்டுள்ளன.
சீர்மையின் நாவல் தலைப்புகளில், நான் “திருமுகம்” மட்டும் தான் வாசித்துள்ளேன். மனித மனதின் ஐயங்களையும், அதிலிருந்து பிறக்கும் நம்பிக்கைகளையும் மிக நுணுக்கமாகப் பேசும் நாவல் என்றாலும் எனக்கு இரண்டு முறை படித்தவுடனும், அந்த நாவலை ஏற்கனவே வாசித்த இரண்டு நண்பர்களோடு கலந்துரையாடிய பிறகு தான் புரிந்துகொள்ள முடிந்தது.
மற்ற நாவல்களை வாசிக்கவில்லை என்றாலும், நாவல்களின் தலைப்புகளை பார்க்கும் போது, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல், கதைகளினூடே, அரசியல், ஆன்மீகம், ஒடுக்குமுறை, சமூக விடுதலைகளை பேசும் தலைப்புகளாக சீர்மை தேர்ந்தெடுத்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
டி.எம்.உமர் ஃபாரூக் பற்றி, அ.மார்க்ஸ் எழுதிய, “ஓரு தலித் போராளியின் வாழ்வும், அவர் காட்டிய வழியும், நூலும் சீர்மையின் வாயிலாக செம்மையாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் தீண்டாமைக்கு எதிராக செயல்படுபவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் இது. குறிப்பாக, தீண்டாமைக்கு எதிரான புரட்சியாக, தீர்வாக, பவுத்தத்தை Romanticize செய்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இந்த நூல் அவசியமான ஒன்று. இன்னொரு பக்கம் Parallel-ஆக, ஆனந்த் டெல்டும்டேவின் நூல்களும் சீர்மையில் வெளிவந்தது வியப்பளித்தது. கொள்கை ரீதியாக சீர்மையின் தலைப்பு தேர்வுகளின் தெளிவான பார்வையை இது வெளிப்படுத்துகிறது.
சீர்மை நூல்களின் அட்டைப்படம்
சீர்மை குறித்த இந்த கட்டுரையை எழுதி கொண்டிருக்கும் நான், ஒரு டிசைனர், வீடியோ எடிட்டர். ஏறத்தாழ ஐம்பதற்கும் மேற்பட்ட நூல்கள், மற்றும் மாத இதழ்களுக்கு தொழில் முறையாக அட்டைப்படம் வடிவமைத்துள்ளேன். அந்த அனுபவத்தில் சீர்மை நூல்களின் அட்டைப்படங்கள் வடிவமைப்பு உலகத் தரம் வாய்ந்தது.
சீர்மையின் நூல்கள் வெளிவரத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அதன் அட்டைப்பட வடிவமைப்புகள் தமிழ் சமூகத்தின் பதிப்பகத்தார்களிடையே கவனத்தை ஈர்த்தது. சில பதிப்பகத்தார்கள்(பெயர் கூற விரும்பவில்லை) அவர்களின் புதிய தலைப்புகளுக்கு, சீர்மை நூல்களின் அட்டைப்படங்கள் போல் வடிவமைத்து தாருங்கள் என்று என்னிடம் வந்தவர்களும் உண்டு.
எனக்கு பெர்ஸனலாக சீர்மையின், முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர், தோழர்கள், மலை முகட்டில் ஒரு குடில், பூனைகளில்லா உலகம், அல்லாமா இக்பாலின் நாடோடி நினைவுகள், அன்றிருபத்தொன்றில், நடமாடும் சிறைச்சாலை, போன்ற நூல்களின் அட்டைப்பட வடிவமைப்பு எனக்கு விருப்பமானவை.
அப்ரம் “ஜின்களின் ஆசான்” என்ற நாவலின் அட்டைப்பட வடிவமைப்பு கிளாஸாக இருக்கும். அதைப் பார்த்து விட்டு இது ஏதோ, அமானுஸ்ய நாவல் போல என நினைத்து ஆர்வமாக நானும் எனது நண்பனும் வாங்கினோம். ஆனால், நாவலை வாசிக்கும் போதுதான் புரிஞ்சது, இது ஆன்மீக தத்துவ நூல் என்று. இப்படி அட்டைப்படத்தை பார்த்து, வேறு ஒரு எதிர்பார்ப்பில் நூலை வாங்கி ஏமாந்த அனுபவங்களும் சீர்மையின் நூல்களோடு எனக்குண்டு.
சில நூல்கள் சீர்மையின் வாயிலாக மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, “விடுதலைப் போரில் வீரமிகு ஆலிம்கள்”, பேரா.ஜவாஹிருல்லாஹ் எழுதியது. இந்த நூலின் அட்டைப்பட வடிவமைப்பு சீர்மையின் வழக்கமான பாணியில் இருந்தாலும், தலைப்பிற்கு பொருத்தமாக இல்லை என்றே எனக்கு தோன்றியது.
இந்த குழுவிற்கு இறையருள் பொழியட்டும்!
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الخَيْرَ
"நிச்சயமாக வானவர்களும், வானம் மற்றும் பூமியில் உள்ளவைகளும், ஏன் தன் புற்றுக்குள் இருக்கும் எறும்பும், கடலில் இருக்கும் மீன்களும் கூட மக்களுக்கு நன்மையைக் கற்றுக்கொடுப்பவருக்காகப் பிரார்த்தனை செய்கின்றன. அல்லாஹ்வும் அருள் புரிகிறான்." (நூல்: திர்மிதி - 2685)
இந்த டிஜிட்டல் உலகில், ஒரு பதிப்பகத்தை சீரோவிலிருந்து தொடங்கி ஐந்தாண்டுகளில், ஒரே ஸ்டாண்டர்டில், சீராக 175 தலைப்புகளில் நூல்களை வெளியிடுவது என்பது சாதாரண விடயமில்லை. சீரான நிர்வாகம், கலந்துரையாடலின் அடிப்படையில் முடிவுகள் என இந்த குழுவின் கூட்டு முயற்சியின் வெற்றி இது. இந்த குழுவிற்கு எல்லாம் வல்ல இறைவன் இறையருள் பொழியட்டும்.
ரமலான் வாசிப்புக்காக, திருக்குர்ஆனின் நிழலில் ஆறு தொகுதிகள் வாங்கியுள்ளேன். செய்யது குதூப்(றஹ்) அவர்களின் விளக்கவுரையோடு இந்த ரமலானில் பயணித்து கொண்டிருக்கிறேன். ரமலானை அடுத்து மீனாட்சிபுரம் குறித்த ஆவணப்படத்திற்காக திட்டமிட்டுள்ளோம். அதற்கான வாசிப்பு திட்டமாக, சீர்மையின் மீனாட்சிபுரம் பெரும்திரல் மதமாற்றம் நூல் உள்ளது.
சீர்மையின் நூல்களின் மீது நீங்கள் காதல் வயப்படுவது மட்டுமில்லை! அந்த நூல்கள் உங்கள் கைகளில் வந்தவுடன், அமைதியையும், வாசித்து முடித்தவுடன் ஒரு விதமான மனதிருப்தியையும் உணருவீர்கள்.
அஸ்ஸலாம்….!
I observed three distinct characters in Seermai, all of which are essential prerequisites for success:
1. Broad base: publishing books on subjects of diverse nature proves its ideological neutrality and desire to embrace all segments of the Muslim society and beyond. It also proves farsightedness of those behind Seermai's wheels
2. Courage and the willingness to take calculated risk: publishing 175 titles in the span of 5 years from one place amidst the tough challenges of declining reading habit is the only proof for this
3. Maintaining the momentum alive through production quality and frequent public engagement. I have seen this through your social media presence and professionalism in the products.
But the single most challenge is to navigate through the powerful A I storms, which you must sit and reflect on.
May Allah Almighty bless your endeavour
இஸ்லாமிய பதிப்பகங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. கண்ணுக்கெட்டிய தொலைவில் பார்த்தால் கூட மத ரீதியிலான நூல்களைப் பதிப்பித்த யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட், தாருல் ஸலாம் போன்ற பதிப்பகங்களும் செறிவான இலக்கிய - அரசியல் நூல்களைக் கொண்டுவந்த மணிச்சுடர், முயற்சி, அடையாளம் போன்றவை எனப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
இப்பதிப்பகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு சீர்மை பதிப்பகத்திற்கு உண்டு. மார்க்கம் - இலக்கியம் - அரசியல் என எல்லா தளத்திலும் சிறந்த நூல்களை வெளியிடும் இஸ்லாமிய பதிப்பகம் என்பதே அது. நாங்களும் களத்தில் இறங்குகிறோம் என்ற தன்மையில் அல்லாமல், முறையான கட்டமைப்போடும், தீர்க்கமான திட்டங்களோடும், தகுந்த அரசியல் பார்வையோடும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளடக்கம், செம்மையாக்கம், எழுத்துரு, வடிவமைப்பு என அனைத்திலும் மிகுந்த கவனமாகவும் தனித்துவமாகவும் செயற்படுகிறார்கள்.
இஸ்லாம்தான் மைய நோக்கம் என்றாலும் அதோடு மட்டும் சுருக்கிக்கொள்ளாமல் 'சமூகத்தில் ஒடுக்கப்படுகிற' என்கிற பொருண்மையில் பெரியாரியம் - அம்பேத்கரியம் பேசுகிற நூல்களையும் பதிப்பிப்பது 'சீர்மை'யின் மிக முக்கியமான அரசியல் பணி.
ஐந்து ஆண்டுகள் என்ற சிறு காலகட்டத்திற்குள் இவர்கள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது. மார்க்கம் என்ற அளவில் பார்த்தால், வஹாபியம் - சூஃபிசம் என்ற முரண்களைக் கடந்து இரு தரப்பு நூல்களையும் வெளியிடுவது ஒரு சவால் என்றால், சமூகம் என்ற அளவில் அரசியல் - சமூக ஜனநாயகத்தைக் கோரும் நூல்களை வெளியிடுவது அதனினும் பெரிய சவால். போகும் தூரம் நீண்டது என்றாலும் கடந்து வந்த பாதையை ஆழ உழுதிருப்பது பாராட்டுக்குரியது.
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சீர்மை பதிப்பகம் சார்ந்து எனக்கிருக்கும் எதிர்பார்ப்புகள் சில...
1. பழந்தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களைத் தகுந்த உரையோடு பதிப்பிக்க வேண்டும்.
2. சீறாப்புராணம் - காப்பிய காலகட்டத்தைக் கடந்து வெளியான ஒரு காப்பியம். இதையும் பொழிப்புரை, பதவுரை என செம்பதிப்பாக கொண்டுவர வேண்டும்.
3. இஸ்லாமிய இதழ்களின் பெருவரலாறைப் பதிவு செய்யும் நூலை / நூல்களை வெளியிட வேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உட்பட பலர் 'சமநிலைச் சமுதாயம்' என்ற இதழைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இலக்கிய ரீதியாக அவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் போலும். அவர்கள் காலத்தில் அது... எங்கள் காலத்தில் சீர்மை. வாழ்த்துகள். நீங்கள் மென்மேலும் சிறப்புற எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
எழுத்துத்துறை உயிர்வாழ்வதே அரிது. அதிலும் எழுத்தினை பதிப்பிக்கும் துறையானது, ஐந்தாண்டுகள் எவ்வித பெருந்துணையுடன் வாழ்வது அரிதினும் அரிது.
அவ்வகையில் "சீர்மை" பதிப்பகம் தற்போது ஐந்தாண்டுகளை முட்டி வேர்கொண்டு விருட்சமாய், கனிவிழும் நிலையில் வளர்ந்து நிற்பதை, கல்லடிக்குள்ளாகாதா? என சிலருக்கு எண்ணம் உள்ளதை பார்க்கமுடிகின்றது.
இவ்வெண்ணம் தவறேதும் இல்லை, தவறென நினைத்தால் இன்னும் வேரை ஆழமாக பாய்ச்சிடும் பணியினை நிர்வாகத்தார் செய்திடுவதே தரம்.
இஸ்லாம் குறித்து பல்வேறு அவதூறுகள் துவங்கி, இஸ்லாத்தின் சாரளத்தினை இன்னும் விளங்கிக்கொள்ள துளிர்படாத நிலை என பல்வேறு களம் இருக்க, அதனையும் "சீர்மை" கையிலெடுக்கின்றது.
ஐனநாயக சக்தியை மட்டப்படுத்தி, சட்ட மாண்புகளை பறிக்கும் பாசிசத்திற்கெதிரான எழுத்துருவிப் போராட்டத்தையும் "சீர்மை" நடத்துகின்றது.
அறிவியல், மானுடவியல், தத்துவம், வரலாறு, பெண்ணியம், பின்நவீனத்துவம், காலணியாதிக்கம், ஏகாதிபத்தியம், இலக்கியம், சீர்மரபு, புனைவு, அபுனைவு, மீட்டுருவாக்கம் என எழுத்தின் அனைத்து பரிணாமங்களையும் தனது நூல்களின் வாயிலாக இந்த ஐந்தாண்டுகள் சரியாக திட்டமிட்டு "சீர்மை" சீர்படுத்திட அரும்பாடுபட்டிருக்கின்றது.
ஒரு நிறுவனம் இயங்குவது முக்கியமன்று! தொடர்ந்து இயங்குவதுதான் முக்கியம். அவ்வகையில் "சீர்மை" கண்காட்சியிலும் பொதுமக்கள் பார்வைக்குள்ளும் தங்களை சொடுக்கிக்கொள்ள சிறப்பாக இயங்குகின்றது.
புத்தகங்களின் வடிவமைப்பில் துவங்கி, அதனை தேவைக்கேற்ப சூடுபடுத்தி, அரங்கத்தில் காட்சிப்படுத்தும் நிலை வரை வடிவமைப்பாளர்களின் உழைப்பும் மறுக்கவியலாத ஒன்று.
அந்தவகையில் சீர்மையின் அடி முதல் நுனி வரை சீராக நின்று பணியாற்றும், இல்லை! இல்லை!! உளப்பூர்வமாக களமாற்றும் அனைத்து பங்காளர்களுக்கும் வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.
''ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?'' என்பார்கள். "சீர்மையாளர்களே!" ஐந்தில் சிறப்பாக நின்றிருக்கிறீர்கள், ஐம்பதிலும் சீரும் சிறப்பாக நிற்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
உவைஸ் அவர்களை நான் பாரதிக்கு வேலைக்கு வந்த நாள் முதல் அறிவேன். நான் பாரதிக்கு வந்தது 2005இல். அவ்வமயம் மெல்லினம் பதிப்பகத்தின் நூல்களுக்கான விநியோகஸ்தராக இருந்தார் என்று நினைக்கிறேன்.
மெல்லினம் பதிப்பகதின் நூல்கள் யாவும் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான நூல்கள் என்ற என்னுடைய புரிதலின் வழி அந்த புத்தகங்களை பாரதியில் விற்பனைக்கு வைத்தோம்.
அந்த உவைஸ் தான் இன்று சீர்மை என்றொரு பதிப்பகத்தை உருவாக்கி முஸ்லீம்களை அரசியல் மயப் படுத்தும் நூல்களையும் முஸ்லீம் இஸ்லாமிய சித்தர் (சூபி) மரபு நூல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
நான் அனைத்து அடிப்படைவாதங்களுக்கும் எதிரானவன் என்ற வகையில் சீர்மை பதிப்பகம் ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.
சீர்மை பதிப்பகம் பதிப்புத் துறையில் ஐந்தாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போடுவதைச் செவியுற்றபோது உண்மையிலேயே அகமகிழ்ந்தேன்.
சீர்மை பதிப்பகத்தின் வெளியீடுகள் குறித்து எனக்கு அறிமுகம் ஆனது எமது ஜமால் முஹம்மது கல்லூரியில் பணியாற்றும் சகோதரப் பேராசிரியர் முனைவர் தவ்ஃபீக் ரமீஸ் எனும் ரமீஸ் பிலாலி அவர்கள் மூலம்தான்.
ஏறத்தாழ நான்காண்டுகளுக்கு முன் அவர்கள் எழுதிய சில நூல்களைக் காண வாய்ப்பு கிட்டியது. அவற்றுள் பெரும்பாலானவை சீர்மை பதிப்பகத்தின் மூலமே வெளியிடப்பட்டிருந்தது.
ஆங்கிலத்தில் ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரெஷன்’ எனும் சொலவடை ஒன்றுண்டு. அதை மெய்ப்பித்தது அந்த நூல்கள். அவற்றின் அச்சு வடிவமும், நேர்த்தியும் அனைத்திற்கும் மேலாக உள்ளடக்கமும் அப்பதிப்பகத்தின் மீது ஒரு சிறந்த அபிப்பிராயத்தை உண்டாக்கியது.
ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கி விடாமல் மொழியியல், இலக்கியம், வரலாறு, மார்க்கம், சமூக அறிவியல், அரசியல் என அனைத்துத் துறைகள் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட சிந்தனையைத் தூண்டும், விமர்சனங்களை வரவேற்கும், ஆழமான பகுப்பாய்வு நூல்கள், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட அரிதான நூல்கள் என வெளியீடுகளின் பட்டியலைப் பார்த்தே மலைத்துப் போனேன்.
குறிப்பாக, அரபி, பாரசீகம் என இதுவரை பெரும்பாலான பதிப்பகத்தார்கள் முயற்சிக்காத மொழிகளிலிருந்து நாவல்கள், கதைகள் உள்ளிட்ட ஆக்கங்களைப் பார்த்த போது வியப்பாக இருந்தது.
சீர்மையின் இணையதளப் பக்கத்தை பார்வையிட்ட போது, ‘எங்கள் புத்தகங்கள் மீது நீங்கள் காதல் வயப்படுவது உறுதி’ என்று ஒரு டேக்லைன் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து, நூல்களின் வரிசையைப் பார்த்தபோது காதலிக்காமல் தப்ப முடியாது என்பது தெளிவானது.
ஆகவேதான், அரபியிலிருந்து நான் மொழிபெயர்த்த நாவலை சீர்மை மூலம் வெளியிடலாம் என்று எண்ணினேன். ஆனாலும், சற்று தயக்கமாக இருந்தது. சகோதரர் ரமீஸ் அவர்கள் மூலம் சகோதரர் உவைஸ் அவர்களை முதன்முதலாகத் தொடர்பு கொண்டு பேசியபோது அவரின் எண்ணவோட்டமும், வரிவான சிந்தனையும், பரந்த வாசிப்பும் வெள்ளிடை மலை போல தெளிவாகத் தெரிந்தது.
என்னுடைய மொழிபெயர்ப்பை மேம்படுத்த உதவியது மட்டுமன்றி, தமது பதிப்பகத்தின் மூலமே அதை வெளியிடவும் செய்தார். அதன் மூலம் என்னைப் பற்றி எனக்கே அவர் அறிமுகம் செய்தார் என்றால் அது மிகையில்லை. இந்த நன்னேரத்தில், அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பிரார்த்தனைகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அச்சுத்துறை ஒரு நச்சுத்துறை என்று சில பதிப்பகத்தார் சொல்லி நான் கேட்டதுண்டு. இன்றைய டிஜிடல் யுகத்தில், புத்தக வாசிப்பு என்பது குறைந்து விட்டது என்று பல எழுத்தாளர்களே அங்கலாய்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில், ஐந்து வருடங்கள் வெற்றிகரமாக ஓரிரண்டு நூல்கள் அல்ல நூற்றுக்கணக்கான தரமான நூல்களை வெளியிடுவது என்று ஒரு சாதாரண நிகழ்வல்ல. ஒரு மகத்தான சாதனை.
இந்த ஐந்தோடு நில்லாமல் பல்லாயிரமாண்டு சீர்மையின் இந்த சீரியப் பணி தொடர வேண்டும் என்று ஏக இறைவனை இறைஞ்சுகிறேன்.
சீர்மையுடனான எனது நட்பும் தொடர்பும், அன்பு தோழர் உவைஸ் அவர்களுடனான உறவிலிருந்து தொடங்குகிறது. அவருடனான நட்புக்குக் காரணமானவர் தோழர் காமராசன் அவர்கள் ஆவார். முதன்முதலில் உவைஸ் அவர்களை சந்திக்க அவரது இல்லத்துக்கு நானும் காமராசன் அவர்களும் சென்றிருந்தோம். அந்தச் சந்திப்பில், மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் இஸ்லாத்தை தழுவியதைப் பற்றிய “Conversion to Islam” நூலை மொழிப்பெயர்க்க என்னிடம் வழங்கினார். அதன் பிறகு, அவருடனான நட்பு மிகவும் ஆழமானது.
முதன்முதலில் சீர்மை பதிப்பகம் வெளியிட்ட நூல்களை கண்ட போது இது மற்றொரு இஸ்லாமீய இறையியல் நூல்களை வெளியிடுகின்ற பதிப்பகம் என்றே கருதினேன். ஆனால், போகப்போக சீர்மை அவ்வாறு இல்லை என்று புரிந்துகொண்டேன். தோழர் உவைஸ் அவர்கள் இஸ்லாமில் ஆழ்ந்த ஞானம் உடையவர். அந்த ஞானம் காரணமாக அவர் எப்போது சொல்வார், சீர்மையில் அனைவருக்கும் ஏதாவது ஒரு இடம் இருக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்க கூடிய சிந்தனையாளர் அவர். அதனை நம்மால் சீர்மையின் வெளியீட்டில் காண முடியும். அதாவது இஸ்லாத்தில் ஆழமாக நின்று தமிழ் சமூகம் அனைத்துக்கும் பயன்படக்கூடிய நூல்களை வெளியிடுகின்ற மற்றொரு தமிழ்ப் பதிப்பகத்தைக் காண முடியாது என்றே கருதுகிறேன். எனவே, தமிழ்ப் பதிப்புலகில் சீர்மைக்கு நிகர் சீர்மை மட்டுமே. சீர்மைக்கு முன்னோடி சீர்மைதான்.
சீர்மையின் நலம் விரும்பி என்பதன் அடிப்படையில் நான் தோழர் உவைஸ் அவர்களிடம் அடிக்கடி கூறுவதை மீண்டும் இங்கே கூறவிரும்புகிறேன். அதாவது, தமிழ்ப் பதிப்புலகில் சீர்மை செய்திருக்கும் முக்கியமான ஒரு பங்களிப்பாக நான் கருதுவது அறபு மொழி இலக்கியங்களை நேரடியாக தமிழுக்கு மொழிப்பெயர்த்துக் கொண்டுவருவதாகும். இதனை நாம் மேலும் அதிகமாக செய்ய வேண்டும். இதன் வழியாக சமகால அறபு உலகத்தை தமிழுக்கு திறக்க முடியும். அதே போல் தமிழிலிருந்தும் அறபுக்கு இலக்கியங்களை மொழிப்பெயர்க்க வேண்டும். இது தவிர பாரசீக மொழியிலிருந்தும் தமிழுக்கு இலக்கியங்கள் கூடுதலாக வர வேண்டும். இதன் வழியாக ஈரான் உலகை தமிழுக்கு அறிமுகம் செய்ய முடியும். பாரசீக மொழி அறிந்தவர்களை கண்டுப்பிடிப்பது மிகவும் அறிதாக இருப்பதாக அவர் கூறினார். வெகுவிரைவில் சீர்மை அறபு, ஈரானிய இலக்கியத்துக்கான மையமாக மாற வேண்டும் என்பதே எனது ஆசை. சீர்மை மென்மேலும் வளரும் வளர வேண்டும்.
