சீர்மை பற்றி

2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீர்மை, தரமான தமிழ் நூல்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் இயங்கும் பதிப்பகமும், அறிவார்வம் கொண்ட வாசகர்களுக்கான பண்பாட்டுத் தளமும் ஆகும். ஆண்டுதோறும் சுமார் 25 புதிய தலைப்புகளை கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்துவருகிறோம். ஒரு நூலின் கருத்து வலிமை, அதன் மொழித் தரம், காலத்தின் தேவையுடன் கொண்டிருக்கும் தொடர்பு, வாசகர் சமூகத்திற்கு அது வழங்கக்கூடிய புதிய பார்வை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே எங்கள் வெளியீடுகள் அமைகின்றன.

சீர்மைக்கு, பதிப்பித்தல் என்பது புத்தகங்களை அச்சிடுவதுடன் முடிவுறும் பணி அல்ல. வாசிப்பின் வழியாகக் கேள்விகளை எழுப்பவும், சிந்தனைகளைப் பகிரவும், சமூகத்தையும் மனித அனுபவத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்கும் அறிவுச் செயற்பாடு அது. இந்த நோக்கில், நூல்கள், வாசிப்பு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள், மின்னிதழ் ஆகியவற்றை இணைக்கும் ஓர் உயிர்ப்புள்ள வாசிப்புச் சூழலை சீர்மை உருவாக்கிவருகிறது.

சீர்மை வெளியீடுகள்: பல்துறை வாசிப்புக்கான களம்

தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், மொழிபெயர்ப்பு, வரலாறு, அரசியல், சமூகச் சிந்தனை, வாழ்க்கை வரலாறு, அறிவியல், மொழியியல், வாழ்வியல், மெய்யியல், ஸூஃபித்துவம், ஆன்மிகம், மருத்துவம் எனப் பல துறைகளில் சீர்மை நூல்களை வெளியிட்டுவருகிறது. தீவிரமான ஆய்வுநூல்கள் முதல் பொதுவாசகர் அணுகக்கூடிய நூல்கள் வரை, சமகாலப் படைப்புகள் முதல் மறுபதிப்புக்குரிய முக்கிய நூல்கள் வரை எங்கள் வெளியீட்டுப் பரப்பு விரிகிறது.

நிகழ்காலச் சமூக மற்றும் அரசியல் சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவும் நூல்கள், மறைக்கப்பட்ட வரலாறுகளையும் நுண்வரலாறுகளையும் அறிமுகப்படுத்தும் ஆக்கங்கள், மனித வாழ்வின் உளவியல் மற்றும் பண்பாட்டு அடுக்குகளைத் திறக்கும் இலக்கியப் படைப்புகள், சிந்தனை மரபுகளுடன் உரையாடும் மொழிபெயர்ப்புகள்—இவை அனைத்தும் சீர்மையின் பதிப்புத் தேர்வில் முக்கிய இடம்பெறுகின்றன.

உலக இலக்கியம்: உலகின் பல குரல்கள் தமிழில்

சீர்மையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று உலக இலக்கியப் படைப்புகளைத் தமிழில் கொண்டுவரும் முயற்சி. மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழிமாற்றம் அல்ல; வேறொரு நிலப்பரப்பின் வரலாறு, பண்பாடு, மனித மனம், வாழ்வனுபவம் ஆகியவற்றோடு தமிழ் வாசகர் நிகழ்த்தும் சந்திப்பு. அந்தச் சந்திப்பை நம்பகத்தன்மையுடனும் மொழி நயத்துடனும் உருவாக்குவதில் சீர்மை அக்கறை கொள்கிறது.

நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நஜீப் மஹ்ஃபூழின் களவாணியும் நாய்களும், ஃபலஸ்தீன எழுத்தாளர் கஸ்ஸான் கனஃபானீயின் வெய்யில் மனிதர்கள், துருக்கி எழுத்தாளர் எலிஃப் ஷஃபாக்கின் காதலின் நாற்பது விதிகள், சூடானிய எழுத்தாளர் தையிப் ஸாலிஹின் வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு , ஈரானிய எழுத்தாளர் முஸ்தஃபா மஸ்தூரின் படைப்புகள், ஜப்பானிய எழுத்தாளர் கென்கி கவமுராவின் பூனைகளில்லா உலகம் போன்றவற்றுடன் சீர்மை வெளியிட்டுவரும் ஸூஃபி நாவல் வரிசையும் தமிழில் புதிய வாசிப்புக்கான வாசல்களைத் திறக்கின்றன.

அறபி, பாரசீகம் உள்ளிட்ட பிற உலக மொழிகளின் முக்கியமான குரல்களை சீர்மை தமிழுக்கு அறிமுகப்படுத்திவருகிறது. இவ்வெளியீடுகள் உலக இலக்கியத்தை ‘வெளிநாட்டு இலக்கியம்’ என்ற தொலைவில் வைத்துப் பார்ப்பதில்லை; மனிதனின் பொதுவான துயரங்கள், கனவுகள், எதிர்ப்புகள், அன்பு, நீதிக்கான தேடல் ஆகியவற்றின் நெருக்கத்தை உணர்த்துகின்றன.

நூலாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், புதிய குரல்கள்

சீர்மையின் பயணத்தில் நூலாசிரியர்களும் மொழிபெயர்ப்பாளர்களும்தான் மையமானவர்கள். தமிழில் எழுதும் புதிய மற்றும் நிலைபெற்ற படைப்பாளர்களின் குரல்களுக்கு இடமளிப்பதோடு, உலகின் முக்கியமான எழுத்தாளர்கள், அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், சமூக ஆய்வாளர்கள், கவிஞர்கள், ஆன்மிகச் சிந்தனையாளர்கள் ஆகியோரின் படைப்புகளையும் தமிழ் வாசகர்களிடம் சீர்மை கொண்டுவந்து சேர்க்கிறது.

நூலாசிரியரின் தனித்துவமான குரலையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதிப்பது, மொழிபெயர்ப்பாளரின் உழைப்பை உரிய முறையில் முன்னிறுத்துவது, நூலின் உள்ளடக்கத்துக்கேற்ப சரியான பதிப்பு வடிவத்தை உருவாக்குவது ஆகியவை சீர்மையின் பதிப்புக் கண்ணோட்டத்தின் அடிப்படைகள். புதிய சிந்தனைகளைக் கொண்ட ஆக்கங்களுக்கு இடமளிப்பதும், காலத்தால் மறக்கப்பட்ட முக்கியமான நூல்களை மறுபதிப்புகளின் வழி மீட்டுக் கொண்டுவருவதும் எங்களின் தொடர்ச்சியான முயற்சிகள்.

மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம்: வாசிப்பிலிருந்து உரையாடலுக்கு

சீர்மை ஒருங்கிணைக்கும் ‘மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம்’, உண்மையில் சீர்மைக்கு முன்பே தொடங்கப்பட்டது. 2019 முதல் அது தொடர் அறுபடாமல் மாதாந்திரக் கூட்டங்களை நடத்திவருகிறது. தனிமையான வாசிப்பை ஒரு சமூக அனுபவமாக மாற்றும் முயற்சி அது. ஒரு நூலை வாசித்து முடிப்பதோடு அதன் பயணம் முடிவதில்லை; அது எழுப்பும் கேள்விகள், திறக்கும் பார்வைகள், உருவாக்கும் மாறுபட்ட வாசிப்புகள் ஆகியவற்றில்தான் அதன் வாழ்வு தொடர்கிறது.

நூல் அறிமுகங்கள், விமர்சன உரைகள், கலந்துரையாடல்கள், வாசகர் கருத்துப் பகிர்வுகள் வழியாக மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம் சிந்தனையைச் செழுமையாக்கிக்கொள்ள இடமளிக்கிறது. எழுத்தாளர்கள், வாசகர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் சந்திக்கும் தளமாக அது அமைகிறது. கருத்து வேறுபாடுகளை மதித்து, ஆரோக்கியமான உரையாடலை வளர்த்து, வாசிப்பை வாழ்க்கையின் தொடர்ச்சியான பயிற்சியாக மாற்றுவதே இவ்வாசிப்பு வட்டத்தின் நோக்கம்.

சீர்மை மின்னிதழ்

சீர்மையின் பதிப்புப் பயணத்தை டிஜிட்டல் வெளியில் விரிவாக்குவது சீர்மை மின்னிதழ். இலக்கியம், சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், நூல் மதிப்புரை, ஆய்வு, பண்பாடு, அரசியல், சமூகம், திரைப்படம், பயணம் உள்ளிட்ட பல்வேறு வகைமைகளில் புதிய உள்ளடக்கங்களை இம்மின்னிதழ் தொடர்ந்து வழங்குகிறது.

புதிய எழுத்தாளர்களுக்கும் அனுபவம் மிக்க படைப்பாளிகளுக்கும் இடமளிப்பதன் மூலம், சீர்மை மின்னிதழ் உயிர்ப்புள்ள தமிழ் எழுத்துலக உரையாடலை வளர்க்கிறது. படைப்பை அதன் மொழி, வடிவம், கருத்து, சமூகப் பின்னணி ஆகியவற்றோடு வாசிக்கத் தூண்டும் களமாகவும், சமகாலத் தமிழ்ச் சிந்தனையைப் பதிவுசெய்யும் டிஜிட்டல் காப்பகமாகவும் அது செயற்படுகிறது.

சீர்மையுடன் இணைந்திருங்கள்

சீர்மை என்பது நூல்களை வாங்குவதற்கான இடம் மட்டுமல்ல; வாசிப்பை நேசிக்கும் அனைவரும் இணையும் ஓர் இடம். ஒரு புத்தகம் நமக்குள் உருவாக்கும் மாற்றம், பலருடன் பகிரப்படும்போது சமூக உரையாடலாக வளர்கிறது. அந்த உரையாடலுக்கான புத்தகங்களையும், வாசிப்புக்கான சூழலையும், புதிய எழுத்துகளுக்கான வெளிகளையும் உருவாக்குவதே சீர்மையின் தொடர் முயற்சி.

சீர்மை வெளியீடுகளை அறிய, புதிய தமிழ் நூல்களையும் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகளையும் கண்டறிய, மெய்ப்பொருள் வாசிப்பு வட்டத்தில் பங்கேற்க, சீர்மை மின்னிதழில் வெளிவரும் படைப்புகளை வாசிக்க எங்களுடன் இணைந்திருங்கள். வாசிப்பின் வழியாக மேலும் தெளிவான, மனிதநேயம் கூடிய, சீர்மையான உலகை உருவாக்குவோம்.