“சீர்மைக்கு இது ஐந்தாவது வருடம்” என்றார் உவைஸ். மிக சந்தோஷமாக இருந்தது. பேசப்படாத கதைகளையும், களங்களையும் தொடர்ந்து பேசும் ஒரு பதிப்பகம், அந்த ஒரு காரணத்திற்காகவே இன்னும் தழைத்து செழிக்க வேண்டும். இன்றைய மிகச் சவாலான அரசியல் சூழலில் பலரும் பேச, எழுத தயங்கும் விஷயங்களை எந்தவித சமரசமும் இல்லாமல் ஆவணப்படுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்காகவே உவைஸ், ராம் மற்றும் சீர்மை குழுவினருக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
“எழுத்தாளர்” என்ற விகுதிக்கு தகுதியானவளாக இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதன் முதற்படியில் என்னை நிறுத்திய பதிப்பகம். உவைஸை எனக்கு அறிமுகப்படுத்திய நூலாசிரியர் சுசித்ரா, “என்னோட இங்க்லீஷ் புக் போடறதுக்கே பெரிய பெரிய publishing house லாம் நிறைய யோசிச்சாங்க. நிறைய பேர் நிறைய இடங்கள்ல edit பண்ண சொன்னாங்க. நான் முடியாதுன்னு திரும்பி வந்துட்டேன். தானா முன்வந்து “இந்த புத்தகத்தை தமிழ்ல நான் பதிப்பிக்க நினைக்கிறேன்” ன்னு தைரியமா கேட்ட ஒரே ஆள் உவைஸ்தான். அவர்தான் இதை தமிழ்ல கொண்டுவரனும்” என்றார். உண்மையில் அந்த ஒரு காரணத்திற்காகவே அந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஏனெனில், அதுவரை “Midnights Borders” புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பதிப்பிக்க எந்த பதிப்பகமும் முன்வரவில்லை. புத்தகம் பேசும் பொருள் குறித்த ஆவலோடு புத்தகத்தை படித்துப் பார்த்தவர்கள், நிறைய சிலாகிப்போடும், அதைவிட நிறைய பயத்தோடும் புத்தகத்தை திருப்பித் தந்தார்கள்.
உவைஸ் முன்வந்தார். அந்நூலை பதிப்பிக்க மட்டுமல்ல, முழுக்க கதைப்புத்தகமாகவும் இல்லாமல், வெறும் வரலாற்று ஆவணமாகவும் இல்லாமல், நிகழ்கால அரசியலின் விமர்சனமாகவும் இல்லாமல் எல்லாமும் கலந்து படைக்கப்பட்ட சவாலான அந்தப் படைப்பை தமிழ்ப்படுத்தும் பொறுப்பை என்னைப்போன்ற அறிமுக எழுத்தாளரிடம் கொடுப்பதற்கும் அதைவிட மிகுந்த மனதைரியம் வேண்டும். முழு நம்பிக்கையுடன் என்னிடம் அந்தப் பொறுப்பை பகிர்ந்தார் உவைஸ்.
இரு வருடங்களில் உவைஸ் ஒருமுறை கூட அவசரப்படுத்தியதோ, அறிமுக எழுத்தாளர் என்று அதிகாரம் செய்ததோ, குறித்த காலக்கெடுவை தாண்டி போனபோது கோபித்துக்கொண்டதோ இல்லை. மிகப் பொறுமையாக இதிலுள்ள நடைமுறைகள், நெளிவு, சுளிவுகளை சொல்லிக்கொடுத்து, தட்டிக்கொடுத்து, நெடுநாள் பழகிய ஒரு நண்பரைப்போலவே உடன் பயணித்து, எந்தவித குறுக்கீடும் இல்லாமல் காட்டிய பொறுமையைம், நிதானமும் எனக்கு கொடுத்த ஆசுவாசத்தையும், நம்பிக்கையையும் சொல்லிப் புரிய வைப்பது கடினம். நன்றி உவைஸ்.
பதிப்பகம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறன்று திரைப்பட திரையிடலும் அது குறித்த குழு விவாதமும் நடத்துகிறார்கள் சீர்மை நண்பர்கள். திருவல்லிக்கேணியின் நெரிசல் மிகுந்த சந்து ஒன்றின் 10*20 அறையில் நடைபெறும் இந்நிகழ்வுகளும், அதையொட்டிய விவாதங்களும், அதில் பங்குபெறும் இளைய தலைமுறையினரும் இந்த சமூக ஊடக யுகத்தின் மகிழ்முரண். ஒரு முறையேனும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற என் ஆசை இன்னமும் நிறைவேறவில்லை. காலம் கனியட்டும். அதற்குள், அந்நண்பர்களின் மனம் போல அந்த அறையும், அதிலுள்ள நூலகமும், நிகழ்வுகளும், பங்குபெறும் நண்பர்களின் எண்ணிக்கையும் பெருகி விரிவடையட்டும். வாழ்த்துகள் சீர்மை.
சீர்மை பதிப்பகம் ஐந்தாண்டுகளை நிறைவு செய்துவிட்டது என அறிகிறேன். ஐந்தாண்டுகளுக்கு அவர்கள் பதிப்பித்த நூல்கள் தனித்துவமானது. மிக கூரான விமர்சனத்தை வைக்க கூடிய அபுனைவுகளை கொண்டு வந்திருக்கிறது.
அதில் நொறுங்கிய சுதந்திரம் தவிர்க்க முடியாதது, இந்திய கம்யூனிச அமைப்புகளின் இறுகிப்போன அம்சத்தை விமர்சனத்தை முன்வைக்கும், அவசரநிலை காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது, லண்டனில் தனது பல்கலைக்கழக காலத்தில் எதிர்கொண்ட அனுபவம் போலவே அந்த நூலின் சிறை அனுபவத்தில் அப்சல் குருவுடனான சூஃபியிசம் குறித்த உரையாடல் என நீளும்.
இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் "ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?" என்ற நூலில் கூட சிபிஐ(எம்), மேற்கு வங்கம், தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆள்வதற்கு காரணங்களில் ஒன்றான கால்பங்கு இஸ்லாமியர்கள் வாக்குகள், அதே நிலை கேரளத்தில் இருந்தும் அதன் பொலிட்பீரோ அமைப்பில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லாததை சுட்டிக்காட்டுகிறார்.
புனைவுகளில் சூஃபியிசம் சார்ந்த நாவல்களை என்னைப்போல பலரும் அறிந்து கொண்டது சீர்மைகளின் வழியாகத்தான் இருக்கும். 'ஜின்களின் ஆசான்' வாசிப்பிற்கு பின் அந்த பிரிவின் கீழ் இடம்பெறும் நூல்களுக்கு இப்போது தனிகவனம் செலுத்துகிறேன்.
திருமுகம் மற்றும் றள்வா ஆஷூரின் கிரானடா (முக்கதைகள்) நாவல்களில் பொதுவான அம்சமாக இருப்பது இஸ்லாமிய பண்பாடுகள் குறித்த நம் அறிவதுதான். அரபியில் இருந்து நேரடியான மொழிப்பெயர்ப்புகள் மிக நேர்த்தியாக இருப்பதை முக்கிய கவனம் செலுத்துகிறது சீர்மை பதிப்பகம்.
காஸாவின் திருமணங்கள் நாவல் பாலஸ்தீன இயக்கங்களில் எதையும் சாரமல் மையநீரோட்ட பார்வையில் ரண்டா,லமீஸ் என இரட்டை பெண்களின் வழியாக அங்கு நிலவிய குழந்தைகள் மீதான ஸ்னைப்பர் தாக்குதல், எந்த அமைப்பாக இருந்தாலும் இஸ்ரேல் கொல்லும் அப்படியில்லை என்றாலும் வானிலிருந்து குண்டுகள் தாக்கி அழிக்கும் என்பதையும் கனஃபானி போன்ற எழுத்தாளர்களையும் அந்த நூல் அறிமுகப்படுத்தும்.
இஸ்லாமிய சார்பு நூல்களைத்தான் பதிப்பிக்கிறது என்று ஒரு கருத்தை முன்வைத்தாலும் கூட இதுவரை சீர்மை வழியாக நாம் அறிந்துக்கொள்ளும் இஸ்லாமிய பண்பாடு, எதிர்கொள்ளும் சிக்கல்களை பேசும் நூல்களை மற்ற பதிப்பகங்கள் வழியாக அறிந்தது சொற்பம் தானே, தொடர்ந்து இந்த தளங்களில் அறிமுகப்படுத்தட்டுமே.
அப்போது தான் நாம் அஃப்சல் குருவின் உரையாடல்கள், ஷர்ஜீல் இமாம் எழுதும் விமர்சனங்களை நாம் அறிந்துகொண்டு பிரச்சனைகளை களையமுடியும்.
ஜன நாயகன், பின் காலனிய நினைவேக்கம் போன்ற கோட்பாடு நூல்களுக்கும் சீர்மை இடம் கொடுத்துக்கொண்டுத்தான் இருக்கிறது.
மாவோவின் புகழ்பெற்ற கூற்றான "நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைப் பள்ளிகள் போட்டியிடட்டும்"
வாழ்த்துகள்!
சீர்மைப் பதிப்பகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதுவரை 175 தலைப்புகளில் நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதிப்பக முயற்சிகளில் முன்னர் ஈடுபட்டவன் என்ற வகையில் ஒரு பதிப்பகத்தை கொண்டு நடாத்துவது எவ்வளவு கடினமான, சவால்மிக்க பணி என்று நானறிவேன்.
இஸ்லாம் சார்ந்த மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பிப்பதில் தமிழ்பேசும் முஸ்லிம் உலகினைப் பொருத்தளவில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளும், சிக்கல்களும் தொடர்ந்திருந்துள்ளன. பல மொழிபெயர்ப்பு நூல்கள் மூல நூலிருந்து மிகவும் சேய்மைப்பட்டுள்ளன. மூல நூலாசியர் குறித்த நூலினை எந்த நோக்கத்தில் எழுதினார் என்பதைக் கூட மொழிபெயர்ப்பாளரும், பதிப்பகத்தாரும் அறியாத தமிழ்ப்படுத்தலாக காணப்படுகின்றன. மொழிபெயர்ப்புகளில் கருத்துச் சிதைவின்றியும், மூல நூலாசியரின் நோக்கத்தை உணர்ந்தும் தமிழ்ப்படுத்துவது சவாலானது தான். மூல நூலாசியருடன் ஒன்றித்துப் பயணித்து, அவரினை தமிழ்மொழியில் பேச வைப்பது போன்றது இது.
சீர்மைப் பதிப்பகத்தின் பயணத்தில் நான் அவதானித்த மிக முக்கிய விடயம் இக்குறைபாட்டிலிருந்து இப்பதிப்பகம் தப்பித்துப் பயணிப்பது. இதனை இரு வழிகளில் சீர்மைக் குழுவினர் மேற்கொள்வதாகக் கருதுகிறேன். ஒன்று, மொழிபெயர்பாளர்களின் தேர்வு. மிகவும் தேர்ந்த, பொருத்தமான மொழிபெயர்பாளர்களை சீர்மை கண்டடைந்துள்ளது. மற்றது, சீர்மைக் குழுவினர் நோக்கம் அறிந்து மொழிபெயர்ப்பில் மேற்கொள்ளும் பிரக்ஞைபூர்வ பிரயத்தனம். நூல்களை அதிகமாகவும், வேகமாகவும் பதிப்பிக்க வேண்டும் என்பதை விட, குறித்த நூல்கள் அதன் இலக்கினை அல்லது அது சமூகத்தில் ஏற்படுத்த விரும்பிய மாற்றத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பது பதிப்பகத்தின் முன்னுரிமையாக இருக்கும் போது மாத்திரமே இது சாத்தியம். ஒரு பதிப்பகம் அறிவு இயக்கத்துக்கான தன்மையினை இவ்விடத்திலேயே பெறுகின்றன.
இலக்கியம் என்பது வேறுபட்ட கலாச்சாரங்களையும், தான் அல்லாத சமூகங்களையும், பிற குழுவினரையும் புரிந்து கொள்வதற்கான முக்கிய ஊடகம். இலக்கியத்தின் மூலமே எங்கோ கண்காணாத ஒரு தேசத்தில் வாழும் மனிதர்கள் எங்களைப் போன்றே இரத்தமும் சதையுமாக வாழ்கிறார்கள் என்பதை, எங்களைப் போன்றே அவர்களும் பிரச்சினைகளை, கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்கிறோம். இவ்வகையில் இலக்கியம் எங்களை எல்லைகள், காலங்கள் கடந்து சிந்திக்க வைக்கின்றன; குறுங்குழுவாத மனநிலையிலிருந்து வெளிக்கொணர்கின்றன; வெறுப்பின் வழி மனிதர்களை அணுகாமல் உடன்பாடாக மனிதர்களை நோக்குகின்றன. தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம் செலுத்திய தாக்கத்திலிருந்தும் இதனை உணர முடியும்.
சீர்மைப் பதிப்பகத்தின் தமிழ்நிலைப்பட்ட வாசகர்கள் சார்ந்த புது முயற்சியாக தெரிவு செய்யப்பட்ட நாவல்களின் மொழிபெயர்ப்பினை சொல்ல முடியும். இதற்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தினுள் புழக்கத்தில் இருந்த சில சஞ்சிகைகள் அல்லது பத்திரிகைகள் இவ்வாறான சில இலக்கியங்களை மொழிபெயர்க்க முயற்சித்துள்ளன. ஆனால், அவை தனி நூலாக பதிப்பிக்கப்பட்டதாக நான் அறியவில்லை. சீர்மை இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்க ஒரு தொகுதியினையே பதிப்பித்துள்ளமை முக்கியமானது. உலகளாவிய முஸ்லிம் சமூகம் மற்றும் முஸ்லிம்களின் வரலாறு சார்ந்த முன்முடிவுகள், ஏற்கனவே திட்டமிட்டு பரப்பட்டுள்ள கற்பிதங்களுக்கு சிறந்த எதிர்வினையினை இவ்வாறான இலக்கியங்கள் ஆற்ற முடியும். சீர்மைப் பதிப்பகத்தின் ஸ்தாபகரும், நண்பருமான உவைஸ் அஹ்மத் இலங்கைக்கு 'ரிஹ்லா' பயணத்தினை மேற்கொண்டிருந்த போதும் இவ்விடயங்களில் சிலதை அவரிடம் சுட்டிக் காட்டினேன்.
சீர்மை தமிழ்மொழியில் எழுதப்பட்ட சிலரின் நூல்களினையும் பதிப்பித்துள்ளன. இவற்றில் காலனிநீக்க சிந்தனையை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நண்பர் நிஷாந்தின் "பின்காலனிய நினைவேக்கம்: அரசியல் நவீனத்துவம் குறித்த ஒரு மீள்வாசிப்பு" நூல் முக்கியமானது. ஏற்கனவே தமிழ்புலத்தில் பரீட்சயமற்ற, புதியதொரு சிந்தனையை கருத்துச் சிதைவின்றி அறிமுகப்படுத்துகிறது இந்நூல். காலனியம் / அரசியல் நவீனத்துவம் குறித்து உரையாடாமல் தேசிய அரசின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியாது. இவ்வகையில், தமிழ்நிலைப்பட்ட சூழமைவில் பாசிசத்தை எதிர்கொள்வதற்கான கருத்தியல் சட்டகமொன்றை சீர்மையின் இப்பதிப்பு வழங்குகிறது. சீர்மை குழுவினர் இந்திய சூழலில் பாசிசம் / இந்துத்துவம் செயற்படும் விதம் குறித்த புரிதலுடன் செயற்படுபவர்கள். அவர்களின் பதிப்புகளிலும் அவை வெளிப்படவே செய்கிறது.
சீர்மைப் பதிப்பகத்தின் பயணம் குறித்த எனது சில அவதானங்களே இவை. ஓர் அறிவு இயக்கமாக சீர்மையின் பணி சிறக்க பிராத்தனையும், வாழ்த்துக்களும்!
ஆங்கிலத்தின் உதவியோடு நிறைய அயல்நாட்டு எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதுண்டு.ஆனாலும் தாய்மொழி தமிழில் வாசிப்பதற்கு இணையாக இருப்பதில்லை.குறிப்பாக மெய்யியல் சார்ந்த நூல்களை தமிழில் வாசிக்கும் போது ஒரு நிறைவு ஏற்படும். சில வருடங்களாகவே இஸ்லாமிய மெய்யியல் நூல்களை வாசிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் ரூமியிடத்தில் போய் நின்றுவிடுவார்கள்.எவ்வளவு மாஸ்டர்கள் இருக்கிறார்கள்.ஏன் தமிழில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என யோசித்தண்டு. சில நேரங்களில் சில புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கலாம் என்று கூட நினைத்ததுண்டு. அந்தக் குறையை சீர்மை பதிப்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுள் இருந்த குறையை நீக்கி வருகிறது.
ஆம், இரண்டு ஆண்டுகளாக நான் அதிகம் வாசித்தது சீர்மை பதிப்பகத்தின் நூல்கள் தான்.அவர்கள் மொழியாக்கம் செய்த சில நூல்களை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன் என்ற போதும் தமிழில் படிப்பதற்காகவே வாங்கினேன். அரேபிய, பெர்சிய, மத்திய கிழக்கு மொழிகளிலிருந்து தான் மொழியாக்கம் செய்கிறார்கள் என்றில்லாமல், பல முக்கிய நூல்களை கொண்டு வந்துகொண்ட இருக்கிறார்கள். ஆனாலும் இஸ்லாமிய நூல்களை விற்பனை செய்வோர்கள் என்கிற முத்திரை இருப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு.
வரும்காலங்களில் அந்த திரை விலகி வெகுஜனமாக சீர்மையின் நூல்களை சார்ந்தவர்கள் கொண்டு சென்றால் இஸ்லாமிய மெய்யியல் குறித்த நூல்களை அனைவரும் விரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதே போல நூல் உருவாக்கத்தில் தனித்துவமாக தெரிகிறார்கள். கவிதை மொழியாக்கத்தில் மட்டும் எனக்கு உவப்பாகவில்லை. உரைநடையில் ஆங்கிலத்தில் நான் வாசித்திருந்த நூல்களுக்கும் தமிழில் அவை மொழிபெயர்க்கப்பட்டிருந்ததும் சிறப்பாக இருந்தது. ஏன் இந்த பதிவு என்றால் சீர்மை பதிப்பகத்தை வாழ்த்தி நிறைய வாழ்த்துச் செய்திகளை பார்த்தேன். ஒரு வாசகனாக நாமும் வாழ்த்தலாமே என்கிற எண்ணம்தான்.
வாழ்த்துகள் தோழர் உவைஸ் அஹ்மது மற்றும் அவரது குழுவினருக்கு.மேலும் செம்மையான பல நூல்களை தமிழுக்கு கொண்டுவர வாழ்த்துகள்.
சீர்மை பதிப்பகம் 2024இன் நடுவிலிருந்துதான் தோழர்கள் இலியாஸ், அப்துல்லா, நிஷாந்த் ஆகியோர் மூலமாக அறிமுகம். சீர்மையில் புத்தகம் வாங்க தொடங்கியது 2025-இல் தான். வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் தீர்க்கமான அரசியல் சார்ந்தவை மட்டுமின்றி, ஆய்வு கூர்மை கொண்டவை. ஷர்ஜீல் இமாமின் கட்டுரைகளாக இருந்தாலும், இஸ்லாமிய இறையயியல் குறித்த பொதுபுத்தி வாதங்களுக்கான மறுப்பாக இருந்தாலும், அறிவியல் குறித்த விமர்சன பார்வை என்றாலும் அல்லது இலக்கிய நூல்களாக இருந்தாலும், அதில் புதுமையும்,விமர்சன நோக்கும், ஆய்வு கூர்மையும் கொண்டு ஆய்வு பசி உள்ளோருக்கு உணவையும், ஆய்வு பசியை உருவாக்க முணைந்து வருவோருக்கு வழியையும் வழங்குவதாக சீர்மை உள்ளது உள்ளப்படியே மகிழ்ச்சி.
தனிப்பட்டரீதியில் என்னுள் உள்ள சாதி இந்து பொது சமூகத்தின் இஸ்லாமோபோபியாவையும் சீர்மை அவர்களின் செயல்பாடுகள் மூலம் உடைத்துள்ளனர். ஆய்வை வரட்டுவாதிகளான இஸ்லாமியர்கள் என்பதிலிருந்து, அவர்கள் இசையை ரசிப்பார்களா என்பது வரை ஆய்வின் மூலமே பதில் கூறி நான் கொண்டுள்ள பொதுபுத்தியில் சீரான விரிசலை உண்டு செய்துள்ளனர். மேலும் பலரின் பொதுபுத்தியையும், இஸ்லாமிய வெறுப்பையும் உடைக்க சீராக இணைந்து பயணிப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும், நன்றி.
தொடங்கப்பட்டதில் இருந்து வெற்றிகரமாக இயங்கி ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது சீர்மை. ஒரு பதிப்பகமாக, புத்தகங்களை வெளியிடும் களமாக மட்டுமின்றி, ஓர் அறிவு இயக்கமாக சீர்மை செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை ஏறத்தாழ 175 தலைப்புகளில் புத்தகங்களைத் தங்களுக்கென்ற தனித்த அடையாளங்களுடனும், நேர்த்தியுடனும் சீர்மை பதிப்பித்து வருகிறது. இந்தப் புத்தகங்களுக்கான உரையாடல்களுக்கான களத்தை அமைத்துக் கொடுப்பதோடு, கடந்த 2 ஆண்டுகளாக Read Between Lines தளம் சார்பாக திரையிடல் - உரையாடல் நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பு, பல்வேறு சமூக ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி, மீலாத் விழா நிகழ்ச்சி, பயணங்களை ஒருங்கிணைப்பதற்கான ‘ரிஹ்லா’ முதலான பல்வேறு முனைகளில் இருந்து இயங்கி, ஒரு அறிவு இயக்கமாக பரிணமித்திருக்கிறது சீர்மை.
இஸ்லாமிய மெய்யியல், சூஃபித்துவம், சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அரசியல் விவகாரங்கள் முதலானவற்றோடு சீர்மையின் பணிகள் சுருங்கியிருந்தால், அதுவும் மற்றொரு இஸ்லாமியப் பின்னணி கொண்ட பதிப்பகமாக இருந்திருக்கும். முஸ்லிம்களின் அரசியலைத் தயக்கமின்றி வெளிப்படுத்தும் அதே வேளையில், மைய நீரோட்டம் என்றழைக்கப்படும் ‘பொது’ தளத்தின் உரையாடல்களையும் சீர்மை வெளியிட்டிருக்கும் பல்வேறு புத்தகங்கள் தொடங்கியிருக்கின்றன. ஒடுக்கப்படும் சமூகங்களால் நடத்தப்படும் அறிவுசார் முன்னேற்பாடுகளால் ‘மைய நீரோட்டம்’ என்பதன் பொருள் சற்றே மாறுபடத் தொடங்கியிருக்கிறது. அதில் ‘சீர்மை’க்கும் பங்கிருக்கிறது.
எல்லா தரப்பு மக்களாலும் வாசிக்கப்படக்கூடிய புத்தகங்களைச் செழுமையாக உருவாக்குவது, இஸ்லாமியர் - இஸ்லாமியர் அல்லாதவர் என இருதரப்புகளைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் ஒரே விதத்தில் அணுகுவது, ’முஸ்லிம் பிரச்னை’ எனக் குறுகலாக சுருக்கப்படும் விவகாரங்களைத் தாண்டி வாழ்வியலைப் பேச முனைவது முதலானவற்றின் வழியாக, தமிழ் முஸ்லிம்களின் வழக்கமான வாசிப்புப் பரப்பைத் தாண்டி ஒரு களத்தை உருவாக்கத் தொடங்கியிருக்கிறது சீர்மை. பார்ப்பனியத்தாலும், ஆதிக்க சாதிகளாலும் பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தி, அழகியல் மதிப்பீடுகள், அங்கீகாரங்கள் ஆகியவற்றைக் கடந்து சீர்மை போன்ற பதிப்பு இயக்கங்களின் சீரிய பணி ஓர் மகத்தான அரசியல் செயல்பாடு.
சீர்மை பதிப்பாசிரியர் உவைஸ் பாய் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்! தொடரட்டும் இந்த மகத்தான பணி! ❤
சீர்மையின் ஐந்தாமாண்டு நிறைவு உள்ளபடியே மிகுந்த சந்தோசமானதோர் தருணமாகும். தத்துவம், அரசியல், கோட்பாடு, இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் இதுவரை தமிழ்ச்சமூகம் நுகர்ந்து பார்க்காத பல நறுமணங்களை சீர்மை வெளியிட்டிருக்கிறது.
வெளியிடப்படும் எல்லா நூல்களிலும் பாரபட்சமின்றி வடிவமைப்பும், தரமும், ஆக்கமும் நேரத்தியோடிருப்பது அதற்கான மெனக்கிடல்களையும், உழைப்பின் ஆழத்தையும் பறைசாட்டுகிறது.
சீர்மையிடம் நான் தனித்துவமாக பார்ப்பதும், என்னை அதிகம் கவர்ந்ததும் அவர்களின் புத்தக தேர்வு தான், பொதுவாக பதிப்புத்துறையென்பது மிக சவாலான ஒரு துறையாகும். வாசிப்பு பழக்கமுள்ளவர்கள் இன்று பெருகியிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் இலக்கியம், சுயமுன்னேற்றம், சுயசரிதை போன்ற வாசிப்பு மட்டத்திலிருப்போர் தான் அதிகம். மாறாக கோட்பாடு, அரசியல், தத்துவம் போன்ற ஆழமான தீவிர வாசிப்பென்பது அறிதிலுமரிதாகியுள்ளது.
அதேபோல் அச்சு விலையேற்றம், மொழிபெயர்ப்பு செலவு என பல உள்மறைந்த காரணிகள் பதிப்பகதுறையிலுள்ளோரை மூச்சித்தினர வைத்துவிடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த பின்புலத்திலிருந்து பார்க்கும் போது ஒரு பதிப்பகம் மக்கள் விரும்புகின்ற, மக்களை கவருகின்ற தலைப்புகளில் நூல்களை வெளியிடவே தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுவது இயல்பானதே. அப்படியான வெளியீடுகளின் வழி மக்களை கவர்ந்து இன்று வெற்றிகரமாக செயல்பட்டுவரும் பல்வேறு பதிப்பகங்களையும் நாம் காணலாம்.
ஆனால் சீர்மையின் தேர்வுகள் இதிலெதிலேயும் அடைப்பட்டு விடாமல், பல்வேறு நெருக்கடிகளிருப்பினும் அதற்கெதற்கும் அடிபணியாமல்
சமகாலவுலகின் இயங்கியலுக்கும், சிந்தனைகளுக்கும் எது வெளியிடப்பட வேண்டிய தேவையோ, மக்களின் சிந்தனை விழிப்புக்கு எதை வாசிக்க வேண்டுமோ அதை சமரசமின்றி வெளியிட்டு வருகின்றனர். சீர்மையின் புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பவர் அதுவரை பெற்றிடாத அகப்பார்வையையும், சிந்தனை பாய்ச்சலையும் தாங்கள் அடைந்திருப்பதை கண்டிப்பாக உணர்வார்கள்.
இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் சீர்மை இன்று எல்லோராலுமறியப்பட்ட ஓர் பதிப்பகமாக தன்னை நிலை நாட்டி ஐந்தாண்டுகளை கடந்திருப்பது சாதாரண விஷயமல்ல அது ஓர் சாதனையாகும். இதற்கு பின் மறைந்திருக்கும் சகோதரர்களின் உழைப்புக்கும், தியாகத்திற்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக.
சில வேண்டுதல்கள்:
1. முஸ்லீம் பெற்றோர்கள் மற்றும் சிறார்களுக்கான வழிகாட்டல், உருவாக்க கையேடு, கல்வி போன்ற தலைப்பிலும் சிறந்த நூல்கள் வெளியிட பரிசீலியுங்கள். இன்று பாரதி புத்தகாலயத்தை தவிர சிறார்களுக்கு வேறு புகலிடமில்லை. இதிலும் வாய்ப்பிருந்தால் கவனம் கொள்ளுங்கள் இன் ஷா அல்லாஹ்.
2. தத்துவம் போன்ற முக்கியமான துறையில் மெய்யியல் கோட்பாடுகளின் அடிப்படைகளையும், இஸ்லாமிய மெய்யியல் கோட்பாடுகளையும் கற்றுக்கொள்ள வசதியாக புத்தகங்கள் தொடராக வெளியிட்டால் பயனுள்ளதாகயிருக்கும்.
சீர்மை பதிப்பகம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் அது புதிய பாய்ச்சல் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறது. கவனத்திற்குரிய பதிப்பகமாக மாறியுள்ளது.
தமிழில் 'இஸ்லாமியப்' பதிப்பகங்களுக்கென்று ஒரு பொதுப் போக்கு இருக்கிறது. முஸ்லிம்கள் நடத்தும் பதிப்பகங்கள் உருவாக்கியுள்ள பொதுவான இந்த மனச் சித்திரம் நமக்கு நன்கு தெரியும். அவற்றின் மரபார்ந்த 'முகமும்' 'மொழியும்' நாம் அறிந்ததுதான்.
சீர்மை இதிலிருந்து விலகித் தெரிகிறது. பதிப்புத்துறையில் தனித்துவமான ஒரு பாதையில் அது பயணிக்கிறது.
குறிப்பாக உள்ளடக்கத் தேர்வில் அது காட்டும் அக்கறைதான் அதன் முதன்மையான தனிச் சிறப்பு என்பேன். தமிழ்ச் சூழலில் இதுவரை யாரும் தொட்டிராத வித்தியாசமானை இஸ்லாமியப் பரப்பு அதன் ஈர்ப்பு வட்டத்துள் வந்திருக்கிறது.
இஸ்லாமிய வெறுப்புத் தொழிற்சாலையும் பொதுப் புத்தியும் சித்தரிக்கும் தவறான முஸ்லிம் படிமத்தையும் குறுகிய பார்வையையும், கருத்தியல் தளத்தில் உடைக்க சீர்மை தன்னாலான பங்களிப்பைச் செய்து வருகிறது.
இதுவரை 175 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இதில் ஆகக் கூடியவை இலக்கிய நூல்கள். அறபு, பாரசீக இலக்கியங்களைத் தமிழாக்கும் சீர்மையின் முயற்சி முக்கியமான பணி.
பாரசீக செவ்வியல் இலக்கியங்கள், சில பத்தாண்டுகளுக்கு முன்னரே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், நவீன இலக்கியங்களை - சமகால நாவல்களை அறபு, பாரசீகத் தளத்திலிருந்து தமிழுக்குத் தருவது மிகவும் கவனத்துக்குரிய பங்களிப்பு.
அடுத்தது, சீர்மை தன்னை ஒரு சிந்தனை முகாமுக்குள் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. நவீன இஸ்லாமிய சிந்தனைப் புலத்தின் பன்மைப் பாங்கைப் பிரதிபலிக்கவே அது முற்படுகிறது. "நூறு பூக்கள் மலரட்டும்" என்பது போல் கதவுகளைத் திறந்து வைத்துள்ளார்கள்.
சீர்மை ஸூபித்துவ சிந்தனை மரபின் புதிய போக்குகளை அறிமுகப்படுத்துகிறது. அதன் உள்ளீடுகளை விரிக்கிறது. மேம்போக்கான விடயங்களை விட, சிந்தனை ஆழங்களைத் தொடும் முனைப்பே அதில் அதிகம் வெளித்தெரிகிறது.
அதேபோல 'அல்குர்ஆனின் நிழலில்...', 'இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு' என்பன ஆழமான- பெறுமானம் நிறைந்த சிந்தனைப் பங்களிப்புகள்.
இவைதான் மரபு இஸ்லாமிய நூல் வெளியீட்டகங்களின் போக்குகளிலிருந்து, சீர்மையை வேறு பிரித்துக் காட்டுகின்றன.
இந்த உள்ளீர்க்கும் பன்முக வெளிப்பாடுதான் (Inclusiveness & Diversity) சீர்மையின் தனித்துவம் என்பேன்.
அதேவேளை தமிழின் பொதுப் புத்தியிலுள்ள 'முற்போக்கு' என்பதன் அர்த்தத்தை, சீர்மையின் 'முற்போக்குப் பார்வை' இன்னும் விசாலிக்கச் செய்திருக்கிறது. இந்த தரிசனத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனாலும், இது சுட்டிக்காட்டியே ஆகவேண்டிய முக்கியமான உண்மை. பலஸ்தீன இலக்கியங்கள் அதற்கு நல்ல உதாரணம்.
ஆனால், தமிழ்மொழிப் புலத்திலான இஸ்லாமியச் சூழலில் முகிழ்த்தெழும் மெய்யான சிந்தனை வீச்சை, சீர்மை எந்தளவுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது என்பது கேள்விக்குரியது. சீர்மை இன்னும் ஆழமாக நுழைய வேண்டிய பரப்பு அது.
மொழிபெயர்ப்புக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் உழைப்பும் மெச்சத்தக்கது. அது மிகுந்த பணச் செலவும் சடைவும் நிறைந்த பணி. ஆனாலும், சோர்வில்லாமல் அதற்காக அதிக பிரயத்தனம் எடுக்கிறார்கள்.
சீர்மை தரும் அறபு மூல மொழிபெயர்ப்புகளை தமிழில் ஆழமாக மொழியாக்கம் செய்யும் பீ.எம்.எம்.இர்ஃபான் Irfan Pmm, ஷாஹ் உமரி ஆகியோரின் பங்களிப்பை - அவர்களது செறிவான மொழியோட்டத்தை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
சீர்மை மொழியாக்கங்களின் இன்னொரு முக்கிய பங்காளி றமீஸ் பிலாலி. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் அவரது மொழியும் தெளிந்த நீரோட்டம் போன்றதுதான். அவர் ஓரளவு பாரசீகம், உருது, அறபு மொழியறிவு கொண்டவர். அவை அவரது மொழியாக்கங்களுக்கு வலுச் சேர்க்கின்றன.
நூல் தயாரிப்பில் - அட்டைப் படத் தெரிவில்- வடிவமைப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்குள் பொது அழகியலோடு, இஸ்லாமிய அழகியலையும் சரிவிகிதத்தில் கலக்கிறார்கள்.
சீர்மையின் முதன்மை இயக்குனர் நண்பர் உவைஸ் அஹமத் மிகத் தேர்ந்த வாசகர். அவர் பார்த்துப் பார்த்துச் செதுக்கித்தான் ஒவ்வொரு புத்தகத்தையும் கொண்டு வருகிறார்.
அத்தோடு நண்பர் பஷீர் Salai Basheer, நாகூர் றிஸ்வான், அஸ்வத் ஷரீஅத்தி, ஷான் நவாஸ், ஏ பி ராமச்சந்திரன், சம்மில், பக்கீர், செய்தலீ, பி. ரியாஸ் ஆகியோரும் இதில் முக்கிய பங்காளியாக உள்ளனர்.
வடிவமைப்பாளர்களாக அப்துல் லத்தீஃப், அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் பங்களிக்கின்றனர்.
தரமான நூல் தெரிவு என்பது ஒரு பதிப்பகத்தின் ஆணி வேர் போன்றது. அதிலும் நூல் செம்மையாக்கத்திலும் சீர்மை கூடுதல் கவனம் செலுத்துகிறது.
முஸ்லிம் வாழ்வியலைப் பேசும் இலக்கியங்களில் தொனிக்கும் 'ஆள்காட்டி அரசியலை' விலக்கி, முஸ்லிம் மக்களது நிதர்சனமான வாழ்வியலை பொதுவெளிக்கு இன்னும் துலாம்பரமாகக் கொண்டுவர வேண்டும். இதைப் பலரும் பேச்சுவாக்கில் பகிர்கிறார்கள். சீர்மைக்கு அந்தப் பொறுப்பும் கடப்பாடும் அதிகம்.
சிந்தனையின் உப்பரிகைகளில் உலா வருவது அவசியத் தேவைதான். அதேபோல நடைமுறை வாழ்வின் வண்ணக் கோலங்களை நோக்கி, சீர்மையின் கதிர்கள் விரிய வேண்டும்; கால்கள் இன்னும் பூமியில் நன்கு பாவ வேண்டும்.
தமிழில் முஸ்லிம் நண்பர்கள் நடத்தும் அடையாளம், எதிர் வெளியீட்டகங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்துள்ளன. அவை முஸ்லிம் என்ற அடையாளத்தோடு வருவனவல்ல. பொது நீரோட்டத்தின் தனி அடையாளங்களாய் முத்திரை பதித்தவை.
சீர்மை இதில் இன்னொரு புதுவரவாய் - புதுப் பரிமாணமாய்த் தன்னை நிறுவியிருக்கிறது.
ஒரு வாசகனாக சீர்மை நூல்களின் சுவையை நன்கறிந்து உணர்ந்திருக்கிறேன். அதேபோல புத்தக விநியோகம் மூலம் சீர்மை நூல்கள், இலங்கை வாசகர்களைச் சென்றடைய உதவியிருக்கிறேன். இலங்கையில் சீர்மைக்கென்று தனியான வாசகர் வட்டமொன்று உள்ளது. அது மகிழ்ச்சி தருகிறது.
உற்சாகத்தோடு உழைக்கும் சீர்மை குழும நண்பர்கள் அனைவருக்கும் பேரன்பும் நிறைந்த நன்றிகளும். சீர்மை இன்னுமின்னும் வளரவும் வளர்ந்து கிளை பரப்பவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சிராஜ் மஷ்ஹூர்
25.01.2026
4வது படிக்கும் போதே என் தந்தை எனக்கு CSR, Illustrated Weekly மூலம் வாசிப்பின் சுவையை பருக வைத்திருந்தாலும் 1996 இறுதியில் ஈ.டி.ஏ நிறுவனத்திற்காக துபாய்க்கு தேர்வாகி தாமதமானதால் மாதம் தரும் 1500 ஸ்டைபெண்டில் 350 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் அளவு தீவிர வாசிப்பாளனாக மாறி போனேன்.
அப்போது பெரும்பாலும் ஐ.எப்.டியில் தான் புத்தகங்கள் வாங்குவேன். இலக்கிய சோலை, சாஜிதா உள்ளிட்ட பிற பதிப்பகங்களிலும் வாங்குவதுண்டு.
அப்படியே மார்க்சிய சிந்தனை புத்தகங்கள் என விரிவடைந்த போது நம்மவர்கள் நடத்தும் பதிப்பகங்கள் ஒரு சட்டத்திற்குள் தங்களை சிறைபடுத்தி கொண்டு அதை தாண்டி வெளியேற முடியாமல் தவிப்பது போல் உணர்ந்தேன்.
நாமே கூட ஒரு பதிப்பகம் தொடங்கலாம் என அவ்வப்போது நினைத்து ஒரு முறை கொஞ்சம் சீரியசாகவே இறங்கவும் எத்தனித்தேன். அப்படி இறங்க நினைத்த பதிப்பகம் சீர்மை உவைஸுடன் தொடர்புடையது என்பது வேறு விடயம்.
சில காலத்திற்கு முன் 'கிழக்கு' ' அடையாளம்', காலச்சுவடு, பாரதி புத்தகாலயம், விடியல் (கோவை) போன்ற பதிப்பகங்களை அதன் நேர்த்தி, பொருளடக்கம், அட்டை படம் போன்றவற்றுக்காக வியந்ததுண்டு.
ஆனால் இஸ்லாமிய நம்பிக்கையை வேராக கொண்ட ஒரு பதிப்பகம் இத்துணை நேர்த்தியாக, 175 புத்தகங்கள் வந்தாலும் அத்துணையும் ஒரே எழுத்து வடிவம் என அட்டையை பார்க்காமலே இது சீர்மை என சொல்ல கூடிய அந்த Uniformity & Uniqueness , அந்த தரம் 20 ஆண்டுகள் தரக்கட்டுபாடு பொறியாளரான எனக்கு பிடித்தது.
அது போல் ஒரு ஜானர் என இல்லாமல் மெய்யியல், இலக்கியம், சூபித்துவம், அரசியல், இஸ்லாமிய இயக்கம், சமகால உலகம், Fiction உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் வெளியாகியுள்ளது சிறப்பு.
சீர்மையின் முக்கிய சிறப்பம்சம் அதன் மொழி பெயர்ப்பு நூற்களே. Fiction நூற்களை சீர்மை மூலமே படிக்க ஆரம்பித்தேன். காதலின் நாற்பது விதிகள், உன் வாழ்வை புதுப்பித்து கொள், கிரானடா, ஜின்களின் ஆசான், நடு நிசி எல்லைகள் , உணர்வியல் நோக்கில் சீறா போன்றவை மனதிற்கு நெருக்கமானவை.
இதன் இயக்கு சக்தியான சகோ உவைஸின் உழைப்பும், சகோ இர்பான், ஷாஹுல் உமரி, ரமீஸ் பிலாலி உள்ளிட்டவர்களின் நேர்த்தி அழகு.
சீர்மையின் சூபி நூற்களில் சில சாதாரண வாசகர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதும் Fiction நூற்களுக்கான கூடுதல் முக்கியத்துவமும் என்னை போன்ற வரலாற்றை நேசிப்பவர்களுக்கு சில போது அயர்ச்சியாக இருக்கலாம்.
ஒவ்வொரு புத்தக கண்காட்சியின் போது சீர்மை புத்தகங்களுக்கென ஒதுக்க வேண்டிய தொகை எகிறி கொண்டே இருப்பது சந்தோஷமான கவலையாகும்.
ஐந்தாண்டுகளில் 175 நூற்கள் வெளியிட்டுள்ள சீர்மை கூடுதலாக இஸ்லாத்தில் சமூக நீதி போன்ற இலக்கு நோக்கிய புத்தகங்கள், கிரானடா போன்ற வரலாற்றை தழுவிய நாவல்களை அதிகம் பிரசுரிக்க வேண்டும் என்பது அவா மட்டுமல்ல துவாவும் கூட...
தமக்கென தனி நோக்கங்களுடனும் இலக்குகளுடனும் தமிழ்நாட்டில் முஸ்லிம் பதிப்பகங்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. அவற்றில் பலதும் பதிற்றாண்டுகள் பழமைமிக்க வரலாறு கொண்டவை.
தமிழ் இஸ்லாமிய இலக்கிய உலகில் புதிய பாய்ச்சலை நடத்திய பதிப்பகம் சீர்மை. குறுகிய காலகட்டத்திற்குள் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை சீர்மை பெற்றுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.
இஸ்லாம் ஒரு கருத்தியல் மார்க்கம். தனக்கு எதிரான சித்தாந்தங்களை அறிவுப்பூர்வமாக இஸ்லாம் எதிர்கொள்கிறது. கருத்தியல் மாற்றங்கள் தான் உலகின் திசையை தீர்மானிக்கும். அதற்கு பதிப்பகங்களின் பங்களிப்பு பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமிய கருத்தியலை பொதுச் சமூகத்தின் மத்தியில் அழுத்தமாக கொண்டு செல்வதில் சமீப காலத்தில் சீர்மை பெரும் பங்களிப்பை செய்துள்ளது.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் வார்த்தையை மெய்யாக்கி உள்ளது சீர்மை.
நாவல், கவிதை, ஆன்மீகம், அரசியல், சமூக மேம்பாடு... என பன்முக வெளியீட்டகமாக சீர்மை களமாடுகிறது.
பல பதிப்பகங்கள் தொடாமல் விட்ட பல புத்தகங்கள் சீர்மை வெளியிட்டு வருகிறது.
குறுகிய காலகட்டத்தில் சீர்மையின் வளர்ச்சிக்கும் சமூக பங்களிப்பிற்கும் அதன் ஆரம்ப காலகட்ட முதல் இதுகால் வரை உறுதுணையாக இருந்து செயல்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்!
நான் இங்கு பதிவிட்ட நூல்கள் அனைத்தும் என் வாசிப்பு ஆர்வத்தையும், மூல நூலான அரபு நூல்களை நேரடியாக வாசிக்க வேண்டும் என்ற ஆவலையும் உருவாக்கிய, அற்புதமான சீர்மை பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு நூல்களாகும்.
பொதுவாகவே சீர்மை பதிப்பகத்தின் நூல்களின் மீது காதல் வயப்படுவது உறுதி. ஏனெனில், ஏனைய பதிப்பகங்களின் செம்மையாக்கம், மொழிபெயர்ப்பாளர்கள், அட்டைப்படங்கள், எழுத்தாளர்களின் தேர்வு, புத்தகத்தின் தாள்கள், கவர் டிசைன்கள் ஆகிய அனைத்திலும் இருந்து சீர்மை பதிப்பகத்தின் நூல்கள் தனிச்சிறப்பு பெறுகின்றன.
உண்மையில், இன்றைய நாட்களில் அரபு மொழி மற்றும் ஆங்கில மொழியிலிருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பல நூல்களில் மனித பலவீனங்களும், கருத்துச் சிதைவுகளும், கருத்து மயக்கங்களும் காணப்படுகின்றன.
இந்த வகையில், ஏனைய பதிப்பகங்களின் நூல்களிலிருந்து சீர்மை பதிப்பகத்தின் நூல்கள் தெளிவாகவே வேறுபடுகின்றன.
மொழிபெயர்ப்பு பணி என்பது சாதாரணமான ஒரு பணி அல்ல. ஒரு மொழிபெயர்ப்பாளர் அதற்கென ஒரு மனநிலையுடன் இருப்பதோடு, போதிய கால நேரத்தையும் அர்ப்பணித்து, மூல நூலின் சுவை குன்றாமல், வாசகனை கவரும் வண்ணம் மிகக் கண்கச்சிதமாக அந்த நூலை மொழியாக்கம் செய்ய வேண்டும்.
அந்த வகையில், அரபு மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் முனைவர் பீ. எம். எம். இர்பான் நளீமி மற்றும் ஷெய்க் ஸாஹூல் ஹமீது உமரி ஆகிய இருவரையும் குறிப்பிடலாம்.
மேலும், ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு நூல்களை மொழிபெயர்ப்பதில் ஆங்கிலப் பேராசிரியர் றமீஸ் பிலாலி அவர்களும் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மொழிபெயர்ப்பு துறையில் இவர்கள் பல “சிக்ஸர்கள்” விளாசிய வண்ணமே உள்ளார்கள்.
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை புத்தகத் திருவிழாவில் அருமையான நூல்கள் வெளிவந்துள்ளதும், அதனைத் தொடர்ந்து இவ்வாண்டிலும் தலைசிறந்த அரபு நூல்கள் தமிழிற்கு வர இருக்கின்றன என்ற செய்தியும், புத்தக நண்பர்களான எமக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த மகத்தான மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வரும் சீர்மை பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர்களுக்கும், இந்த மாபெரும் பணியை தலைமைதாங்கி செய்து வரும் சகோதரர் உவைஸ் அஹமத் அவர்களுக்கும், அவரோடு சேர்ந்து பயணிக்கும் செம்மையாக்கம் மற்றும் அட்டைப்பட தயாரிப்பில் ஜாம்பவான்களாகத் திகழும் சகோதரர்கள் ஸம்மீல், அஸ்வத் ஷரீஅதி, நதீம், பஷீர் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்தும் தொய்வின்றி இன்னும் பல நூல்களை மொழிபெயர்ப்பதற்கும், ஒரு மாபெரும் புத்தக வாசிப்பு புரட்சியை ஏற்படுத்துவதற்கும் அல்லாஹ் சீர்மை பதிப்பகத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்.
✍️. ஆப்தீன் முஹம்மத் சல்மான் பாரீஸ்
சீர்மை பதிப்பகத்துடன் எனக்கு அண்மைக்கால பழக்கம் மட்டுமே என்ற போதிலும், சீர்மையின் வெளியீடுகளாக வெளிவந்த சில புத்தகங்களுடன் எனக்கு ஆழமான உறவு உண்டு. ஒரு வாசகனாகப் புத்தகங்களோடு நான் செலவிடும் தருணங்கள், உங்கள் பதிப்பகத்தின் தேர்விலும் தரத்திலும் இருக்கும் நேர்த்தியை எனக்குத் தொடர்ச்சியாக உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
ஐந்தாண்டுகள் என்பது ஒரு காலக்கணக்கு மட்டுமல்ல; அது ஒரு பதிப்பகத்தின் தரம், அறம் மற்றும் தொடர் உழைப்பிற்கான சாட்சி. சீர்மை பதிப்பகம் தனது ஐந்தாண்டு காலப் பயணத்தை நிறைவு செய்யும் இவ்வேளையில், என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நவீனத் தமிழ்ச் சூழலில், அச்சு ஊடகங்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் காலகட்டத்தில், ஒரு பதிப்பகம் வெறும் வணிக நிறுவனமாக இல்லாமல், அறிவார்ந்த தளத்தின் ஒரு இயக்கமாக (Movement) உருவெடுத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுவரை வெளிவந்திருக்கும் 175 தலைப்புகளும் எண்ணிக்கையினால் மட்டுமல்ல, அவற்றின் உள்ளடக்கத்தினால் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கின்றன. குறிப்பாக, பிற மொழிச் சிந்தனைகளைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் சீர்மை காட்டும் நேர்த்தியும், நூற்களின் புற வடிவமைப்பில் (Production Quality) பேணும் கலைத்தன்மையும் சீர்மையை தனித்துவமான அடையாளமாக மாற்றியிருக்கிறது.
சீர்மையின் எதிர்காலப் பயணம் குறித்து ஒரு வாசகனாகச் சில ஆலோசனைகளை முன்வைக்க விழைகிறேன்:
சீர்மை இதுவரை வெளியிட்டுள்ள மெய்யியல் மற்றும் வரலாற்று சார்ந்த நூல்கள் தனித்துவமானவை. இவற்றை வெறும் புத்தகங்களாக மட்டும் வைக்காமல், ஒரு 'டிஜிட்டல் ஆவணக் காப்பகமாக' (Digital Archive) மாற்றலாம். குறிப்பாக, மறைந்து வரும் அரிய இஸ்லாமியக் கையெழுத்துப் பிரதிகள் அல்லது வாய்மொழி வரலாறுகளை நூலாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம்.
2. இளைய தலைமுறைக்கான இணைப்பு (Bridging the Gap)
இன்றைய தலைமுறை வாசகர்களைச் சென்றடைய, கடினமான தத்துவக் கோட்பாடுகளை எளிய சித்திரக் கதைகளாகவோ (Graphic Narratives) அல்லது அறிமுக நிலை நூல்களாகவோ (Beginner's Guides) கொண்டு வரலாம். மெய்யியலை இளைஞர்களின் மொழியில் பேசுவது சீர்மையின் வாசகர் பரப்பை இன்னும் விரிவுபடுத்தும்.
3. ஒலிப்புத்தகங்கள் மற்றும் மின்நூல்கள் (Audio & E-books)
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் மற்றும் பயணங்களில் வாசிக்கும் வாசகர்களைக் கருத்தில் கொண்டு, சீர்மையின் முதன்மையான படைப்புகளை ஒலிப்புத்தகங்களாக (Audiobooks) மாற்றலாம்.
"கடந்த தொலைவு எல்லை அல்ல" என்கிற தீர்க்கமான பார்வை, சீர்மையை இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. சீர்மையின் உழைப்பும், ரசனையும், சமூகப் பொறுப்பும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!
பேரன்புடன்,
செய்யது அலி
வாசிப்பு கலாச்சாரம் இன்று பல சவால்களை எதிர்கொண்டு நிற்கும் காலகட்டத்தில், அதை உயிர்ப்புடன் தாங்கிப் பிடித்து வளர்த்துச் செல்பவர்களில் சீர்மை பதிப்பகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கிறது.
இலக்கியம், அரசியல், இஸ்லாம், கோட்பாடு, சூஃபித்துவம், வரலாறு, அறிவியல், மெய்யியல், சினிமா, வாழ்வியல் எனப் பல்வேறு துறைகளில் தரமான நூல்களைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்தும், எழுதப்பட்டும் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே சீர்மையின் தனித்துவமாகும்.
நூல் தேர்விலும் பதிப்புத் தரத்திலும் காட்டப்படும் அக்கறை, வாசகனின் சிந்தனையையும் ரசனையையும் வளப்படுத்தும் உண்மையான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.
இன்று பொதுவாக தமிழ் கூறும் நல்லுலகில், ஏனைய மொழிகளிலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்படும் பல நூல்களில் மனிதப் பலவீனங்கள், கருத்துச் சிதைவுகள், கருத்து மயக்கங்கள் காணப்படுகின்றன.
ஆனால் சீர்மை பதிப்பக நூல்களில் இவ்வாறான குறைபாடுகளை காண முடியாது என்பதே அதன் பெருமை.
உண்மையில், சீர்மை பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு ஜாம்பவான்களாக கலாநிதி பீ. எம். எம். இர்பான், ஷெய்க் ஸாஹூல் ஹமீது உமரி, ஆங்கிலப் பேராசிரியர் றமீஸ் பிலாலி போன்றோரை குறிப்பிடலாம்.
மேலும், சீர்மையின் நூல்களை செம்மைப்படுத்தும் பணியில் சகோதரர் ஸம்மீல் அவர்களும், அவற்றை கவர்ச்சிகரமான அட்டைப்படங்களுடன் அழகுபடுத்துவதில் சகோதரர் அஸ்வத் ஷரீஅத்தி அவர்களும் ஆற்றிவரும் பணி அளப்பரியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான 175 நூல்கள், சீர்மை பதிப்பகம் வாசிப்புக்கும் புத்தக உலகிற்கும் செய்து வரும் அர்ப்பணிப்பான பங்களிப்பின் தெளிவான சாட்சியாகத் திகழ்கின்றன.
வாசிப்பை ஒரு பழக்கமாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டாக மாற்றும் இந்த முயற்சி தொடர்ந்து விரிவடைய வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பும், ஆசையும்.
✍️. ஆப்தீன் முஹம்மத் சல்மான் பாரீஸ்
சீர்மை பதிப்பகம் தொடங்கி ஐந்தாவது ஆண்டில் நுழைகிறது. சீர்மை அறிமுகமான வருடம் தான் எனக்கும் அந்த வருடம் முதல் புத்தகம் அத்தர் வெளியாகியது. அத்தர் தொகுப்பை ஒருவரிடம் கொடுத்து முன்னுரை எழுதி தரமுடியுமா என கேட்டேன். முதலில் ஒத்துக்கொண்டு பிறகு ஏதோ ஒரு சூழலால் என்னால் முடியாது இதற்கு முன்னுரை எழுதினால் என் பெயர் கெட்டுப்போகும் என்று பின்வாங்கிவிட்டார். எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் துடைத்து எடுத்துக்கொண்டு போனது. புத்தகத்தை அச்சிடாமலே நகர்ந்துவிடலாம் என நினைத்தேன். சீர்மை உவைஸ் அத்தர் தொகுப்பை கொண்டுவருவதில் மிகவும் உறுதியாக இருந்தார். ஒரு அறிமுக எழுத்தாளர் எனும் பாகுபாடே இல்லாமல் பதிப்பக துறையில் நடத்துவது சுலபமல்ல. உவைஸ் எந்த பாகுபாடில்லாமல் அணுககூடியவர்.
இவையெல்லாம் எனது அனுபவம் என்றாலும் சீர்மை ஏன் இலக்கிய சூழலுக்குள் அவசியமாக இருக்கிறது என கேட்டால் சீர்மையை ஒரு இஸ்லாமிய வட்டத்திற்குள் சுருக்கவோ அல்லது அரபுலக கதைகளை வெளியிடுபவர்கள் என்றோ அல்லது சிறுபான்மை அரசியலை பேசுபவர்கள் என்றோ ஒவ்வொரு முறையும் சீர்மை வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. காலத்திற்கும் அரசியலுக்கும் பொருத்தமான தேர்வுகளை செய்திருக்கிறார்கள். சீர்மை எம்மாதிரியான பதிப்பகம் என்பது இன்னும் எதிர்கால தெரிவுகளில் முழுமையான அறிமுகம் பொது தமிழ் சூழலில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தனிப்பட்ட ரீதியில் சீர்மை எனக்கு மெய்யியல் தளத்தில் தொட்ட உயரம் மகிழ்ச்சி. ரவ்லா அசூர், முஸ்தபா மஸ்தூர், தயான் அல்லாஸ் , எலீஃப் ஷபாக், இர்வின் கரிஷ்மர் , இத்ரீஸ் ஷா இங்கு தமிழில் அறிமுகம் செய்ததில் கணிசமான பங்கு சீர்மைக்கும் அதன் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கும் உண்டு. இப்போது கூட நான் இமாம் பகாவுதீன் வலத் எழுதிய ம ஆரிப் சிலகுறிப்புகளின் மொழிப்பெயர்ப்பு ‘நீருக்குள் மூழ்கிய புத்தகம்’ வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழ் இஸ்லாமிய மெய்யியல் தளத்தில் இதுவரை இருந்து எழுத்துக்கள் ஆர் பி எம் கனி, எம் ஆர் எம் அப்துல் ரஹீம், அப்துல் வஹாப் பாக்கவி, சுலைமானியா , யுனிவர்சல், பஸாரத், ஹாஜியார் புக் டிப்போ அதனை தொடர்ந்து இஸ்லாமிய பத்திரிக்கைகள் நர்கீஸ், ரஹ்மத் போன்ற வெகுஜன பத்திரிக்கைகள் வழியாக அறிமுகமான இஸ்லாமிய எழுத்துக்கு மாற்று என சொல்லமுடியாது. ஆனால் தமிழ் இஸ்லாமிய எழுத்துக்கு இன்னொரு நிறப்பிரிகையை தொடர்ந்து சீர்மை செய்துவருகிறது. இங்கிருந்து தமிழ் இஸ்லாமிய இலக்கிய வெளி எழுத்து கொஞ்சம் விலகி புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க சீர்மை தாக்குப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் பெரும்பலமான ரமீஸ் பிலாலியும் உவைஸ்ம் தாக்குபிடிக்க வேண்டியதிருக்கிறது .
சவாலான பதிப்பு துறையில் அவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் நான் சொல்வது அபசகுணமாக அல்ல எனது பெரும் அவா.
பிரார்த்தனைகளுடன்,
அனிஷா மரைக்காயர்
சீர்மை பதிப்பகம் ஐந்தாண்டு கடந்து தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென ஒரு நற்பெயருடன் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. பல்வேறு தலைப்புகளில் தமிழில் மிக முக்கியமான நூல்களை பதிப்பித்து வரும் சீர்மையின் நூல்கள் எப்போதும் நேர்த்தியாக பதிப்பிக்கப்படுபவை. சீர்மையின் நூல்களுக்கு நானும் ஒரு ரசிகன்.
இச்சமூகத்தில் தான் விரும்பும் நூல்களை எவ்வித சமரசமுமின்றி தொடர்ந்து பதிப்பிக்க நண்பர் உவைஸ் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
சீர்மை வெளியீடுகளில் ஒருவிதக் கவர்ச்சி உண்டு. காரணம், அட்டை வடிவமைப்பு & அச்சுத் தரம். இந்நிறுவனம் உருவான காரணங்களில் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயம் தெரியும்; அது சீர்மை நிறுவனருக்கு இலக்கியம், புத்தகங்கள் மீதிருந்த தீராக் காதல். அந்த மோகம் முற்றியதன் விளைவு முழு நேர கணினித் தொழிலிருந்து விடுபட்டு சீர்மையை உருவாக்கி அதனுடன் தொடங்கிவிட்டது அவரது குடித்தனம். உருவானது குழு.
தங்களது ஆர்வத்திற்கு உட்பட்ட இலக்கிய நூல்கள், தங்களைக் கவர்ந்த பன்னாட்டு ஆசிரியர்களின் எழுத்துகள் தமிழ் வாசகர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பது சீர்மைக் குழுவினரின் நோக்கம். இலட்சியம் என்று கூடச் சொல்லலாம். பரபரவென்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவரத் துவங்கின. அடுத்தடுத்து இந்திய/உலக அரசியல், சமூக அக்கறை நூல்கள் அதனுடன் இணைந்தன. தமிழ் ஆசிரியர்களின் புதிய படைப்புகளும் சேர்ந்துகொண்டன. விளைவாக ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியின் போது சீர்மை வெளியிடும் நூல்கள் மளிகைக் கடைப் பட்டியல் அளவிற்கு நீளம். பிரமிக்க வைக்கும் அதன் வரிசை.
விளைவாக சீர்மையின் புத்தகத் தேர்வுகள் கவனத்தைப் பெறுகின்றன என்பதைப் பத்திரிகை விமர்சனங்களும் இதரப் பதிவுகளும் தெரிவிக்கின்றன. சில நூல்கள் சில விழாக்களில் தேர்வும் ஆகின்றன. அதன் கடும் உழைப்பிற்கான அங்கீகாரம் அது. பாராட்டுக்குரிய விஷயமும் கூட.
பதிப்புத் துறையில் தத்தம் உரிமைத் தொகை பெறுவதில் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவும் சூழலில் ஒவ்வோர் ஆண்டும் பைசா பாக்கியில்லாமல் அவர்களுக்கு உரிமைத் தொகை அளித்து விடும் சீர்மையின் நேர்மை ஓர் அபூர்வம். முன்னணி நிறுவனங்களே கூட அவ்விஷயத்தில் படு மோசம் என்பதை அறிந்திருக்கிறேன். சீர்மையின் தொழில் அபிவிருத்தி அடைய இது ஒரு முக்கியக் காரணம் எனலாம். ஏனெனில் நேர்மை இறைவனின் நியதி என்பதால் அதைப் பின்பற்றுபவர்களுக்கு அபிவிருத்தி அவன் அளிக்கும் வெகுமதி.
நான் இதுவரை கவனித்த சில விஷயங்களின் அடிப்படையில் மட்டும் இரு ஆலோசனைகளைப் பகிர்வேன். பற்பல சவால்கள் நிறைந்த பதிப்புத் துறையில் சீர்மை தன்னைச் சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள அவை உதவலாம்.
- தமிழ் மொழிபெயர்ப்பு தமிழக ஜனரஞ்சக வாசகர்களுக்கு ஏதுவான வகையில், நெருடலின்றி இயல்பாக வாசிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.
- இஸ்லாமிய இலக்கியத்தைப் பொறுத்த மட்டில் அதன் ஒவ்வொரு பிரிவுக்கும் பிரியமான, எதிர் கருத்துள்ள தமிழ் முஸ்லிம் வாசகர்கள் உண்டு. எனவே குறிப்பிட்ட ஒரு பிரிவு சம்பந்தமான நூல்கள் மட்டும் அதன் வெளியீட்டுப் பட்டியலை ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. சீர்மையை அனைவரும் கவனித்து தத்தமக்குப் பிரியமான உணவை வாங்கி ருசி பார்க்க அது வழி வகுக்கும். இல்லையெனில் மற்றொருப் பிரிவினருக்கு அது தேவையற்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அனைவரையும் அனைத்து வகையிலும் திருப்திப் படுத்த முடியாதுதான். என்ற போதிலும் கூடிய மட்டில் இவற்றை சீர்மை கவனித்தில் கொள்ளலாம்.
சீர்மையின் பணி மென்மேலும் வளர்ந்து அதன் தொழில் சிறந்தோங்க மனமார்ந்த துஆவும் வாழ்த்துகளும்.
அன்புடன்,
நூருத்தீன்
இந்தியாவிலிருந்து வெளிவரும் சீர்மை பதிப்பகத்தின் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.
இவ்வைந்தாண்டுகளில் தமிழ் வாசக சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ஒரு மதிப்புமிக்க பதிப்பகமாக சீர்மை திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
தரமான உள்ளடக்கம், சிந்தனையைத் தூண்டும் நூல்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் வாசகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது சீர்மை. சீர்மையின் வெளியீடுகளில் என்னை மிகவும் கவர்ந்தவை இலக்கியம் சார்ந்த அதன் தேர்வுகள்தான். அப்பகுதியில் சீர்மை இன்னும் பல வெளியீடுகளை கொண்டுவரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். சீர்மையின் நூல்களின் அட்டடைப்படங்கள் தனித்துவமானவையாக உள்ளன.
இலக்கியம், அரசியல், இஸ்லாம், கோட்பாடு, சூபித்துவம், வரலாறு, அறிவியல், மெய்யியல், சினிமா, வாழ்வியல் என பல்வேறு தலைப்புக்களில் வெளிவரும் சீர்மையின் வெளியீடுகள் வாசகர்களை வழிகாட்டும் தீபங்களாக உள்ளன. வணிக நோக்கத்தை விட சமூக நலனையும் அறிவுப் பரப்பையும் முதன்மைப்படுத்தும் இந்த பதிப்பகத்தின் சேவை மெச்சத்தக்கது.
மொழிக்கும் சிந்தனைக்கும் தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கி வரும் சீர்மை பதிப்பகம் மேலும் மேலும் உயர்வுகளை எட்ட வாழ்த்துக்கள். சீர்மையின் பின்னால் இருந்து உழைக்கும் சகோதரர் உவைஸ் அஹ்மது உட்பட அனைத்து சகோதரர்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்கட்டுமாக!
சீர்மை பதிப்பகம் தமிழில் இஸ்லாமிய நூல்கள் வெளியிட்டுள்ளதில் பெரும் புரட்சியையே செய்திருக்கிறது என தயக்கமின்றி கூறலாம்.
‘புரட்சி’ என்று கூறுவதன் மூலம் நான் தமிழில் வேறு யாருமே வெளியிடாத நூல்களை சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்றோ அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளில் நினைத்தே பார்க்க முடியாத எண்ணிக்கையில் வெளியிட்டுள்ளது என்பதையோ (உண்மையில் ஐந்து ஆண்டுகளில் அதிகமான நூல்களை சீர்மை வெளியிட்டுள்ளது என்பதும் உண்மை தான்) நான் நாட வரவில்லை.
மாறாக சீர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டில் ‘விஞ்ஞான பூர்வமான’ அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதை தான் புரட்சி என்று நான் கூறுகிறேன்.
உதாரணத்திற்கு உஸ்தாத் சையத் குத்பின் பிரசித்தி பெற்ற ‘இஸ்லாத்தில் சமூக நீதி’ நூலையே எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த நூல் 1950 களில் எகிப்தில் வெளியானது. இப்போது ஏறத்தாழ எழுபது வருடங்கள் கடந்த நிலையில் சையித் குத்ப் வாழ நேர்ந்த சமூக, அரசியல், கலாசார மற்றும் உலக ஒழுங்கை விட்டு அனைத்து வகையிலும் சேய்மைப்பட்ட ஒரு காலப் பகுதி மற்றும் உலக ஒழுங்கில் இந்நூலை மொழி பெயர்ப்பு செய்யும் போது எத்தகைய விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்?
சையித் குத்ப் பேசியிருப்பது இஸ்லாத்தின் உள்ளார்ந்த இயல்பை குறித்த மாறாத உண்மை என்பதால் 'இஸ்லாத்தின் சமூக நீதி' நூல் அனைத்து கால, இட, சூழல் பரிமாணங்களையும் கடந்த ஒன்று தான். ஆனாலும் அவர் வாழ நேர்ந்த உலக ஒழுங்கின் நிகழ்போக்குகள் குறித்த அவருடைய விமர்சனங்களை எங்களால் அப்படி அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே சீர்மை பதிப்பகம் சையித் குத்ப் மற்றும் இஸ்லாத்தின் சமூக நீதி நூல் மிக நுட்பமான ஒரு அறிமுக குறிப்பையும் இணைத்து வெளியிட்டுள்ளது. கூடவே தேவையான இடங்களில் மொழி பெயர்ப்பாளர் குறிப்புகளும் நூலை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டல்களை எமக்கு அளித்துச் செல்கிறது.
இதன் மூலமாக சையித் குத்பின் நூலை வாசகர்கள் விமர்சன பூர்வமாக கற்றுக் கொள்வதற்கான வாயிலை சீர்மை பதிப்பகம் அகலமாக திறந்து வைக்கிறது. இதைத் தான் பதிப்புலக புரட்சி என்கிறேன். இதனை ஏனைய தமிழ் இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகங்களில் கண்டு கொள்ள முடியவில்லை.
சீர்மை பதிப்பகத்தைத் தொடங்கி இம்மாதத்துடன் ஐந்தாண்டுகள் நிறைவுபெறுகின்றன.
இலக்கியம், அரசியல், இஸ்லாம், கோட்பாடு, சூஃபித்துவம், வரலாறு, அறிவியல், மெய்யியல், சினிமா, வாழ்வியல் எனப் பல்வேறு வகைமைகளின் கீழ் இதுவரை 175 தலைப்புகளில் நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நூலின் தேர்விலும் தரத்திலும் மிகுந்த கவனமெடுத்து, உழைத்துப் பிரசுரித்திருப்பதுடன், பல்வேறு உத்திகளை வகுத்துச் செயற்படுத்தி சீர்மையின் வெளியீடுகளைப் பரவலாக மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்திருக்கிறார்கள். அதன்வழி மக்களின் நன்மதிப்பை கணிசமாக ஈட்டியிருக்கிறார்கள்.
வருங்காலத்தில் சீர்மை மேலும் சிறப்புற இயங்குவதற்கு எமது ஆலோசனைகளும் விமர்சனங்களும் அவசியம் என்று உறுதியாக நம்பவதால் தான் இதனை எழுதுகிறேன்.
சீர்மை பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்! 🌺❤️🥰
செய்திகள், ஊடகங்கள் மீது கொண்ட ஆர்வம் பொதுவாக இலக்கியங்கள் மீது எனக்கு இருந்ததில்லை. இன்னும் அதன் மீது முழு ஆர்வமெல்லாம் எனக்கு வரவில்லை. ஆனால் வாசிப்பது பிடிக்கும். குறிப்பாக உண்மைகளை, வரலாறுகளை. எனவே Non Fiction-ஐ நோக்கியே எனது வாசிப்பு இருக்கும். நாவல்கள், காமிக்ஸ்கள், கவிதைகளைத் தேடிப் படிக்கும் பழக்கம் இல்லை. அதனாலோ என்னவோ எழுத்தாளர்களையும் பதிப்பகங்களையும் தேடிப் படிப்பதைவிட தலைப்புகள், பரிந்துரைகளின் அடிப்படையில் புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிப்பது என் வழக்கம். எனவே எனக்கு பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் கருத்தோ, ஈர்ப்போ இருந்ததில்லை.
இப்படிப்பட்ட என்னை ஒரு பதிப்பகம் ஈர்த்தது என்றால் அது சீர்மைதான். நட்பு வட்டம், ஊடக வட்டத்தின் மூலமாகவே சீர்மை எனக்கு அறிமுகம். பொதுவாகவே பெயர், லோகோ அதன் எழுத்து வடிவமைப்பு போன்றவற்றை நான் நன்கு கவனிப்பேன். சீர்மையின் லோகோவே என்னை முதலில் ஈர்த்தது.
மெய்ப்பொருள் இணையதளக் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்பதால், அந்த குழுவினரின் சீர்மை மீது தனி நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் அது வெளியிடும் நூல்கள், தேர்வு செய்யும் தலைப்புகள், மொழிபெயர்ப்புக்கு எடுக்கப்படும் நூல்கள் அனைத்திலும் ஒரு தனித்துவம் தெரிகிறது.
சீர்மை வெளியிட்டுள்ள சூபி கோட்பாடு, இஸ்லாமிய கொள்கைச் சார்ந்த புத்தகங்களை நான் வாசித்தது இல்லை. இத்தகைய நூல்களுக்காக நான் சீர்மை குறித்து இப்பதிவை எழுதவில்லை. (தற்போதைய சமூக சூழலில் இந்த Disclaimer ஐ வெளியிட வேண்டிய கட்டாயமும் என் பெயருக்கு உள்ளது)
இங்கு தமிழ் புத்தக உலகில் இதுவரை பேசவே படாத பல நூல்கள் சீர்மையின் வாயிலாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகியுள்ளன. மைய நீரோட்டத்தில் கலப்பதற்கும், வாசகர் வெளியைப் பெருக்குவதற்கும் இவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் நூல்கள், தலைப்புகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் பணிப்பது மேலும் சிறப்பு. குறிப்பாக “ஷர்ஜில் இமாம் பேசியது என்ன?, காசாவின் திருமணங்கள், ஒரு தலித் போராளி, மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம், நடுநிசி எல்லைகள், ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை, சமூகம்சார் கொள்ளையர்கள் போன்ற நூல்கள் என்னை தனிப்பட்ட முறையில் கவர்ந்தவை. இந்த அனைத்து நூல்களையும் நான் வாசித்து முடிக்கவில்லை. நூல் அறிமுகம், விமர்சனங்களைக் கேட்டு வாங்க விரும்பிய நூல்கள் இவை.
சீர்மையின் மற்றுமொரு சிறப்பிற்குரிய அம்சம் அதன் அட்டை வடிவமைப்பு. சகோதரர் அஸ்வத் ஸரியத்தியின் கை வண்ணத்தில் ஒவ்வொரு நூலின் அட்டைப்படமும் அவ்வளவு அழகாகவும் கருத்தாழம் மிக்கதாகவும் நூலின் சாரம்சத்தை விளக்குவதாகவும் இருக்கும். சீர்மை நூலை பார்த்தவுடன், “என்னை வாங்காம வீட்டுட்டு போறிங்களே..!” என்று அவை வாசகரை அன்போடு அழைப்பதைப்போல் இருக்கும்.
நாம் அதை வாங்கி வீட்டில் டிஸ்பிளேவில் வைத்தால்கூட அழகிய Art frame போன்று தெரியும். உதாரணத்துக்கு அன்றிருபத்தொன்றில், சித்தார்த்தன், அலங்கம், எல்லாம் E=mc2 மயம் போன்ற நூல்களின் அட்டைப்படங்களைச் சொல்லலாம். எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளைப் போன்று அட்டை வடிவமைப்பாளருக்கு கொடுக்க சொன்னால் நிச்சயம் சீர்மையின் அட்டைப்பட வடிமைப்பாளரையே நான் தேர்வு செய்வேன்.
நூல்களை அச்சிடுவதுடன் சீர்மை தனது பணியைச் சுருக்கிக்கொள்வதில்லை. மாதம் ஒரு நூலைத் தேர்வு செய்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்துகிறது. இதுவும் அதன் நூல்களை விளம்பரம் செய்வதற்காக நடத்தப்படும் நிகழ்வல்ல. பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்கள் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளன. அதேபோன்று சீர்மை அலுவலகத்தில் Read between lines மாதந்தொரும் ஒருங்கிணைக்கும் திரைப்பட, ஆவணப்பட திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வும் குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு. இவ்விரு நிகழ்வுகளிலும் பல்வேறு கொள்கைச் சித்தாந்தங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோணங்களில் கருத்துக்களை முன் வைப்பார்கள். அதற்கான சுதந்திரமும் அங்கு உள்ளது.
இது அல்லாமல் மேலும் பல்வேறு முன்னெடுப்புகளைச் சீர்மை செய்துகொண்டே இருக்கிறது. சீர்மை ஒரு பதிப்பகமாக மட்டுமின்றி ஒரு அறிவுசார் முற்போக்கு இயக்கமாக உருவெடுத்து நிற்கிறது. எளியவர்களால் எளிய மக்களின் எழுத்துக்களைப் பதிவு செய்யும் சீர்மையின் நூல்களை சிறந்த நூல்கள் என்று முன்னணி ஊடகங்கள் பரிந்துரைக்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி உள்ளது. இன்னும் பலருக்கு வாய்ப்பளித்து பல நூல்களை சீர்மை வெளியிட வேண்டும் என்பதே எனது விருப்பம். இது போன்ற ஒரு பதிப்பகம் தொடர்ந்து இயங்கவும் முன்னேறவும் மக்களின் ஆதரவும் அவசியம். இதை மக்களும் உணர வேண்டும்.
5 வது ஆண்டை நிறைவு செய்யும் சீர்மை அதன் பணியை இன்னும் சீரும் சிறப்புமாக செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
இஸ்லாமிய சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் செலுத்த ஆரம்பித்த காலகட்டங்களில் அதிகமதிகம் உதவிகள் செய்தது பள்ளிவாசல்கள் உடனான தொடர்புகள் மற்றும் புத்தகங்களுடனான நெருக்கங்கள்.குறிப்பாக சமூக மேம்பாட்டு அடிப்படையிலான வரலாற்று ரீதியிலான புத்தகங்கள். மேலும் பள்ளிகளில் சொல்லப்பட்ட வரலாறுகள் மற்றும் வரலாற்று ரீதியிலான புத்தகங்கள் என இந்த தொடர்புகள் பரந்து பட்ட ஒரு விசாலமான உலகை காட்டித் தந்தன.அந்தக் காலகட்டங்களில் இலக்கியச் சோலை, IFT, ஹிந்துஸ்தான் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்கள் மனதுக்கு மிக நெருக்கமானவைகளாக மாறி இன்னுமின்னும் அதிகமாக இஸ்லாமிய அறிவின் வாசல்களை திறந்து காட்டின.
சமூக மாற்றங்களுக்கான முன்னணி காரணங்களில் பிரதானமான ஒரு கருவி உண்மையைப் பேசும் புத்தகங்கள்தான். காலச்சூழல்கள் மாற்றமடைந்து கொண்டிருந்த தருணங்களில் அடுத்தகட்ட வாசகர்கள் மற்றும் தலைமுறைகளுக்கான புத்தகங்கள் தருவதில் இஸ்லாமிய சமூக பதிப்பகங்களிடையே ஒரு தேக்க நிலை உருவானது என்பது மறுக்க முடியாத உண்மை.குறிப்பாக தலைப்புகள், உள்ளடக்கங்கள், புத்தக முகப்பு அட்டை வடிவமைப்புகள் என எல்லாமே யாரையும் கவரும் வகையில் இல்லாமல் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உருவான சீர்மை பதிப்பகம் அந்த குறைகளை நீக்கி அனைவரும் வாசிக்கும் வகையிலான, அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையிலான எளிமையான தமிழ்நடை, சீரான மொழிபெயர்ப்பு, நல்ல தலைப்புகள் என தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டு இயங்கிக் கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.
சீர்மையின் வெளியீடுகள், அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவர்களின் அழகான முறைகள் என அனைத்துமே சிறப்பு. இனி வரக் கூடிய காலங்களில் இந்திய முஸ்லீம் சமூகத்தின் வாழ்வியல்கள், அவர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகள் என அதிகமதிகம் புத்தகங்களை வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.அதோடு சிறு, குறு புத்தகங்கள், இஸ்லாமிய வரலாற்றுப் புதினங்கள் என தொடர்ந்து சீர்மை இயங்க அதிகமதிகம் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
பதிப்பகம் என்பது அதன் நோக்கத்திலும் தன்மையிலும் நூலகத்திற்கு ஒப்பானதாகும். நூலகத்தினுடைய தனித்தன்மையில் ஒன்று அது பல்வேறு தலைப்புகளை கொண்ட நூல்களை தன்னுள் உள்ளடக்கி இருக்கும்.
மேலும் நூலகம் மனிதர்களை சாதி,சமய, மொழி, இனம், தேச வேற்றுமைகள் கடந்து இணைக்கும் பாலமாக இருக்கும். மேலும் அதன் நூல்கள் ஒரு சேர வரலாற்றையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பிரதிபலிக்க கூடியவையாக இருக்கும்.
அந்த வகையில் ஒவ்வொரு பதிப்பகமும் கூட தன்னளவில் ஓர் நூலகம் தான். அது நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும். அது ஓர் அறிவு உலகம். அங்கு அனைத்தும் அறிவால் தான் உருவாக்கப்பட்டிருக்கும்.
சில நேரங்களில் அது அன்பைக் கற்பிக்கும், சில நேரங்களில் இரக்கத்தைக் கற்பிக்கும், சில நேரங்களில் நம் கற்பனை சிறகை விரித்துவிடும், சில நேரங்களில் சமூக நீதியைக் கற்பிக்கும், பல நேரங்களில் நம் முகத்தில் அறைந்து நம் சுயநலத்தை காட்டும். அதனால் தான் நல்ல நூல் ஒன்று ஆயிரம் நண்பனுக்கு சமம் என்றும் ஓர் கூற்று உண்டு.
என்றாலும் இன்று ஒவ்வொரு பதிப்பகமும் குறிப்பிட்ட ஒரு கருத்தியலை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. அதன் காரணமாக அதன் நூல் தெரிவுகள் மட்டுப்படுத்தப்படுகின்றது. எவ்வளவு விசாலமானதாகவும் ஆழமானதாகவும் அவர்கள் கொண்டிருக்கும் சித்தாந்தம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப தான் அந்த பதிப்பகத்தில் இருந்து வெளிவரும் புத்தகங்களின் தன்மையும் இருக்கும்.
இந்த குறுங்குழுவாதப் போக்குகளை கடந்த சில இஸ்லாமிய பதிப்பகங்கள் தமிழில் நேர்வழி நின்ற நல்ல அறிஞர்களின் நூல்களை கொண்டுவந்துள்ளனர்.
அதில் குறிப்பாக இலக்கியச் சோலை பதிப்பகம், இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் பதிப்பகம், பியூசின் டெக்ஸ்ட்ஸ், மெல்லினம் பதிப்பகம் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
அந்த வகையில் தமிழகத்தில் இது காலம் வரை வந்த பதிப்பகங்களிலேயே தனது எல்லையை மிகவும் விசாலப்படுத்தி, ஆழமான தன்மையில் நூல்களை கொண்டு வரும் ஒரு பதிப்பகமாக சீர்மை பதிப்பகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அது நூல்களை கொண்டு வரும் விதம் நூலகத்திற்கு ஒப்பாக மொழி கடந்து இனம் கடந்து சமய மாட்சிமை கடந்து உள்ளது.
மேலும் சீர்மை பதிப்பகத்தின் பிரத்தியேக தனித்தன்மை என்னவெனில் சீர்மை பதிப்பகம் இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளான சன்னி ஷியா சுஃபி சலஃபி தேவ்பந்தி பரேலவி போன்ற அனைத்துவித குறுங்குழு வாதத்தையும் கடந்து மரபார்ந்த இஸ்லாமிய சிந்தனையையும் நவீன இஸ்லாமிய சிந்தனைகயையும் உள்வாங்கியுள்ளது.
இதன் காரணமாக சீர்மையால் கருத்து வேறுபாடு என்னும் எல்லையை கடந்து பல்வேறு சிந்தனை பள்ளிகளைச் சார்ந்த நூல்களை அதனால் வெளிக்கொணர முடிகிறது.
மேலும் சீர்மை குழு தேசிய சர்வதேசிய அரசியல் விவகாரங்கள் குறித்தும் அற உணர்வுடன் நூல்களை தேர்ந்தெடுத்து வெளியிடுகிறது. இந்த துறையில் வெளியிடப்படும் சீர்மையின் நூல்கள் தமிழ் கூறும் நல்லுலகில் ஓர் முக்கியப் படிக்கலாக இருக்கும்.
பல்வேறு நாட்டின் நாவல்கள், ஷஹீத் சையித் குதுப் (ரஹ்) அவர்களின் குர்ஆன் விரிவுரை மற்றும் இஸ்லாத்தில் சமூகநீதி, சூஃபித்துவ நூல்கள், சுந்தர் சருக்கை அவர்களின் அறிவியல் என்றால் என்ன, சுசித்ரா விஜயன் அவர்களின் நடுநிசி எல்லைகள், அம்பேத்கர் அவர்களின் தீண்டப்படாதர் மற்றும் விடுதலைக்கு என்ன வழி, பெரியாரின் குறிப்பிட்ட பேச்சுகள் அடங்கிய இஸ்லாம் பற்றி பெரியார், நிஷாந்த் அவர்களின் பின் காலனிய நினைவீக்கம், ம.சிங்காரவேலு அவர்களின் சுயராஜ்யம் யாருக்கு, மாலிக் பத்ரி (ரஹ்) அவர்களின் உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு, மௌலானா ரூமியின் ஃபீஹி மா ஃபீஹி: ரூமியின் ஞானப் பேருரைகள், அபுல் அஃலா மௌதூதி அவர்களின் ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும், ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன, அலீ ஷரீஅத்தி அவர்களின் ஹஜ் இஸ்லாத்தின் இதயம் போன்ற நூல்கள் மிகவும் தாக்கம் செலுத்தக்கூடியவை.
பொதுவாக இஸ்லாமை ஆழமாக விளங்கிக் கொள்வதற்கு முதல் தர மூலாதாரமாக இருப்பது மதரஸாக்கள் தான்.
மதரசாக்கள் இஸ்லாமை விளங்கிக் கொள்வதற்கு போதுமான அடிப்படைகளை வழங்குகிறது. மதரஸாக்களின் நோக்கம் குர்ஆன் சுன்னாவை அதற்குரிய முறையில் விளங்கி செயல்படும் ஆலிம்களை உருவாக்க வேண்டும் என்பது தான்.
ஆரம்ப சில வருடங்கள் பிரத்யேகமாக அரபி மொழிக்காக ஒதுக்கப்படுகின்றது. அதன் பிறகு ஹதீஸ் கலையின் அடிப்படைகள் குரான் விரிவுரை அடிப்படைகள், சட்டத்துறை அடிப்படைகள் மற்றும் ஹதீஸ் விரிவுரைகள் குர்ஆன் விரிவுரை போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
மதரஸா கல்வி ஆண்டிற்குள் அப்பாடத்திட்டங்களை நடத்துவதற்கு நேரம் மிக நெருக்கடியாக தான் இருக்கும். எனவே, இஸ்லாத்தின் அனைத்து துறைகளையும் கற்கவேண்டும் எனில் அடிப்படையான ஐந்து அல்லது ஏழு வருடங்களுடன் மேலும் பல வருடங்கள் கற்கவேண்டும்.
எனவே அடிப்படையான ஐந்து அல்லது ஏழு வருடங்களில் மதரஸாக்களில் வரலாற்றுப் பாடங்கள், குர்ஆனிய விளக்க உரையின் தொகுப்புகள், மேலும் பல சிந்தனை பள்ளிகளின் வரலாறு பற்றிய பாடங்களை முழுமையாக ஆழமாக நடத்துவதற்கு நேரமும் இருக்காது. ஒருகால் அதற்கு தகுந்த பேராசிரியர்கள் இருந்தாலும் குறித்த காலத்திற்குள் முழு மார்க்க ஞானங்களையும் உள்வாங்கிக் கொள்வதற்கான பக்குவத்தை மாணவர்கள் பெற்றிருப்பதும் அரிதாகவே இருக்கும்.
மேலும் பதிப்பகங்கள் போன்றே ஒவ்வொரு மதரஸாக்களும் ஒவ்வொரு சித்தாந்த பள்ளிகளை மையப்படுத்தி இயங்குவதால் அதிலிருந்து வெளிவரும் ஆலிம்களும் குறிப்பிட்ட சித்தாந்தத்தை மட்டுமே கற்றவர்களாக அதன் மீது மட்டுமே பற்று கொண்டவர்களாக வெளிவருகின்றனர்.
எப்படி பதிப்பகங்கள் ஒவ்வொரு சித்தாந்தத்தை மையப்படுத்தி இயங்குகின்றனவோ அது போலவே மதரஸாக்களும் இயங்கி வருவதால் இஸ்லாத்தின் விசால தன்மையை விளங்கிக் கொள்வதில் மதரஸாக்களில் இருந்து வெளிவரும் ஆலிம்கள் தடுமாறுகின்றனர். இதன் காரணமாக குறுங்குழுவாத பிரிவினைகளுக்கு ஆலிம்களே காரணமாகும் நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறுங்குழு வாதங்களைக் கடந்து இறையியல், ஆன்மீகம், அரசியல், சமூகவியல், பொருளியல், அறிவியல், வரலாறு ரீதியாகவும், உளவியல், இலக்கியம், வாழ்வியல், சமய நூல்கள் போன்ற பல்கலை நூல்களைக் கொண்டுவரும் சீர்மையின் நூல்களை வாசிக்கும் ஒரு ஆலிம் கூட சீர்மை பதிப்பகத்தை இன்னொரு மதரஸாவாக உணர்வார். அந்த அளவு சீர்மை நூல்களின் கருத்து செறிவு உள்ளது.
இதன் மூலம் தனது இஸ்லாமிய அறிவை செழுமைப்படுத்திக் கொள்ளும் ஆலிம் தரப்பு உருவாகும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
சீர்மை பதிப்பகத்தின் தனித்தன்மைகளில் மற்றொன்று அது இஸ்லாமிய சிந்தனை பள்ளிகள் மற்றும் பல்வேறு சமய சிந்தனைகளின் கருத்துக்களை அதன் மூல கர்த்தாக்களிடமிருந்து நேரடியாக மொழிபெயர்த்து கொண்டு வருகின்றன என்பது ஆகும்.
அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும், சித்தாந்தங்களின் ஆணிவேராக கருதப்படும் சிந்தனையாளர்களிடமிருந்து நேரடியாக நூல்கள் மொழிபெயர்க்கப்படுவது சீர்மை குழுவின் அறிவு நேர்மையை நம்பகத்தன்மையை கூட்டுகிறது.
தானத்தில் சிறந்த தானம் ஞான தானம் என்பது சான்றோர் கூற்று. இன்றைய அறிவு வறட்சி சூழலில், அறிவு வறுமையை போக்கும் சீரிய பணியை சீர்மை பதிப்பகம் தொய்வின்றி செய்வது காலத்தின் தேவை.
சமூக மாற்றத்திற்கான அடிப்படையாக கல்வி சீர்திருத்தத்தைத் தான் அறிஞர் கலீம் சித்தீகீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள். நடுநிலை சிந்தனையுடன் இஸ்லாமை அணுகுவதற்கும், தனிமனித குடும்ப சமூக தேச மற்றும் நவீன சிக்கல்களைக் குர்ஆனியக் கண்ணோட்டத்தில் அணுகுவதற்குமான பயிற்சிப் பட்டறையாக சீர்மைப் பதிப்பகம் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த சீர்மை எனும் ஞான ஊற்றை வாழ்த்துகிறேன்.
சீர்மைக் குழுவினருக்கும் அதன் வாசிப்பாளர்களுக்கும் அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்வானாக ஆமீன்.
மேலும் சீர்மை எனும் விதையை அல்லாஹ் விருட்சமாக்கி, கியாமத் நாள் வரை அதன் கனியை நீட்டிப்பானாக ஆமீன்.
சீர்மை பதிப்பகத்தின் ஐந்தாண்டு நிறைவையொட்டி இப்பதிவை எழுதுகிறேன். எழுத்துக்கு உரமூட்டி உயிரூட்டும் பணியை அவர்களது அணி கட்சிதமாக செய்துவருகிறனர். 2026 இல் எனது நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை அவர்கள் தமிழ் பேசும் நல்லுலகுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதில் மூன்று நூல்கள் இலங்கையில் பல பதிப்புகளைத் தாண்டியவை. புதுவரவாக "உள நோய்களும் நிவாரணங்களும்" என்ற நூல் அல்லாஹ்வின் அருளால் எனது எழுத்துப் பயணத்தில் 45 ஆவது நூல் என்பது மேலதிக தகவல்.
உண்மையில் சீர்மை வெளியீடுகள் இஸ்லாம், கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம், அரசியல் என பல்துறை சார்ந்த தளங்களை கொண்டியங்குகின்றன. அவர்கள் தெரிவுசெய்யும் நூல்கள் அலாதியானவை. மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் நூல்கள்கூடப் பெறுமதியானவை. புத்தகத்தை எழுத்துருப்படுத்துதல், மொழிச் செம்மை, வெளியீடு என அனைத்திலும் அவர்கள் ஒரு தரத்தை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். புத்தகங்களின் அகப்பக்கமும் முகப்பக்கமும் மிகச்சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பது வாசகர்களை இன்னும் கவர்ந்திழுக்கக் காரணமாக இருக்கின்றன.
இந்திய இஸ்லாமிய புத்தக வெளியீட்டகங்களில் எனக்கு மிகவும் பரீட்சயமானவை IFT, மற்றும் இலக்கியச் சோலை ஆகிய பதிப்பகங்கள். அவற்றின் வெளியீடுகளை நான் மாணவனாக (2003 காலங்களில்) இருந்த காலத்திலிருந்தே மிக ஆவலோடு வாசிப்பவனாக இருந்தேன். ஆனால் தற்போது இவ்விடத்தை சீர்மை பதிப்பகம் மிகைத்திருக்கின்றது என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. இதற்கு புத்தகத்தின் தலைப்பு, உள்ளடக்கம், வெளியீடு, கவர்ச்சி என அனைத்திலும் தரம் (Quality) பேணப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும்.
இன்ஷாஅல்லாஹ் சீர்மையின் பயணம் இன்னும் வியாபித்து தமிழ் பேசும் உலகின் ஜாம்பவானாக வளர வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
இவ்வாறு குறுகிய காலத்தில் -குறைந்த வளத்துடன்- சீர்மை அடைந்திருக்கும் வளர்ச்சி மெச்சத்தக்கது; பாராட்டத்தக்கது. பல்வேறு இயங்கு தளங்களில் அவர்கள் பயணித்தாலும் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு தளத்தை இங்கே தாழ்மையோடு நினைவுபடுத்த விரும்புகிறேன். குறிப்பாக "இஸ்லாமிய சிறுவர் இலக்கியம்" தொடர்பான வெளியீடுகளில் அவர்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது பேரவா. இது அவர்களுடைய வெளியீட்டு ஸ்கோபுக்குள் உள்ளடங்குகின்றதோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இத்துறையில் கவனம் செலுத்தினால் நிச்சயமாக தரமான, எமது சிறார்களுக்கு தேவையான வெளியீடுகளை அவர்கள் கொண்டு வருவார்கள் என்பது அசையாத நம்பிக்கை. இந்த வகையில் அல்லாஹ் அவர்களது பணியை இலகுபடுத்திக் கொடுப்பானாக! இந்தப் பாதையில் நாட்டுக்கும் சமூகத்துக்கும் தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெரும் பங்காற்றுகின்ற அருட்பாக்கியத்தை வழங்குவானாக!
“நிச்சயமாக மனிதர்களிலே மிகச் சிறந்தவர் அடுத்த மனிதர்களுக்கு சிறந்தவராவார்” என்று நபிமொழியை நினைவுபடுத்தி நிறைவுசெய்கிறேன்.
- Dr Ashker Aroos (Naleemi)
21.01.2026
ஒரு சமூகத்தின் அடையாளம் அதன் கட்டிடங்களிலும் அதிகாரங்களிலும் இல்லை அது அந்த சமூகத்தின் சிந்தனைத் தரத்தில் இருக்கிறது. சிந்தனை உயர்ந்தால் சமூகம் உயரும் சிந்தனை தாழ்ந்தால் சமூகமும் தாழும். வரலாறு முழுவதும் இதை நமக்கு உணர்த்தி வந்திருக்கிறது. வெளிப்புற வளர்ச்சியை விட, உள்ளார்ந்த சிந்தனை வளர்ச்சியே ஒரு சமூகத்தின் உண்மையான முன்னேற்றமாகும்.
அந்த சிந்தனையை உருவாக்கும் மிக முக்கியமான கருவி புத்தகம். புத்தகம் வெறும் தகவல்களை வழங்கும் ஊடகம் அல்ல அது மனிதனை சிந்திக்க வைக்கும் சக்தி ஒரு நல்ல நூல், வாசகனை அவனுடைய பழக்கப்பட்ட எண்ணங்களிலிருந்து வெளியே கொண்டு வந்து, புதிய கேள்விகளை எழுப்புகிறது. அந்த வகையில், இன்று என் பார்வையில் தனித்துவமாகவும் உறுதியாகவும் நிற்கும் பெயர் சீர்மை பதிப்பகம்.
6ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் சீர்மை, ஒரு பதிப்பகமாக மட்டுமல்லாமல், ஒரு சிந்தனை இயக்கமாக மாறியிருக்கிறது என்பதே உண்மை
வெறும் நூல்கள் வெளியிடுவதற்காக அல்ல, வாசகனின் சிந்தனைப் பரப்பை விரிவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் அமைப்பாக அது வளர்ந்திருக்கிறது. இன்றைய காலச் சூழலில் இது ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இன்றைய உலகில் வாசிப்பு பழக்கம் மெதுவாக குறைந்து வருகிறது என்ற கவலை அனைவரிடமும் உள்ளது. வேகமான வாழ்க்கை, சமூக ஊடகங்களின் தாக்கம், உடனடி தகவல்களுக்கு பழகிவிட்ட மனநிலை ஆகியவை ஆழமான வாசிப்பை பின்தள்ளி வருகின்றன. ஆனால் அந்தக் கவலையை பேச்சோடு நிறுத்தாமல், அதை செயல்பாடாக மாற்றுவது தான் உண்மையான பங்களிப்பு. அந்த வகையில், சீர்மை தொடர்ந்து தரமான நூல்களை வெளியிட்டு, வாசகனை மீண்டும் வாசிப்பின் பக்கம் திருப்பும் பணியை செய்கிறது.
சீர்மை வெளியிடும் நூல்கள் வெறும் தகவல்களை மட்டும் தருவதில்லை. அவை வாசகனுக்குள் கேள்விகளை எழுப்புகின்றன, சிந்திக்க வைக்கின்றன, சில நேரங்களில் மனதை உலுக்கும் அளவுக்கு உண்மைகளை நேரடியாக எதிரில் நிறுத்துகின்றன. வாசகனை வசதியாக வைத்திருக்க முயலும் எழுத்துகள் அல்ல உண்மையை எதிர்கொள்ளத் தயாராக்கும் எழுத்துகள் அவை.
6 ஆண்டுகள் என்பது எளிதான பயணம் அல்ல, குறிப்பாக சிந்தனை சார்ந்த நூல்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு பதிப்பகத்திற்கு. இந்த காலப்பகுதியில் சீர்மை எடுத்துக்கொண்ட பாதை மிகவும் தெளிவானது. விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிந்தனையை சமரசம் செய்யாமல், தரத்தையே முதன்மையாகக் கொண்டது. அதனால்தான் சீர்மை வெளியிடும் நூல்கள் ஒரே முறை வாசித்து மறந்து விடும் வகையிலானவை அல்ல. அவை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும், காலம் கடந்தாலும் பொருள் இழக்காத நூல்களாக இருக்கின்றன.
சீர்மை பதிப்பகத்தின் நூல்களில் காணப்படும் முக்கிய அம்சம், அவை தனிப்பட்ட ஒருவரின் சிந்தனை வளர்ச்சியோடு மட்டுமல்லாமல், சமூக மாற்றத்துடனும் தொடர்புடையவை என்பதே. வாசகனை ஒரு தனிமனிதனாக மட்டும் பார்க்காமல், சமூகத்தின் ஒரு அங்கமாக உணர வைக்கின்றன. “நான் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியை வாசகனுக்குள் எழுப்பி, சிறிய மாற்றங்களும் பெரிய விளைவுகளை உருவாக்கும் என்பதை உணர்த்துகின்றன.
இதுவே புரட்சிகர சிந்தனையின் அடிப்படை. பெரிய கோஷங்களோ, சத்தமோ இல்லாமல், அமைதியாக மனங்களில் நிகழும் மாற்றமே நிலையான புரட்சி. அந்த அமைதியான புரட்சியை சீர்மை தனது நூல்களின் வழியாக தொடர்ந்து செய்து வருகிறது.
சீர்மை வெளியிடும் நூல்கள் வரலாற்று உண்மைகளையும் சமூக அனுபவங்களையும் இணைத்து பேசுகின்றன. வெறும் கருத்துக்களாக இல்லாமல், ஆதாரங்களோடும் அனுபவங்களோடும் வாசகனிடம் உரையாடுகின்றன. இதனால் ஒரு விஷயத்தை ஒரே கோணத்தில் அல்ல, பல கோணங்களில் புரிந்து கொள்ளும் திறன் வாசகனுக்குள் வளர்கிறது. இன்றைய உலகில் இந்தப் பார்வை மிகவும் அவசியமானது.
அறிவு என்பது தகவல் மட்டும் அல்ல, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதே முக்கியம். சீர்மை நூல்கள் அறிவை சுமையாக மாற்றாமல், வழிகாட்டியாக மாற்றுகின்றன. வாசகன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்துகொள்ளவும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராகவும் இந்த நூல்கள் உதவுகின்றன. அதனால் தான், சீர்மை புத்தகங்கள் வெறும் வாசிப்புக்கானவை அல்ல அவை வாழ்க்கையோடு இணைந்த பயணங்கள்.
என் பார்வையில், சீர்மை பதிப்பகம் ஒரு அமைதியான ஆனால் ஆழமான தாக்கத்தை உருவாக்கி வருகிறது. அது உடனடி மாற்றத்தை வாக்குறுதி தரவில்லை. ஆனால் நீண்ட காலத்தில் நிலையான மாற்றத்தை உருவாக்கும் விதைகளை விதைக்கிறது.
5 ஆண்டுகள் என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. சிந்தனையை நேசிக்கும், வாசிப்பை மதிக்கும் அனைவருக்கும், சீர்மை பதிப்பகம் எதிர்காலத்திற்கான ஒரு வலுவான நம்பிக்கையாக திகழ்கிறது.
சீர்மை பதிப்பகம் ஐந்தாண்டுகளை கடந்து விட்டது. அதன் வாசிப்பாளரான என்னிடத்தில் நல்லதொரு தாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. கடந்த கால வரலாற்றை நவீன சிந்தனைகளோடு அணுகும் தவறான கண்ணோட்டத்தை விலக்கியதோடு தேசியவாதம், நவீனத்துவம், காலனியம், காலனிய நீக்கம், செக்யூலரிசம் போன்ற சிந்தனைகளை சரியாக விளங்கிக் கொள்ள சீர்மை பதிப்பின் புத்தகங்கள் உதவியிருக்கிறது. இச்சிந்தனைகளை விளங்கியதன் வாயிலாக மொழி, இனம், குலம் போன்றவைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ய அனைத்து வாய்ப்பு இருந்த போதிலும் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற தவ்ஹீத் நெறி மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மாவை கட்டி எழுப்பியதன் காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்றைய பொருள்முதல்வாத சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் அடைய முடியாத எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்ளாமலும் அதனையே இலக்காக இல்லாமல் பயணிப்பதிலும் இச்சிந்தனைத் தெளிவு பெரிதும் உதவி இருக்கிறது.
சீர்மை பதிப்பின் நூல்களில் என்னுடைய முதல் வாசிப்பு சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹ் என்ற நூலாகும். வெறும் கால் நூற்றாண்டில் பெரும் மாற்றங்களை சமூக ஊடகங்கள் சமூகத்திலும் தனி நபரிடத்திலும் நிகழ்த்தி இருக்கின்றன. முதல் தலைமுறையாக சமூக ஊடகங்களை கையாள்வதில் உள்ள சவால்களையும், சக மனிதர்களோடு உறவாடுவதில் ஏற்பட்ட மாற்றங்களையும், வழிகாட்டல்களையும் அந்நூல் எனக்கு வழங்கியது.
நவீன சிந்தனைகளின் குழப்பங்கள் இருந்து மனதை தூய்மை அடைய செய்ய தஸவ்வுஃப் கலையை மாற்றாக உணர முடிகிறது. சீர்மை பதிப்பின் தஸவ்வுஃப் சார்ந்த நூல்கள் அக்கலையை சரியான முறையில் அறிந்து கொள்ள பெரிதும் உதவியது.
தமிழ் முஸ்லிம் பரப்பில் அறியப்படாத ஃபார்ஸி, துருக்கி, உருது மற்றும் அரபு இலக்கியம் சார்ந்த சமகால நூல்களின் மொழிபெயர்ப்புகள் காலனியத்துவத்திற்கு பிறகான சமூகங்களை உணர்ந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. மேலும் சீர்மை பதிப்பகத்தின் நூல்கள் அரசியல், சினிமா இலக்கியம் போன்ற பல்வேறு தளத்தில் உருவாக்கி வைத்திருக்குsம் விவாதக்களம் பயனுள்ளதாக உள்ளது. ஐந்து ஆண்டுகளைக் கடந்து நல்லதொரு பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கும் சீர்மைக்கு எனது வாழ்த்துகளையும் மென்மேலும் சிறக்க எனது பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீர்மை.. அந்தப் பெயர்தான் அதனுடனான தொடர்புக்கும் , தொடர்ந்து அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்குமான புதிய உத்வேகத்தை கொடுத்தது எனச் சொன்னால் அது மிகையல்ல. சீர்மை, செம்மை, சீர்படுத்துதல், சீர் போன்ற தமிழ் சொற்களுக்கு ஒரு தனித்த ஆற்றல் உண்டு. இதை யார் நடத்துகிறார்கள் என்று அறியாத ஆரம்ப காலகட்டத்தில் இப்பெயரை வைத்து தீவிர தமிழ் பற்றாளர்களின் பதிப்பகம் என நான் எண்ணியதுண்டு.
சீர்மையில் ஆரம்பம் முதலே அதனுடைய தலைப்பு, அட்டைப்படம், தனித்துவமான ஆக்கங்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு புத்தகங்களை வாங்கிக் குவிக்கத் துவங்கியதுண்டு. தொழில் செய்து கொண்டிருந்த காலத்தில் எனக்கிருந்த பொருளாதாரச் சுதந்திரத்தின் காரணமாக நிறைய புத்தகங்களை அப்போது வாங்கிக் குவித்தேன்., அவற்றை வாசித்தேன்.., அவற்றிற்கு விமர்சனம் எழுதினேன். பலருக்கு பரிந்துரையும் செய்தேன்.
பொதுவாகவே எனது நண்பர்கள், தொடர்பு வட்டங்களில் நான் மிக உறுதியாக சொல்வதுண்டு. சீர்மை தமிழ் இலக்கிய உலகில் , குறிப்பாக முஸ்லிம்களின் வாழ்வியல், அரசியல், இலக்கியம், வழிபாடுகள், சூஃபி மரபு ஆகிய தளங்களில் குறிப்பிடத்தக்க தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறது. கால் நூற்றாண்டு இங்கே ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடத்தை சீர்மை நிரப்பியிருக்கிறது என்பேன். அது அத்தனை உண்மையானதும் கூட.
செய்யது குதுஃபின் தஃப்ஸீரில் தொடங்கி அவரது ஆத்மானந்தங்கள் வரை, ஈரானிய , பாகிஸ்தானிய , ஜப்பானிய என புதிய புதிய நாவல்கள், சிறுகதைகள், அரசியல் ஆக்கங்கள் என சீர்மையின் பணிகள் தமிழ்கூறும் நல்லுலகில் தனித்துவமானவை பாராட்டத்தக்கவை. சீர்மை பதிப்பகம் முன்னெடுக்கும் மற்றொரு மகத்தான பணி ஒவ்வொரு மாதமும் இணையதளம் வாயிலாகவும் அலுவகத்திலும் வாசகர் வட்டத்தின் மூலம் கூட்டங்களை ஒருங்கிணைப்பதுதான். இவை புதிய வாசகர்களுக்கு ஒரு பூந்தோட்டத்தின் கதவுகளை திறந்துவிடும் போற்றுதலுக்குரிய பணி இது.
அதேபோல சீர்மையின் பதிப்பகத்தின் புத்தகக் காட்சி அரங்கமும் வாசகர்களிடையே கவனம் பெற்றது. அதற்கென்று தனி ரசிகர்கள் உண்டு.
எனது அலமாரியில் இலக்கியச் சோலை, சீர்மை மற்றும் தேசாந்திரி பதிப்பகங்களுக்காக தனி சிறிய அறைகளை அமைத்திருக்கிறேன். சீர்மை இன்னும் வீரியத்தோடும், தனித்தன்மையோடும், அதே சமூக சிந்தனையோடும் செயல்படும் அதேவேளையில் சமகால ஜென்சி தலைமையினரும் கவர்வதற்கான மிகப்பெரிய சவால் உங்களுக்கு உண்டு. அதனையும் சீர்மையோடு செய்வீர்கள் என நம்புகிறேன். புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான பணிகளை ஜனரஞ்சகப்படுத்துங்கள், சிறார் இலக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், கவிதை மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரிய பாடல் கலாச்சாரத்தை மீட்டெடுங்கள். தனித்த வட்டார வழக்குடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களின் வாழ்வியலை புனைவுகளாக்கி பொதுமைப்படுத்துங்கள்.
மலையாள வாசகர்களுக்கு எதார்த்தமாகிப்போன ஒரு இஸ்லாமிய வாழ்வியலை தமிழ் வாசகர்களுக்கும் எதார்த்தமாக்குங்கள். எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள். எனது சிறிய முயற்சி உங்களது பணிகளில் துரும்பையேனும் எடுத்துப் போடுமெனில் மிக நிச்சயமாக அதனை செய்கிறேன். இணைந்து பயணிப்போம். முயற்சி திருவினையாக்கும். புதியதோர் உலகம் படைக்கலாம். இலங்கையை தொடர்ந்து தமிழ் முஸ்லிம் இலக்கிய உலகிற்கு புதிய வரவாக வந்து தனக்கென தனித்த இடத்தை பிடித்திருக்கும் சீர்மைக்கும் அதன் பின்னால் இருந்து உழைத்து வரும் அத்தனை நண்பர்கள், தோழர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்..!
- ச. அகமது
பத்திரிகையாளர்
21.01.2026
சென்னை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல், கருத்தின் அலகு கவர் போட்டோவிலேயே தெரியும் என்பது சீர்மை பதிப்பகத்தின் சீர்மைகளில் ஒன்று.
கண்டதையும் படித்து கருத்தியல் கம்பு சுற்றும் ஓர் கருத்தியல் பிரசங்கி அதி பிரசங்கியாகும் நேரத்தில் Stop Stop... வாசிப்பிற்கு என்று ஓர் அதபு இருக்கிறது; அது அகத்தின் அஹ்லாக்காக கருகொள்ளும்; புறத்தை சீர்மைப் படுத்தும் என்பதை சூஃபிய இளையில் மெல்லிய ஸ்பரிசம் போல் வருடி, இதமாக மிதமாகச் சொல்லாமல் சொல்கின்றன சீர்மை வெளியீடுகள்.
இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவாம்.
எதாவது உருப்படியாக செய்யலாம் என்று அருமை சகோதரர் உவைஸ் அவர்களிடம் பேசினால், நல்ல விடயம்.. தங்கள் சிந்தனைனய மதிக்கிறேன், திறந்த மனதுடன் வரவேற்கிறேன், எனக்கு Bandwidth இல்லை என்று சகோ உவைஸ் கூறும்பொழுது, நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான் உருப்படியான செயல்போல என எண்ணிக்கொண்டாலும், ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டுமே என ஆசையில் நண்பர்களுக்கு சீர்மை பதிப்பக புத்தகங்களை வாங்கிப் பரிசளித்து அறிவைப் பரப்பும் புனிதப் பணியில் பங்காளனாகி விடுவதும் உண்டு.
Bandwidth இல்லை என சகோ உவைஸ் சொல்லும் அந்த வார்த்தையில் எவ்வளவு கமிட்மன்டாக தன் பணியை நேசிக்கிறார்; கவன சிதறல் நடந்துவிடக் கூடாது என்று இயங்கும் சீர்மை தோழர்கள் கடந்த 5 ஆண்டுகளில் 175க்கு மேற்ப்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை அறிவுலகிற்க்குக் கொடையாகத் தந்திருப்பது வியப்பளிக்கிறது; அதுவும் குறுகிய எல்லைக்குள் சுழலாமல்.
பரந்து விரிந்து கருத்தியல் தளத்தில், தணக்கெண தணி ஒர் தடம் பதித்து, வாசிப்பு அரிதாகிப் போன காலத்தில் ஓர் பதிப்பகத்தை லாப நோக்கம் இன்றி, சமூகக் கடமையாய் எண்ணி, பல்வேறு யுக்திகளின் வழி தனித் தன்மையுடன் திறம்பட இயங்கும் சீர்மை பதிப்பக தோழர்களுக்கு ஓர் வாசகனாய் நன்றிகள் பல.
உற்சாகமாக உங்களுடன் நாங்கள் துணை நிற்ப்போம்.
அறிவுத் தீ பரவட்டும் - அது சமூக சீர்கேடுகளைக் களைந்து, சமூகத்தைச் சீர்மைப் படுத்தட்டும்.
நன்றி
துரை. அப்பாஸ்
முதன் முதலாக சென்னை புத்தகக் காட்சியில் அதன் கலைநயமான வேலைப்பாடுகளுக்காக என்னை கவர்ந்த பதிப்பகம் சீர்மை.
“அடடா… வித்தியாசமாக இருக்கிறதே!” என்று நானும், என்னுடன் வந்த பல மாணவர்களும் சொல்லிக்கொண்டே அந்த அரங்கிற்குள் நுழைந்தோம். ஆனால் உள்ளே சென்ற பிறகுதான் புரிந்தது—வித்தியாசமாக இருந்தது அரங்கு மட்டுமல்ல; அங்கே வீற்றிருந்த புத்தகங்களும் தான்.
நேர்த்தியான அட்டை வடிவமைப்பு, அழகிய எழுத்துருக்கள், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள்—எல்லாமே அந்த புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆசையை இயல்பாகவே உருவாக்கின. இது வெறும் வெளிப்புற அழகோடு நின்றுவிடவில்லை; உள்ளடக்கத்திலும் அதே அளவு ஆழமும் செறிவும் இருந்தது.
இந்த ஆண்டைத் தவிர்த்து சென்ற இரண்டு ஆண்டுகளிலும், இஸ்லாமிய அடிப்படையிலான அவசியம் வாங்கியே ஆக வேண்டிய பல முக்கிய நூல்களை சீர்மை அரங்கு தொடர்ந்து வழங்கி வந்துள்ளது. குறிப்பாக, தமிழ் மொழியில் சூபியிசத்தின் வெற்றிடத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் நிரப்பிய பெருமை சீர்மை பதிப்பகத்துக்கே உரியது என்று சொன்னால் அது மிகையல்ல.
மிகக் குறிப்பாக, ரமீஸ் பிலாலி அவர்களின் மொழிபெயர்ப்புகளை சீர்மை பதிப்பகம் மிக நேர்த்தியாகவும் வாசகனுக்கு எளிதில் சென்று சேரும் வகையிலும் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. முல்லாக்கள் பற்றிய அறிமுக நூல்களிலிருந்து இறைநேசர்கள், ஞான மரபுகள், ஆன்மீகப் பாதைகள் பற்றிய விரிவான உரையாடல்கள் வரை—பல புத்தகங்கள் ஒரு முறையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளன.
சீர்மை பதிப்பகம் வெறும் புத்தகங்களை வெளியிடும் நிறுவனம் மட்டுமல்ல.
அது ஒரு அறிவுப் பயணத்தை வாசகனுக்குத் தொடங்கிவைக்கும் அமைப்பு.
அது ஒரு சிந்தனை மரபை தமிழில் கட்டமைக்கும் முயற்சி.
அது ஒரு ஆன்மீக இலக்கிய இயக்கம் என்று சொன்னாலும் மிகையல்ல.
உள்ளடக்கத் தேர்வு, மொழிநயம், அச்சுத்தரம், வடிவமைப்பு, கருத்து ஆழம் – அனைத்திலும் ஒரு தொழில்முறை நேர்த்தி சீர்மை பதிப்பகத்தின் அடையாளம்.
இத்தகைய சிறப்பான பணியாற்றி வரும் சீர்மை பதிப்பகம் இன்று தனது ஐந்து ஆண்டு சேவைப் பயணத்தை பூர்த்தி செய்து நிற்கும் இந்த இனிய தருணத்தில், சீர்மை பதிப்பகத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களும், அல்லாஹ்வின் அருளும், பரக்கத்தும், வழிகாட்டுதலும் என்றும் தொடர வேண்டுமெனும் துவாவும்!
தமிழ் வாசக உலகிற்கு, குறிப்பாக இஸ்லாமிய சிந்தனை, சூபிய மரபு, ஆன்மீக இலக்கியம் போன்ற துறைகளில், சீர்மை” ஒரு நம்பிக்கைக்குரிய பெயர் என்று உறுதியாகச் சொல்லலாம்.
இனியும் இதுபோன்ற அருமையான நூல்களை சீர்மை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பும் வேண்டுதலும்.
சீர்மை பதிப்பகம் உருவாகி இந்த மாதத்தோடு ஐந்தாண்டுகள் நிறைவடைகிறது. அதன் சீரான பணிகள் சீராக தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்...!!
தனித்திரு! பசித்திரு! விழித்திரு! என்பார்கள். மெய்மறதியில் திழைக்காத அகப்பார்வை கொண்ட ஒவ்வொருவரும் இருக்க வேண்டிய நிலை இது தான். என்றும் அகம் விழித்திருக்க வேண்டும். அது அநாவசிய விவகாரங்களின் பக்கம் நாட்டம் கொள்ள கூடாது. எப்போதும் அறிவு பசியில் இருக்க வேண்டும். அது என்றும் உப்புசம் அடைந்துவிட கூடாது. எப்போதும் தனித்தன்மையோடு இருக்க வேண்டும். அது நம்மையும் பிறருக்கு நம்முடைய தேவையையும் இருளில் ஒளிரும் வெளிச்சம் போல தனித்துவப்படுத்தி காட்டும்.
இப்படிப்பட்ட நிலையை அடைவதற்கும், தற்காத்து கொள்வதற்கும் எவ்வளவு காலங்கள் மாறினாலும் வாசிப்பை தவிர வேறு எதுவும் பேருதவி புரிவதில்லை. அந்த அடிப்படையில் எனது தனிப்பட்ட வாசிப்பில் சீர்மை தவிர்க்க முடியாத பங்கினை பெற்றுள்ளது. அதன் உயிரோட்டம் பலதரப்பட்ட பதிப்பகங்களுக்கு மத்தியில் தனித்துவமாக திகழ்கிறது. அதன் அட்டை வடிவங்களாக இருக்கட்டும், புத்தகத்தின் தலைப்புகளாக இருக்கட்டும், சமூகத்தின் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து மொழிப்பெயர்க்கப்படும் புத்தங்களாக இருக்கட்டும் அவை அனைத்துமே அதன் தனித்துவத்தை தான் காட்டுகிறது.
உறுதியாக உங்கள் புத்தகங்கள் மீது நாங்கள் காதல் வயப்பட்டுவிட்டோம் என்பது உண்மையிலும் உண்மையே.
அல்லாஹ் உங்களது பணிகளை அங்கீகரிக்கட்டும். உங்கள் அங்கத்தினருக்கு மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தட்டும். உங்கள் அனைவரையும் அகநோய்களிலிருந்து பாதுகாக்கட்டும். பெருஞ்செயல் புரியும் கூட்டத்தில் உங்கள் பெயர் நின்று நிலவ செய்யட்டும்.
வாழ்த்துக்கள்!
சீர்மை - இவ்வார்த்தை சமகால தமிழ் வாசிப்புப் புலத்தில் தவிர்க்க முடியாத வார்த்தை. இஸ்லாமிய சிந்தனை, தத்துவம், அறிவியல், அரசியல், இலக்கியம் சார்ந்து வாசிப்பை விரிவுபடுத்த சீர்மையை தவிர்த்துவிட்டு ஒருவர் நகர முடியாது என்ற நிலையை அது அடையப்பெற்றுள்ளமை பெருமகிழ்ச்சி. இறைவனுக்கே புகழனைத்தும்.
சீர்மையின் தொடக்க காலத்திலிருந்து அதன் நூல்களில் காதல் வயப்ப்டடவன் நான்.
அதற்கு முதலே, மெய்ப்பொருள் வலைத்தளம் மூலம் ஆரம்பத்தில் அறிமுகமானார் சீர்மையின் பதிப்பாளர் சகோ. உவைஸ் அவர்கள். நளீமிய்யாவில் அடிப்படை கற்கைகளை கற்றுக்கொண்டிருந்த வேளையில் இஸ்லாமிய சிந்தனை சார்ந்து சில வாசிப்புகளை மெய்ப்பொருள் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக உருவான சீர்மையின் ஆரம்ப வெளியீட்டு நூல்களிலிருந்தே அதன் நூல்களோடு பரிச்சயமானேன். அதன் பிறகு, சகோ. உவைஸ் அவர்களுடன் நூல் பரிந்துரை முதற்கொண்டு இஸ்லாமிய சிந்தனை, அரசியல் என்று மணிக்கணக்கில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன்.
இவ்வாறு எனக்கும் சீர்மைக்குமான உறவு வலுப்பெற்று அதை ஒரு சேய்மையான உறவாக இல்லாமல் நானும் அதன் ஒரு பகுதி என்ற நிலையை உணரும் அளவுக்கு நான் அதனோடு ஒன்றித்துப் போனேன். அதன் பிறகு, நூல் பரிந்துரை முதற்கொண்டு சீர்மையின் வெளியீடுகளைப் பற்றிய நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் எத்தகைய தங்குதடையுமின்றி வெளிப்படையாக அவர்களோடு கலந்துரையாடும் நிலைக்கு நான் சென்றேன்.
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு முதற்கொண்டு வருடாந்தம் சீர்மையின் வெளியீடுகளில் எனது வாசிப்பிக்கென்று கட்டாயம் சில நூல்களை ஒதுக்கிக்கொள்வேன். சில வேளைகளில் எதை வாங்குவது எதை தவிர்ப்பது என்ற இக்கட்டான நிலைக்கும் நான் தள்ளப்பட்டுள்ளேன். காரணம், முக்கியத்துவம் கருதி சில வேளைகளில் பல நூல்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இவற்றையும் தாண்டி, என்னைப் பொருத்தவரையில் தமிழ் வாசிப்புப் புலத்தில் சீர்மை பதிப்பகம் இஸ்லாமிய சிந்தனை, அரசியல், தத்துவம், இலக்கியம் சார்ந்து இன்னுமொரு பரிமாணத்தை வழங்கி அதனை குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியை நோக்கி நகர்த்தியுள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும்.
உதாரணத்திற்கு, இலக்கியம் சார்ந்து சீர்மை பல மொழி இலக்கியங்களை - நாவல்களை தமிழிற்கு கொண்டுவந்திருக்கிறது. பல மொழி இலக்கியங்கள் பல கலாசாரங்களை, வேறுபட்ட பிரதேச மக்கள் தன்மைகளை பிரதிநிதித்தவப்படுத்துகிறது. இது மிக முக்கியமான பரிமாணமாக நோக்கப்பட் வேண்டியது.
இன்னுமொரு முக்கிய பங்காக இஸ்லாமிய சிந்தனை சார்ந்து நவீன கால அலைகுர்ஆன் விளக்கவுரை முதற்கொண்டு ஸூபித்துவம் சார்ந்து மிக முக்கியமான நூல்களை தமிழ் மொழிக்கு கொண்டு வந்திருப்பது வழமையான தமிழ்ப்புல இஸ்லாம் பற்றிய பார்வைகளை பாரியளவு வித்தியாசமாக நோக்குவதற்கு நகர்த்தும் என்பதை நாம் மறுக்க முடியாது.
மொத்தத்தில், இறை அருளால் சீர்மை மிக முக்கியமான பங்களிப்பை தமிழ் பேசும் மக்களின் சிந்தனைத் தளத்தில் மேற்கொண்டு வருகிறது. இறைவன் தொடர்ந்தும் சீர்மையின் பயணத்தை ஏற்க வேண்டும்; அதனை இன்னும் முன்னேற்றிச் செல்ல அருள் புரிய வேண்டும்!
சீர்மை பதிப்பகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதனுடன் தொடர்பு இருக்கிறது. ஆயிரம் பூக்கள் மலர வேண்டிய அவசியம் உள்ள இந்த மண்ணில் சீர்மையின் வருகையை அப்போது வரவேற்றது அவர்களின் நினைவில் உள்ளதா என்று தெரியவில்லை.
திருக்குர்ஆன் விளக்கவுரை, தமிழில் வெளிவந்த முதல் நாவல், சூஃபி இலக்கியம், முல்லா கதைகள், அரசியல், சிறுகதை, நாவல் என பன்முகத்தன்மையுடன் வலம் வரும் சீர்மையின் பணி மகத்தானது. ரஷ்ய இலக்கியமும் தென் அமெரிக்க இலக்கியமும் தமிழில் நடைபோடும் சூழலில் ஃபலஸ்தீன இலக்கியத்தையும் ஈரானிய இலக்கியத்தையும் தமிழ் உலகிற்கு கொண்டு வந்தது சிறப்பு. முஸ்லிம்களால் நடத்தப்படும் பதிப்பகங்கள் கால சூழலுக்கு ஏற்பவும் தங்களின் வசதிக்கு ஏற்பவும் தொடர்ந்து பங்களிப்பை அளித்து வருகின்றன. இத்தொடர் பயணத்தில் சீர்மை தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.
சமகால இந்திய முஸ்லிம்களின் சூழலை கருத்தில் கொண்டு நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட வேண்டும். சாமானிய மக்களும் Gen Z தலைமுறையும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்து நடை இருப்பது இன்னும் அதிக மக்களிடம் சீர்மையின் வெளியீடுகளை கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன்.
Miles to go...
உள்ளம் சீரானால் உடலும் சீராகும்... எல்லா நபிமார்களும் உள்ளத்தை சீர்படுத்துவதை முதல் நோக்கமாகக் கொண்டார்கள். அத்துடன் சமூக அநீதிக்கு எதிராகவும் பாடுபட்டர்கள்.
இஸ்லாமிய வாழ்வில் தஜ்தீத் என்ற அரபு சொல்லுக்கு புனர் நிர்மாணம் என்ற பொருள் உண்டு. எல்லா நூற்றாண்டிலும் புனர்நிர்மாணிகள் வருகை தந்து மக்களைச் சீர்திருத்தினர். அதற்கு 21 ஆம் நூற்றாண்டும் விதிவிலக்கு அல்ல.
தஜ்தீத் என்ற சொல்லுக்கு புனர் நிர்மாணிகளான தனி நபர்கள் மட்டும் குறிக்காது. மாறாக கல்விசாலைகள், பல்கலைக்கழகங்கள், அமைப்பு போன்றவற்றையும் குறிக்கும் என்ற கருத்து அறிஞர்களிடம் உண்டு. . எனவே சீர்திருத்தத்திற்கு கல்வி அவசியம். கற்பித்தல் அவசியம். அதனை மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு சமூக உருவாக்கம் அதை விட அவசியம்.
சீர்மை மக்கள் மத்தியில் சென்றடைந்து வெற்றி பெற்றதற்கு உளத்தூய்மையும் பகட்டும் பெருமையும் விரும்பாத சிலரின் உயர்ந்த எண்ணமும் காரணமாக இருக்கும் என்பது எனது முதல் பார்வை.
முஸ்லிம்களின் வரலாறு, நாகரிக, அறிவுப் பாரம்பரியத்தை சரியாக விளங்கிக் கொள்வதற்கு நீண்ட அனுபவமும் வாசிப்பும் தலை சிறந்த ஆளுமைகளின் ஞானப் புலமையையும், உலக அரசியல் போக்கும், மக்கள் பிரச்சினையும் அறிந்து இருப்பது அவசியம். எனவே அதனைச் சுவைத்து பிறருக்கும் கல்வியாக பரிமாறும் ஈகையும் எண்ணமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
சீர்மையின் நூல் வரிசையில் நான் வாங்கிய முதல் நூல் புரட்சியாளர் சயீத் குதுப் எழுதிய இஸ்லாத்தில் சமூக நீதி. அவர் எழுதிய நூல் பல வருடங்களுக்கும் பிறகு தமிழில் வெளிவந்துள்ளது. சமூக நீதிக்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற ஐயத்தை தகர்த்த நூல் அது. இவரை தவறாக சித்தரிக்கும் மக்களுக்கு மத்தியில் அவரின் சரியான பார்வையை முன்வைத்தது சிறப்பு.
இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும் நூல் எகிப்து நாட்டில் சிறந்த அறிஞர்களில் ஒருவரான முஹம்மத் அல் கஸ்ஸாலியின் நூல் வாசிக்கும் போது உள்ளம் இலகுவதை உணர முடியும்.
மௌலானா மௌதூதி, ஷேய்க் அபுல் ஹசன் அலி நத்வி, மாலிக் பத்ரி, முஸ்தஃபா அஸ்சிபாஈ , அல்லாமா முஹம்மது இக்பால், இப்னு அறபீ
ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி , ஹஸனுல் பன்னா, ஃபத்ஹீ யகன் போன்றோரின் தேர்தெடுக்கப்ட்ட நூல்களை தமிழ் உலகிற்கு வழங்கினர்.
நடுநிசி எல்லைகள், நொறுங்கிய சுதந்திரம். முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர், இஸ்லாம் குறித்து பெரியார், மீனாட்சிபுரம் பெருந்திரள் மாற்றம், பின்காலனிய நினைவேக்கம் போன்ற நூல்கள் மூலம் அரசியல் செயல்பாட்டாளர்கள் கவரும் விதத்தில் நூல் வெளியீடு தந்து திரும்பி பார்க்க வைத்தனர்.
காதலின் 40 விதிகள், ரூமியின் வாழ்வில் 100 கதைகள், முல்லா நஸ்ருதீன் கதைகள், சூபித்துவம், ரூமி குறித்து நிறைய நூல்கள் வெளிவந்தன. தத்துவார்த்த நூல்களை வாசிப்பவருக்கு சரியான செய்திகளைத் தந்தனர்.
சார்ஜில் இமாம் பேசியது என்ன?
அரசியலில் ஓரங்கபட்டப்படும் இந்திய முஸ்லிம்கள்
போன்ற நூல்கள் ஒடுக்கப்படும் முஸ்லிம் சமூகத்திற்காக உண்மைகளை பரிந்துரைக்கும் நூல்கள். இது போன்ற இன்னும் அதிகமான நூல்கள் வரவேண்டும். அதற்கு மக்கள் ஆதரவு அவசியம்.
நஜீப் மக்பூல் அரபு மொழியில் எழுதிய களவாணியும் நாய்களும்
பலஸ்தீன் நாவல் காஸாவின் திருமணங்கள் - இப்ராஹிம் நஸ்ருல்லாஹ்
டேனியல் குயின் எழுதிய இஸ்மாயில் என்ற நூல்
அஹ்மத் ஹில்மி எழுதிய ஒளிமிகு கற்பனையின் ஆழங்களில்
மீகோவும் ஐந்தாம் பொக்கிஷமும் - ஜப்பானிய நாவல்
ஆன்மாவின் படித்தரங்கள் - ஷேய்க் அப்துல் காலித் சப்ரானி
ஆஸிம் அலவியின் தலைமைத்துவம் நூல்
றழ்வா ஆஸூர் எழுதிய கிரனடா, மர்யமா நாவல்
திருமுகம் - இரானிய நாவல்
கிலாபத்தும் மன்னராட்சியும் - மௌலானா மௌதூதி
ஹமீத் அல்கர் உடைய வஹாபியம் நூல்
நஜீப் அல் கைலானி எழுதிய ஹவாஸின் வீரன் - அரபு நாவல்
டேனியல் ஹகீகத் ஜூ எழுதிய - நவீனத்துவமும், தாராளமும், இஸ்லாத்தில் பெண்ணியம் போன்ற நூல்கள்
மாலிக் பத்ரி எழுதிய உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு. இஸ்லாமும் போதை ஒழிப்பும் என்ற நூல்
வெய்யில் மனிதர்கள் - கஸ்ஸான் கனபானி - பலஸ்தீன் நாவல்
இஸ்ரேல் பற்றிய பத்து கதைகள் - இலன் பாப்பே இதுவெல்லாம் என்னைக் கவர்ந்தவை.
இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர் - 1400 பக்கங்கள் கொண்ட வரலாற்று நூலை தமிழில் கொண்டு வந்து சேர்த்தனர்.
40 நபிமொழிகள் - என்று பல நூல்களை கொண்டு வந்து அசத்தினர்
2026 ல் வெளியான நூல்கள்
-----------------------------------------------------
ஷா வலியுல்லாஹ்வின் 40 நபி மொழிகள்
கவியரசர் இமாம் ஷாபி
நக்ஷபந்தியா
அலி ஸரியத்தீயின் ஹஜ் நூல்
அன்றிருபத்தொன்றில் - மாப்பிளா கிளர்ச்சி - மலையாள நாவல்
மேற்சொன்ன நூல்கள் வாசிக்க ஆர்வத்துடன் உள்ளேன். இதை தவிர்த்த பல நூல்களும் மக்களின் கவனத்தை பெற்று உள்ளது. பல எழுத்தளார்களும் மொழிபெயர்ப்பாளர்களும் மக்களின் ஆதர்ச எழுத்தாளர்களாக தற்போது திகழ்கின்றனர். தம்பி இளம் எழுத்தாளர் ஜார்ஜ் ஜோசப் எழுதிய நாவல்கள் பலரின் கவனத்தைப் பெற்று வருகின்றது.
தலித் இலக்கியங்கள் சீர்மையில் வெளிவந்து இருக்கின்றது. மொழிபெயர்ப்பு நாவல்கள் அதிகம் வந்து இருக்கின்றது. சிந்திக்க வைக்கும் கவிதை, உள்ளூர் நாவல்கள். சிறுகதைகள் தேர்தெடுக்கப்பட்டு அதிகம் வெளிவர வேண்டும். சீர்மையில் கதை, வாழ்வியல் சார்ந்து எழுதப்படும் நூல்கள் உலக அரங்கை தட்ட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. சாளை பஷீர், அனிஷா மரைக்காயர் போன்றோரின் நல்ல நூல்களைத் தாண்டி பலரின் நூல்களும் வெளியிடப்பட வேண்டும்.
எந்த நூலும் நல்ல நூலாக மாறுவதில் நூல் செம்மையாக்கத்தில் மெனக்கெடும் திறன் சார்ந்த பதிப்பாசிரியரால் மட்டுமே சாத்தியம்.
மக்களுக்காக எழுதப்படும் நூல்களில் குறை இருந்தால் புறம் தள்ளாமல் கவனம் கொண்டு வாசித்து சரிசெய்து தரும் நிறுவனத்தை கூட விரைவில் துவங்கலாம்.
நூலின் அட்டைவடிவாக்கம் தனித்துவமாக இருப்பதில் அஸ்வத் ஸரியத்தியின் திறமை அதற்குச் சான்று. அவருக்கும் எனது பாராட்டுக்கள். பல வருடங்களுக்கு முன்பு பல சஞ்சிகைகளில் அவருடைய கைவண்ணம் முன்பே எனக்கு பரிச்சயம். அப்போது அவர் பெயர் கார்த்திக் மேகா.
சீர்மை பதிப்பகத்தில் நூல் செம்மையாக்கத்தில் ஈடுபாடு காட்டும் எல்லோருக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக ஷம்மில், பக்ருத்தீன், உவைஸ், அபுல் ஹஸன்
பல சிறந்த நூலாசிரியர்கள் காலம் சென்ற பிறகு அவர்களின் நூல்களும் மறைந்து போகும் அபாயம் உண்டு. இதனைத் தவிர்க்க சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த நூல்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் முயற்சியை செய்யலாம். தொடர்ந்து நல்ல தலைப்புகளை கொண்டு வர தொடர்ந்து எல்லோரிடமும் கருத்துக்கேட்டு அதனைப் பரிசீலிக்கலாம்.
ஜார்ஜ் ஜோசப், நாகூர் ரிஸ்வான், ஷா நவாஸ், ரமு இல்யாஸ் , போன்ற இளம் எழுத்தாளர்கள் சிறப்பாக வளர்ந்து வருவது கூடுதல் மகிழ்ச்சி.
காதலின் 40 விதிகள் என்ற நூலில் ரமீஸ் பிலாலின் உயர் தமிழ் நடை வாசிக்கவும் விளங்கவும் எனக்கு சிரமம் தான். ஷாஹுல் ஹமீத் உமரியின் எளிய நடை எல்லோரையும் கவர்ந்தது உண்மை
PMM இர்பான் போன்றோரின் சிறந்த நூல்களின் மொழிபெயர்ப்பு முயற்சியை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
உளத்தூய்மை தொடர்பாக பல நூல்கள் வெளிவர வேண்டும். அதே வேளையில் சிறைவாசிகள் தொடர்பாகவும். இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு எதிராக உண்மைத் தகவல்களும் தொடர்ந்து வெளிவர வேண்டும். அதற்கு எல்லோரின் ஆதரவும் சீர்மைக்கு தேவை தான்.
எல்லாம் பறவைகளுக்கும் வானில் பறக்க இடமுண்டு. எல்லாம் எழுத்தாளர்களும் எழுத இடமுண்டு. எல்லா பறவைகளுக்கும் சிறகுண்டு. அது போல எல்லா எழுத்தாளருக்கும் சிந்தனையும் உண்டு. அது சிறந்ததாக பட்டைத் தீட்ட வழிகாட்டுதல் அவசியம்.
தங்களின் பணிகளை வல்ல இறைவன் ஏற்று அங்கீகரிப்பானாக என்று இந்த எளியவன் பிரார்த்திக்கின்றேன். நன்றி
- அபூஷேக் முஹம்மத்
‘சீர்மை’ பதிப்பகம் அதன் பெயருக்கு ஏற்ப ‘புகழ்’ பெற்று ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. தமிழ்ச் சமூகத்திலும், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்திலும் ‘வாசிப்பு’ என்பது தொலைந்துவிட்ட ஒரு பண்பாக மாறியுள்ள சூழலில், வாசிப்பின் வழியே சமூகத்தை விழித்து எழுப்பும் பெரும்பணியை மிக நேர்த்தியாக முன்னெடுத்துவருகிறது சீர்மை பதிப்பகம்.
தமிழ்ச் சூழலில் இஸ்லாம், இலக்கியம் எனப் பரந்த வாசிப்பை முன்வைக்கும் ஒரு பதிப்பகம் இல்லாத வெற்றிடத்தை ‘சீர்மை’ நிரப்பியுள்ளது.
இலக்கியம், புதினங்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை இங்கு சமூகத்தில் உண்டு. ஆனால், சீர்மை அதை உடைத்து இலக்கியத்தின் அழகியலை, குறிப்பாக இஸ்லாமிய இலக்கியத்தின் அழகியலைப் புரியவைக்கும் பெரும் பணியை முன்னெடுத்துவருகிறது.
சீர்மை தன் வெளியீடுகள் வழியே ஸூஃபித்துவத்தின் அசல் புரிதலை வெளிக்கொண்டு வந்துள்ளது, பெரும்பாலும் ஸூஃபித்துவம் பேசும் இடத்தில் ‘அரசியல் நீக்கம்’ இருக்கும். ஆனால், மிக முக்கியமான அரசியல் பேசும் வெளியீடுகளின் வழியே அரசியல் குறித்த புரிதலையையும் தெளிவையையும் கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது சீர்மை. சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடம் இல்லை’ என்ற நூல் அதற்குப் பெரும் சான்று.
சீர்மை, முழுமையானதொரு முஃமினை உருவாக்கும் பாசறையாக விளங்குகிறது. நூல் வெளியீடு என்பதைத் தாண்டி, நூலுக்கு உரிய எல்லா ஹக்கையும் கொடுத்து, வாசகர்களிடம் அதைக் கொண்டுசேர்த்து, அதை வாழ்வியல் ஆக்கும் எல்லா முயற்சியையும் எடுப்பதில் சீர்மை தனித்து விளங்குகிறது.
பல்லாண்டு பயணிக்க ‘சீர்மை’ குழுவினருக்கு வாழ்த்துகள்! மேன்மேலும் வளரப் பிராத்தனைகள்!
சீர்மை மிக தரமான நூல்களை அழகான முறையில் வெளிக்கொண்டு வருகிறது. இன்ஷா அல்லாஹ் இது மேலும் மேலும் இதைவிட சிறப்பாகத் தொடருமென்ற நம்பிக்கை உள்ளது.
- அன்புடன் நாகூர் ரூமி
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இஸ்லாமிய இயக்கத்தின் பாதையைச் செப்பனிடும் முக்கியப் பணியை சீர்மை செய்துவருகிறது.
இஸ்லாமிய இயக்கம் எதிர்கொண்டுவரும் கருத்தியல் சவால்களுக்கு, சீர்மையின் வெளியீடுகள் உறுதியான அறிவுசார் துணையாக நிற்கின்றன.
இஸ்லாமிய இயக்கம் முன்வைக்க விரும்பும் சித்தாந்தங்களுக்கு அடிப்படைகளை உருவாக்குவதிலும், அவற்றுக்கு ஆதரவான சமூக, களச் சூழலை அமைப்பதிலும் சீர்மையின் இலக்கியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சீர்மையால் மொழிபெயர்க்கப்பட்ட ‘நடுநிசி எல்லைகள்’ என்ற நூல், இஸ்லாம் பேசும் உம்மாவின் நியாயங்களை முன்வைக்கக் கூடிய விவாதத் தளத்தை மேலும் விரிவுபடுத்துகிறது.
சீர்மை வெளியீட்டில் வெளிவந்த ‘பின்காலனிய நினைவேக்கம்’ என்னும் நூல், ஃகிலாஃபத் அரசமைப்பு முறையை இன்றைய அமைப்புமுறைக்கு ஒரு மாற்றாகச் சிந்திக்க முடியும் என்ற எண்ணத்திற்கான அறிவுசார் வெளிவாயிலைத் திறக்கிறது.
அதேபோல், ‘இஸ்லாம் பற்றி பெரியார்’ எனும் நூல், இஸ்லாமிய இயக்கத்தின் அழைப்புப் பணிக்கு உதவும் ஒரு பயனுள்ள கருவியாக விளங்குகிறது.
எனவே, சீர்மை என்பது ஒரு பதிப்பகம் மட்டுமல்ல; அது இஸ்லாமிய இயக்கத்தின் உயிரோட்டமான ஓர் உறுப்பு!
‘சீர்மை’ என்றால் என்ன? என நம்ம ஜெமினி AIயிடம் கேட்டேன்.
‘தேர்ந்த வாசிப்பு’, ‘சமூக மாற்றம்’, ‘கலை நேர்த்தி’ எனச் சுருக்கமாகக் கூறியது.
பெரும்பாலான பதிப்பகங்கள் சந்தை மதிப்பிற்கு முன்னுரிமை தந்து, அங்கு செல்லுபடியாகும் தலைப்புகளை மட்டுமே அச்சடித்து விற்பனை செய்துவருகின்றன. இதற்குக் கணிசமான மூலதனமும், உழைப்பும், தொடர் சிலவுகளும் தேவைப்படும். இதனைச் சரிக்கட்டக் கூடிய வணிகச் சூத்திரகளுடன் பயணித்தால் மட்டுமே பதிப்பகத் துறையில் நிலைபெற முடியும் என்ற எதார்த்தம் அவற்றுக்குத் தெரியும்.
இந்தச் சூழலில், சீர்மை பதிப்பகம் தனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொண்டு, அதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
‘அரசியல் சார்ந்து இயங்குதல்’ என்ற கொள்கையின் அடிப்படையில், அது தனது பதிப்பகப் பயணத்தை தொடங்கி, அதில் தொடர்ந்து இயங்கிவருகிறது. குறிப்பாக, தலித்தியம், பெரியாரியம், பெண்ணியம், மார்க்சியம், இடதுசாரி அரசியல் எனப் பிறர் தொடத் தயங்கும் கருத்தியல்களில் துணிவுடன் பயணித்துவருகிறது. வணிகச் சமரசமற்ற முற்போக்குப் பிரதிகளே இவர்களின் இலக்காக உள்ளன.
இந்த உயரிய இலக்கினை நோக்கிய பயணத்தை, வெறும் மலிவுப் பதிப்பக முயற்சியாக இல்லாமல், உயரிய தரத்துடன் மேற்கொண்டுவருகிறார்கள். அதிலும், இந்த அறிவுசார் தளத்தை அழகியல் தன்மையோடு அலங்கரித்துவருகிறார்கள்.
ஆம் நண்பர்களே! நமது சமகால அரசியல் சூழலுக்குத் தேவையான சர்வதேச எழுத்துக்களை, தேடிக் கண்டுபிடித்து, துல்லியமாக மொழிபெயர்த்து, அப்பிரதிகளை அழகாக வடிவமைப்பு செய்து, அதற்குரிய எழுத்துருவுடன், அட்டகாசமான அட்டைப்பட ஓவியம் கொண்டு அலங்கரித்து வெளியிட்டுவருகிறார்கள். இதனால், வாசிப்பு ஆர்வமிக்க வாசகர்கள் இவர்களின் வெளியீடுகளை ஆர்வமுடன் வாங்கிப் படித்துவிடுகிறார்கள். எனவே, குறைபட்ச வணிக உத்திரவாதம் கிடைத்துவிடுகிறது. இந்தக் குறைந்தபட்ச வணிக உத்திரவாதத்தின் துணைகொண்டு ஒரு கூர்மையான சமூக மாற்றத்தை உருவாக்கிவருகிறார்கள்.
உலகமயம், முதலாளித்துவ வணிகமயம், மதவாதம், சூழலியல் சீர்கேடு, தொடர் ஆயுதச் சத்தம் என அமைதியிழந்து தவித்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப் பந்தினை தாங்கிப் பிடிக்கும் கருத்தியல் போராட்டத்தில், இதுபோன்ற திவ்யமான பதிப்பக முயற்சிகளை ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுத்து தொடர்ந்து பயணித்துவருகிறார்ரகள். அதில் வெற்றியும் கண்டுவருகிறார்கள்.
வாழ்த்தி மகிழும்,
🌈 வண்ணப்பலகை
ஷரீப். அஸ்கர் அலி
(20, ஜனவரி, 2026)
சீர்மை பதிப்பகம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதெனப் பதிப்பாளர் உவைஸ் தெரிவித்தார். தொடக்கத்திலிருந்து உடன் பயணித்து வருபவன் என்ற முறையில் மகிழ்ச்சியாய் இருந்தது. பதிப்பகத்திற்கு எத்தனையோ கனவுத் திட்டங்கள் இருப்பதும் அறிவேன். இந்த ஆண்டு அவற்றுள் முதன்மையான ஒன்று நிறைவேற இருக்கிறது. நண்பர்கள் பலரும் இணைந்து, உறுதுணையாய் நின்று இழுக்கும் தேர் எனச் சீர்மையைக் குறிப்பிடலாம். குறிப்பாக, நம்பகமான இளையோர் எழுத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருவது சீர்மையின் தனித்துவங்களில் ஒன்று. வரும் நாள்களில் மேன்மேலும் வளர்ச்சி பெற்று, விரிந்த தளத்தில் சீர்மை பயணிக்கும்.
பதிப்பு நேர்மையும், ஒரு பிரதியைப் பல்முனையிலிருந்து அணுகி வெளியீடு குறித்த முடிவெடுக்கக்கூடிய திறனும் வாய்த்த பதிப்பாளரை மனதார வாழ்த்துகிறேன்.
‘சீர்மை’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த ஐந்து வருடங்களுக்குள் பதிப்புத் துறையில் அது பெரும் பாய்ச்சலொன்றை நிகழ்த்தியிருக்கிறது.
175 தலைப்புகளில் பல்வேறு துறைகளில் நூல்களைப் பதிப்பித்திருக்கிறது. இதுவரை தமிழில் தொடப்படாத பக்கங்களை அது தொட்டிருக்கிறது.
மொழிபெயபர்ப்பே அதன் ஆதார சுருதி. பெருமளவு அறபிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும், குறிப்பிடத்தக்களவு இந்திய மொழிகளிலிருந்தும் அது மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது.
‘சீர்மை’யின் உருவாக்கம் முதலே நான் அதனுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். இன்னும் சரியாகச் சொன்னால், சகோதரர் உவைஸ் அஹ்மதுடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பைப் பேணிவருகிறேன்.
அவரது அயராத உழைப்பும் திட்டமிடலும் மதிநுட்பமும் இந்த வளர்ச்சியின் முதுகெலும்பாக இருந்திருக்கின்றன.
அவருடன் கைகோர்த்து உழைத்து வரும் நண்பர்களான சம்மிலும், ஷரீஅத்தியும், பஷீரும், நதீமும், ரியாஸும் இன்னும் பலரும் சீர்மையின் வளர்ச்சிக்குப் பெருமளவு பங்காற்றியிருக்கிறார்கள்.
அனைவரும் வாழ்த்துக்குரியவர்கள்.
‘சீர்மை’க்கென்று மிக ஆரம்பத்திலிருந்து மொழிபெயர்த்து வருபவர்களில் நானும் ஒருவன். (https://www.facebook.com/share/p/17uhffPbyK/)
சமயம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் அறபு-ஆங்கில மொழிகளிலிருந்து நான் தமிழாக்கம் செய்த பல நூல்களை ‘சீர்மை’ முதல் பதிப்பாகவும் இரண்டாம் பதிப்பாகவும் வெளியிட்டிருக்கிறது; இன்னும் வெளியிடவும் உள்ளது.
‘சீர்மை’ ஆரம்பிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமியச் சிந்தனை சார்ந்த ஏராளமான நூல்களை மொழிபெயர்த்திருந்தாலும், ஆழமான இஸ்லாமிய வாசிப்புத் தளத்தில் மட்டுமே நான் அறியப்பட்டிருந்தேன்.
‘சீர்மை’க்கென்று நாவல்களையும் இலக்கிய நூல்களையும் மொழிபெயர்க்கத் தொடங்கிய பிறகே சற்றும் எதிர்பாராத தூரங்களிலிருந்தெல்லாம் என் மேல் வெளிச்சம் விழத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ்நிலைப்பட்ட பல வாசகர்களுக்கு நான் அறிமுகமானேன். அதில் இறைவன் ஏதோவொரு நன்மையை நாடியிருப்பான் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு.
‘சீர்மை’ இன்னும் வளரப் பிரார்த்திக்கிறேன். விரல்களில் எழுத முடியாதளவு நடுக்கம் தோன்றும் வரை அதற்கு ஒத்துழைப்பேன். குறிப்பாக, மொழிபெயர்ப்பில் இன்னும் சில புதிய சோதனை முயற்சிகளில் இறங்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் சீர்மை அரங்கைப் பார்வையிட்டேன். அவர்களோடு அலைபேசியில் ஏற்கனவே உரையாடியுள்ளதால் அதைப் புதிய சந்திப்பாக உணரவில்லை. அவர்கள் அறபு, பாரசீக மொழிகளில் வெளியான நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுகிறார்கள். அத்துடன் அவர்கள் வெளியிடும் ஸூஃபி நாவல்களும் இலக்கிய வாசகர்களைப் பெரிதும் கவரும். ‘ஜின்களின் ஆசான்’ நாவல் எனக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நாவலின் ஒரு காட்சி என் கனவிலும் வந்தது. முஹம்மது அல்கஸ்ஸாலி எழுதி ஷாஹுல் ஹமீது உமரீ மொழியாக்கம் செய்த ‘கருப்பொருளின் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை’ இரு தொகுதிகளையும் கடந்த றமளானில் படித்தேன். கல்வியியல் தரத்துடன் அமைந்த பாடநூல்களென இத்தொகுதிகளைச் சொல்லலாம். ஐந்தாண்டுகளை நிறைவுசெய்துள்ள சீர்மை பதிப்பகத்துக்கும், பதிப்பாளர் சகோதரர் உவைஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் பணி தொடரவும், மேன்மேலும் வளரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இறுதி வேதத்தின் முதல் கட்டளையாக ‘இக்றஃ’ என்ற மகத்தான தெய்வீகக் கட்டளையைச் சுமந்து ஹிறா குகையிலே நபிகளாரைச் சந்தித்தார் வானவர் ஜிப்ரீல். அறவொழுக்கத்துடன் அறிவொழுக்கத்தையும் பேணிப் பாதுகாக்கின்ற பண்பாட்டை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டல்கள் அந்த முதல் ஐந்து வசனங்களிலும் பட்டவர்த்தனமாகப் பட்டுத் தெறிக்கின்றன.
தனக்கு வாசிக்கத் தெரியாது/முடியாது என்று அழுத்தமாகக் கூறியும் அன்னாரை அரவணைத்து, ஆரத் தழுவி, வாசிக்கக் கற்றுக் கொடுத்தார் வானவர்.
இந்த முதல் நிகழ்வு எதிர்பார்க்கும் அறிவுசார் பணியானது, உலக முடியும்வரை தொடர வேண்டும் என்ற செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மட்டுமல்ல நிகழ்காலத்திலும் முன்கொண்டுசெல்லப்பட்டு எதிர்காலம் வரையும் தொடர வேண்டும்.
இந்தப் பின்புலத்தில்தான் வாசிப்பதற்கு என்னென்ன அடித்தளங்கள், பின்புலங்கள் அமைய வேண்டுமோ அவை அனைத்தையும் கனகச்சிதமாக, நிரப்பமாக அமைத்து ஐந்தாண்டு காலமாகப் பயணிக்கிறது சீர்மை. சீர்மையின் அனைத்துப் பணிகளிலும் சீர்மை இருக்கின்றது; சிறப்பும் இருக்கின்றது. சிந்திக்க, சீர்தூக்கிப் பார்க்க பலவும் இருக்கின்றன.
அதன் புத்தக உருவாக்கம், மொழிபெயர்ப்பு, பதிப்பு, வெளியீடு போன்றவை வியாபார நோக்கத்திலும் பொருளியல் நோக்கத்திலும் மாத்திரம் அமையாமல், சமூகத்தின் எழுச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஊன்றுகோலாய் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சீர்மையின் ஒவ்வொரு நூலின் முகப்புப் படங்களும், வடிவமைப்பும், புத்தகத் தலைப்புகளும் இதற்கு அழியாச் சான்றுகள்.
தமிழ்நாட்டில் தொடங்கிய அதே காலப்பகுதியில், சீர்மை இலங்கை வாசகர்கள் மத்தியிலும் தமிழ் பேசும் வாசகர்கள் மத்தியிலும் காட்டுத் தீ போல் வேகமாகப் பரவியது.
புத்தகத்தின் தலைப்பையும் உள்ளடக்கத்தையும் பார்க்கும் நிலையிலிருந்து வாசகர்களை விடுவித்து, பதிப்பகத்தைப் பார்க்கும் வழமையை அது மரபாக்கிவிட்டிருக்கிறது.
Don't judge the book by its cover என்பதற்கு மறுதலையாகத்தான் சீர்மை இயங்குகிறது. ஆள் பாதி - ஆடை பாதி என்பதுபோல சீர்மை நூல்களில் முன்னட்டை பாதி, உள்ளடக்கம் பாதி என்று அமைந்திருப்பது சிறப்பெனலாம்.
வாசிப்புக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு பல்வேறு கட்டங்கள் உள்ளன. வாசிப்பு எழுமாறாகவோ தற்செயலாகவோ சடுதியாகவோ தோன்றாது. ஒரே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ஆயுள் முழுக்க வாசிக்க முடியாது. விதவிதமான நூல்கள் ரசனைக்கேற்பவும்; வயது, தேவை, காலம், அவசியம், துறை ஆகியவற்றைச் சார்ந்து பலவிதமான நூல்களும் கொண்டு வரப்பட வேண்டும்.
வாசிப்பதற்குப் புத்தகங்கள் தேவை. எழுத்தாளர்கள் புத்தகங்களை உருவாக்க வேண்டும்; தரமான நூல்களை மொழிபெயர்க்க வேண்டும்; பதிப்பிக்க வேண்டும்; அச்சிட வேண்டும்; விநியோகிக்க வேண்டும்; வெளியிட வேண்டும்; பரவலாக்கம் செய்ய வேண்டும்; சந்தைப்படுத்த வேண்டும்; விளம்பரப்படுத்த வேண்டும்; வருடாந்த புத்தகக் கண்காட்சிகள் வேண்டும்; நூல் பற்றிய கலந்துரையாடல்கள், விமர்சனங்கள், கருத்துரைகள், மதிப்புரைகள், அறிமுகங்கள் போன்றவையும் இடம்பெற வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தாற்போல் கடந்த ஐந்து வருடங்களாக சீர்மை முன்னெடுக்கின்ற பணி வாசகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
சீர்மையின் இந்தச் சாதனைகளின் பின்னால் வெளிப்படையாகச் சில காரணங்கள் இருக்க வேண்டும். சீர்மையைத் தன் உயிர்மூச்சாய்க் கொண்டுசெல்லும் உவைஸ் அவர்களின் இயல்பான துடிப்பு, துடினம், வேட்கை, வேகம், விவேகம், நூலார்வம், கலை ரசனை போன்றவை அவதானிக்கத் தக்க விடயங்கள்.
நூல் உள்ளடக்கத்தில் தரம் இருப்பது போலவே, கண்களைக் கவரத்தக்க வகையில் முன்னட்டை வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு, எழுத்துரு போன்றவையும் வாசகர்களை ஈர்த்துவிடும். அதிலும் சீர்மை கனகாத்திரமான முன்னெடுப்புகளைச் செய்துவருவதை அவதானிக்கலாம்.
அடுத்து சுய நூலாக்கம், மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்காக சீர்மை தேர்வுசெய்யும் நூல், நூலாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், நூல் வகைமைகள் போன்றவையும் மெச்சத்தக்கன. குறிப்பாக, மொழிபெயர்ப்புத் துறை ஜாம்பவானாகக் கருதப்படக்கூடிய கலாநிதி பீ.எம்.எம். இர்ஃபான், ஷாஹ் உமரீ, ரமீஸ் பிலாலி போன்றவர்களின் அர்ப்பணிப்பும் சீர்மையின் அறப்பணிக்கு அழியாத சான்றுகள்; நிலையான சாட்சிகள்.
இதில் இன்னொரு வகையில் தமிழுக்குப் பங்களிக்கும் வரலாற்றுச் சிறப்பும் நிகழ்கிறது. இலக்கியப் பாலமாக இரு வெவ்வேறு நாடுகளின் எழுத்தாளர்களைத் தமிழுக்கு கொண்டுவருவதோடு, அவர்களுடைய நூல்களை வாசகர்களுக்கு வழங்கும் பணியும் செவ்வனே இடம்பெறுகிறது.
காலம் கடுகதி வேகத்தில் மாற்றமுற்றாலும்கூட, பாரம்பரிய முறையில் புத்தக்க கலாச்சாரத்தை நிலைநாட்டும் ஒரு நடவடிக்கையாகவும் இது இருக்கிறது.
ஆன்லைன் டிஜிட்டல் வாசிப்பு எவ்வளவு வீரியத்தோடு மேம்பட்டாலும், ஒரு புத்தகத்தின் வன்பிரதியைக் கையில் எடுத்து, தொட்டு, ரசித்துப் பரவசமாய் உணர்ந்து வாசிக்கும் அனுபவத்துக்கு வேறு எதுவும் ஈடாகாது, இணையாகாது. இந்தப் பணி தொடர்வதற்கும் சீர்மை சிறப்பாய்க் களமமைக்கிறது.
இலக்கியம், அரசியல், இஸ்லாம், கோட்பாடு, ஸூஃபித்துவம், வரலாறு, அறிவியல், மெய்யியல், சினிமா, வாழ்வியல் எனப் பல்வேறு வகைமைகளில் 175 தலைப்புகளையும் தாண்டி நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
ஒவ்வொரு நூலின் தரத்திலும் தேர்விலும் அதீத கவனம் எடுத்து அர்ப்பணிப்புடன் பிரசுரிக்கப் பல்வேறு நுட்பங்களையும் உத்திகளையும் கடைப்பிடித்துவருவதால் சீர்மைக்கு —குறிப்பாக இலங்கையிலும் — பல வாசகர்கள், விநியோகஸ்தர்கள் உருவாகியிருக்கின்றனர்.
வாசிப்பே முதல் வணக்கம் என்பதை வாயால் மாத்திரம் உரைகளாகக் கொட்டித் தீர்ப்பதைவிட, வாசிப்பதற்கான சிறந்த களமமைத்துக் கொடுத்திருக்கும் சீர்மையும் அதன் வாசிப்பு ரசனையும் கலையுணர்வுசார்ந்த வகையில் அமைந்திருப்பது பாராட்டத் தக்கது.
சீர்மை ஐந்தாண்டுக் காலத்தில் இத்தனை புத்தகங்களைக் கையளிப்பதென்பது புத்தகக் கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் பங்களிக்கும் மகத்தான வரலாற்றுப் பணி என்றுதான் சொல்ல வேண்டும்.
வாழ்க சீர்மை! அகல விரியட்டும் அதன் பரவலாக்கம்!
சீர்மை குறுகிய காலத்திலேயே பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
நூல்கள் கவனம் பெறுவது ஒரு வகை — அது ஆசிரியரைப் பொறுத்தது. ஆனால், ஒரு பதிப்பகம் கவனம் பெறுவதென்பது, அதன் கூட்டு உழைப்பைப் பொறுத்தது. அந்த வகையில், இளைஞர்கள் ஒன்றுகூடிச் சுதந்திரமாக உழைப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் தைரியத்தையும் தருகிறது.
உண்மையாக நூல்கள், அட்டை வடிவமைப்பு, ஸ்டால், எல்லாமே Classஆக உள்ளது.
உண்மையிலேயே சீர்மை அபாரமான உழைப்பு.
குர்ஆனில் இரண்டே இடங்களில் இளைஞர் என்ற சொல் வருகிறதாக கேள்விப்பட்டுள்ளேன்.
ஒன்று இப்ராஹீம் நபி பற்றி குறிப்பிடும் போதும், மற்றொன்றும் குகைவாசிகள் பற்றி குறிப்பிடும் போதும்.
இளைஞர்களால் மட்டுமே அறிவுலகத்தில், அரசியலில், ஆன்மீகத்தில் புத்தெழுச்சியை உண்டாக்க முடியும் என்பதை இளமையும், உழைப்பும் நிரூபித்துக்கொண்டேயிருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட இப்னு அரபியின் நூல்களை தமிழில் கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் வந்திருக்கவில்லை.
சூபியிஸம் என்று தனி பகுதியை ஏற்படுத்தி அற்புதமான ஆன்மீக நூல்களை சீர்மை வெளியிடுவதானது தமிழ்நாட்டில் இன்னும் இஸ்லாமிய மெய்ஞ்ஞான தேடல் உயிர்ப்போடு இருப்பதையும், ஆன்மீக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துகிறது.
வாழ்த்துக்கள் சகோ.